Published : 24 Dec 2016 10:33 AM
Last Updated : 24 Dec 2016 10:33 AM
தன் மருத்துவ சேவைகளுக்காகவும் நிபுணத்துவத்துக்காகவும் பெரும் புகழ் பெற்றவர் அமரர் டாக்டர் ரங்கபாஷ்யம் (1936 2013). இந்தியாவிலேயே குடலியல் துறைக்கு அரசால் நியமிக்கப்பட்ட முதல் மருத்துவப் பேராசிரியர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. அது மட்டுமல்லாமல் குடலியல் அறுவை சிகிச்சைக்கென்று (சர்ஜிகல் கேஸ்ட்ரோஎண்டெராலஜி) தனித்துறையைத் தொடங்கியவரும் இவர்தான். இப்படிப் பல்வேறு சிறப்புகள் கொண்டவர் டாக்டர் ரங்கபாஷ்யம். குடல் தொடர்பான பல்வேறு புற்றுநோய் சிகிச்சைகளுக்கு அவர் அளித்த பங்களிப்பு பல்வேறு நிபுணர்களிடம் செல்வாக்கு செலுத்தியிருக்கிறது.
டாக்டர் ரங்கபாஷ்யம் மருத்துவத் துறையில் நுழைவதற்குக் காரணம் யார் தெரியுமா? ரமண மகரிஷிதான். சிறு வயதில் தன் தந்தையுடன் ரமணரைக் காணச் சென்றிருக்கிறார் ரங்கபாஷ்யம். பிறருக்குச் சேவை செய்யும் மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும்படி அப்போது ரமணர் அவருக்குச் சொல்லியிருக்கிறார்.
தன்னிடம் வரும் நோயாளிகளைப் பணம் கறக்கும் எந்திரங்களாகப் பார்க்கும் பல்வேறு மருத்துவர்களுக்கு மத்தியில் நோயாளிகளைப் பரிவுடன் பார்த்தவர் ரங்கபாஷ்யம். பிறரால் கைவிடப்பட்ட ஏழை நோயாளிகளுக்கு அவரே முன்வந்து சிகிச்சை அளித்து அவர்களைக் காப்பாற்றியிருக்கிறார். தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் கவுரவ டாக்டராக அவர் பணியாற்றியபோது மாடு முட்டிக் குடல் சரிந்துபோன 10 வயது சிறுமியைத் தூக்கிவருகிறார்கள். ரத்தம் நிறைய வெளியேறிவிட்டது; பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லாத நிலை. அந்தச் சிறுமியின் தாய் அப்படியே டாக்டர் ரங்கபாஷ்யம் காலில் விழுந்து குமுறுகிறார். டாக்டர் ரங்கபாஷ்யம் அங்கே மருத்துவ அற்புதம் நிகழ்த்துகிறார்! சிறுமி பிழைத்துவிடுகிறாள். உடல் நிலை தேறிய பிறகு அந்தச் ‘சிறுமி சுங்கிடிப் பாவாடை கட்டிக்கொண்டு இரட்டை ஜடைகளோடு’ பழக்கூடையை எடுத்துக்கொண்டு டாக்டர் ரங்கபாஷ்யத்தின் கால்களில் கண்ணீருடன் விழுந்து நன்றி தெரிவிக்கிறாள். தஞ்சாவூரின் சுற்றுப்புறக் கிராமங்கள் எல்லாம் அப்போது ரங்கபாஷ்யத்தின் மருத்துவ அற்புதத்தைப் பாராட்டிக்கொண்டிருந்தார்கள்.
தன் வீடு, குடும்பம், பிள்ளைகள் எல்லாவற்றையும் விட மருத்துவ சேவையையே அவர் முதன்மையாகக் கொண்டிருந்தார். டாக்டர் ரங்கபாஷ்யத்தின் மகள் அவரிடம் ஒருமுறை, “ஏன் அப்பா பல மருத்துவர்கள் கைவிட்ட நோயாளிகளுக்கு நீங்கள் அறுவை சிகிச்சையைச் செய்கிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு டாக்டர் ரங்கபாஷ்யம், “கண்ணீருடன் நிற்கும் உறவினர்களைப் பார்ப்பேன். முயல்வோம், வெற்றி பெற்றால் அவர்களின் கண்ணீர் மறையும், அவர்கள் சிந்தும் புன்னகை தரும் மனநிறைவை உணர்ந்தால் மட்டுமே புரியும்” என்று பதிலளித்திருக்கிறார்.
அவரது தன்னலமற்ற சேவைக்குத் தொடர்ச்சி யாக அங்கீகாரங்கள் கிடைத்தன. அந்நாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கடராமனுக்கு கவுரவ அறுவைச் சிகிச்சை மருத்துவராக டாக்டர் ரங்கபாஷ்யம் நியமிக்கப்பட்டார். பத்மபூஷண், டாக்டர் பி.சி. ராய் தேசிய விருது போன்ற விருதுகள் அவரைத் தேடி வந்தன. எடின்பரோவில் உள்ள ‘ராயல் சொசைட்டி ஆஃப் மெடிசின்’ அமைப்பின் ‘மதிப்புமிக்கோர் பெயர் பொறிக்கப்பட்ட சுவ’ரில் (‘வால் ஆஃப் ஹானர்’) டாக்டர் ரங்கபாஷ்யத்தின் பெயரும் பொறிக்கப்பட்டிருப்பது அவரது திறமையும் சேவையும் உலகெங்கும் மதிக்கப்பட்டன என்பதன் அடையாளம்.
நூலாசிரியர் சாந்தகுமாரி சிவகடாட்சம் டாக்டர் ரங்கபாஷ்யத்தின் உற்றார், உறவினர்கள், நண்பர் கள், பிரபலங்கள் போன்றோரிடமும் டாக்டரி டம் சிகிச்சை பெற்றவர்கள், அவருடன் பணிபுரிந்த வர்கள் போன்றோரிடமும் பேசி, ஆய்வுகளை மேற்கொண்டு இந்த வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியிருக்கிறார். டாக்டர் ரங்க பாஷ்யத்தின் வாழ்க்கை நிகழ்வுகள், அவரது சிறப்பு கள் போன்றவற்றை இந்த நூலில் நன்கு அறிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக, தற்போதைய மருத்துவர்கள் இந்த நூலைப் படிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT