Published : 27 Dec 2016 10:32 AM
Last Updated : 27 Dec 2016 10:32 AM
நாம் யார் என்பதை நமது செயல் களே தீர்மானிக்கின்றன. சிறி யதோ, பெரியதோ எப்படியிருப் பினும் ஒரு செயலின் பின்னுள்ள எண் ணம் முக்கியமானது. நற்செயல்கள் புரி வதற்கு நல்லெண்ணங்களே முதற்படி.
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் நமக்கு தெரியும். ஆனால், நல்ல எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளவும் கடை பிடிக்கவும் என்ன வழிமுறைகள் இருக்கின்றன? அதில் எத்தனை பேர் அக்கறை காட்டுகிறார்கள்?
நம் பிள்ளைகளிடம் நாம் சுயநலத்தை மட்டுமே அறிமுகம் செய்கிறோம். அடுத்தவர் என்பவரை எதிரியாகவே அடையாளம் காட்டுகிறோம். நல்ல எண்ணங்கள் மனதில் படிய வேண்டும் என்பதற்காக முந்தைய தலைமுறை பெற்றோர்கள், ஒரே விஷயத்தை பலமுறை சொல்லிக்கொண்டே இருப் பார்கள். அது மனதில் ஆழமாக பதிந்துவிடும்.
அடுத்தவருக்கு இடையூறு செய் கிறோம் என்று தெரிந்திருந்தபோதும் அதைப் பற்றி துளிக் கூட குற்றவுணர்ச் சிக் கொள்ளாத இளம்தலைமுறை உரு வாகி வருவது ஆபத்தானது. எதையும் நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றல் இல்லாத தலைமுறை உருவாகி வருகிறது.
கம்ப ராமாயணத்தில் ஆயிரம் பாடல் களை மனதில் இருந்து சொல்லக்கூடி யவர்கள் அன்று இருந்தார்கள். திருக் குறள், சிலப்பதிகாரம் முழுமையாக அறிந்தவர்கள். ஷேக்ஸ்பியரின் முழு நாட கத்தையும் நினைவில் வைத்திருந்து எடுத்துச் சொல்லும் திறன்கொண்டவர் கள் பலர் இருந்தார்கள்.
இன்று நாம் கணிணியை அதிகம் சார்ந்து இயங்குவதால் நினைவாற்றலை இழந்து வருகிறோம். இப்படியே போனால் அடுத்த தலைமுறைக்கு தனது தந்தை, தாயின் பெயரைத் தவிர வேறு எதுவுமே நினைவில் நிற்காது. கவிதை படித்தல் என்பது நினைவைக் காப்பாற்றும் வழி என்கிறார் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் மரியோ வர்கஸ் லோசா.
பல ஆண்டுகளுக்கு முன்பாக ஜெர்மானியச் சிறுகதை ஒன்றை வாசித்தேன். அதில் ஒரு அப்பாவும் மகனும் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு விருந்துக்குப் போகிறார்கள்.
விருந்துக்கு முன்பாக அவர்களுக்குத் தேநீர் வழங்கப்படுகிறது. அப்பா கையில் எடுப்பதற்கு முன்பு தேநீர் கோப்பை தவறி கிழே விழுந்து உடைந்துவிடுகிறது. சத்தம் கேட்டு வெளியே வந்த நண்பர், ‘‘அழகான சீனக் கோப்பை இது. எப்படி உடைந்தது?’’ என ஆதங்கமாகக் கேட் கிறார்
‘‘எனது கை தவறி கீழே விழுந்து உடைந்துவிட்டது’’ என அப்பா வருத்த மான குரலில் சொல்லவே, நண்பர் உடைந்த பீங்கான்களை அள்ளிக் கொண்டு போனார். இதைக் கண்ட மகன் அப்பாவிடம் கேட்டான்:
‘‘உங்கள் கை கோப்பையில்படவே இல்லையே. பின்பு ஏன் நீங்கள் செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்டீர்கள்?’’
‘‘உண்மைதான்! தேநீர் கோப்பை யைக் கொண்டுவந்து வைத்தது நண்பரின் மகள். அவள் கவனமாக மேஜை மீது அதை வைக்கவில்லை. ஆகவே தவறி விழுந்துவிட்டது. இந்த உண்மையைச் சொன்னால் நண்பர் ஏற்றுக்கொள்வாரா? நிச்சயம் என் மீது சந்தேகப்படவே செய்வார். அதற்குப் பதிலாகச் செய்யாத குற்றத்தை ஏற்றுக் கொண்டுவிடுவதே சரி என நினைத் தேன். ஒருவேளை இந்த உண்மைக்கு நீதான் சாட்சி என விளக்கி சொல்லி யிருந்தால் அவர் மகளைக் கோபித்துக் கொண்டிருப்பார். அதன்பிறகு அவரது மகளுக்கு என்னைப் பிடிக்காமல் போய்விடும். மெல்ல எங்கள் நட்பில் விரிசல் ஏற்பட்டுவிடும். உறவுகள் உடை படாமல் காப்பாற்ற இப்படிச் சிறு பொய் கள் தேவைப்படவே செய்கின்றன!’’ என்றார்.
அப்பாவின் முப்பது ஆண்டுகால அனுபவம் அவரை இந்த முடிவு எடுக் கச் செய்கிறது. வாழ்க்கை நமக்குக் கற்றுத்தரும் பாடம் இதுபோன்றது தானே!
இதற்கு மாறாகச் சிலர் தங்களின் சுயநலத்துக்காகக் குடும்ப உறவு களைச் சிதைப்பதுடன் மற்றவர் களின் சந்தோஷத்தையும் கெடுத்துவிடு கிறார்கள். உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது எளிது. காப்பாற்றுவது எளி தில்லை. விட்டுக்கொடுத்தலும், புரிந்து கொள்ளுதலும் அரவணைத்துப்போவ தும் அவசியமானது.
ஒரு காலத்தில் ஆமைகள் அரண் மனையில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டன. அப்படி ஒரு ஆமை மன்னரின் செல்லமாக விளங்கியது. அந்த அரண்மனையில் விநோதமான முரசு ஒன்றிருந்தது. அதை நான்கு முறை ஒலித்தால் தேவையான உணவும் தங்க நாணயங்களும் வெளிப்படும். இதற்குப் பதிலாக எட்டுமுறை ஒலித்தால் அதில் இருந்து ராட்ச மனிதர்கள் வெளிப்பட்டுத் துவம்சம் பண்ணிவிடுவார்கள்.
இந்த முரசை எப்படியாவது தன தாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஆமை ஆசைப்பட்டது. அதற்காக ராணியை அடிக்கடி சந்தித்து அவளைப் புகழ்ந்து பேசியது. வானளாவ பாராட் டியது. இதனால் ராணி மயங்கிப்போய் ‘‘உனக்கு என்ன பரிசு வேண்டும்… கேள்!’’ என்றாள்.
‘‘எனக்கு மாய முரசு வேண்டும்!’’ என்றது ஆமை.
மகாராணி வேறு வழியில்லாமல் மன்னருக்குத் தெரியாமல் மாய முரசை ஆமைக்குப் பரிசாகக் கொண்டுவந்து கொடுத்தாள்.
ஆமை அதைக் கண்டவுடன் பேராசைக் கொண்டு, நான்கு முறை அடிப்பதற்குப் பதிலாகப் பதினாறு முறை அடித்தது. அவ்வளவுதான். ராட்சச மிருகங்களும், மனிதர்களும் அதில் இருந்து வெளிப்பட்டு ஆமையைக் கொல்வதற்காகத் துரத்தினார்கள்.
கண்ணில் பட்ட வேறு ஆமைகளை எல்லாம் கொன்று குவித்தார்கள். இந்த ராட்சச மனிதர்களிடம் இருந்து தப்பிப் பிழைக்கவே மன்னரின் ஆமை தண்ணீ ருக்குள் போய் ஒளிந்துகொண்டது. வெளியே வரவேயில்லை.
அன்று முதல்தான் ஆமைகள் தண் ணீருக்குள் வாழத் தொடங்கின. இப் போதும் தன்னைக் கொல்வதற்காக ராட்சச மனிதர்கள் வெளியே இருக் கிறார்களா எனப் பார்ப்பதற்குத்தான் ஆமை தண்ணீருக்கு மேலாக வந்து போகிறது என்கிறது அந்தக் கதை.
நைஜீரியா பழங்குடி மக்கள் சொல் லும் இந்தக் கதையில் தனக்குத் தேவையில்லாத ஒன்றை அடைய முயன்ற ஆமை, முடிவில் உயிர் பயத்தில் அலைகிறது. மனிதர்களும் இப்படித்தான், பேராசையால் ஏதாவது ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டு உயிர் தப்ப ஒளிந்து அலைகிறார்கள்.
ஆயிரம் நற்செயல்கள் நம்மைச் சுற்றி நடந்தாலும், எதையும் நாம் பின்பற்று வதில்லை. ஆனால், ஒரேயொரு மோசடி வேலை நடந்தாலும் அதை நாமும் செய்து பார்த்தால் என்னவென்று யோசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். நல்லதை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்க வேண்டியுள்ளது. கெட்டது தானே ஒட்டிக்கொண்டுவிடுகிறது.
பச்சிலைகள் உடலை நலப்படுத்து வது போலவே கதைகள் மனிதர்களின் அகத்தை நலப்படுத்துகின்றன. கதை கேட்பதும், சொல்வதும் வெறும் செய லில்லை. பரஸ்பரம் உற்சாகம் கொள் ளவும், தைரியம் தரவும், உலகைப் புரிந்து கொள்ளவும் உதவும் வழிகாட்டுதலாகும். அதனால்தான் உலகில் இத்தனை லட்சம் கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. கதை சொல்லிகள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள்.
- கதைகள் பேசும்… | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT