Published : 24 Dec 2022 06:30 AM
Last Updated : 24 Dec 2022 06:30 AM
பெங்களூரு: கன்னட எழுத்தாளர் நேமிசந்த்ரா,ஹிட்லர் ஆட்சியின் வன்முறை குறித்தும், அஹிம்சையின் முக்கி யத்துவம் குறித்தும் ‘யாத்வஷேம்' என்ற நாவலை கடந்த 1995-ம்ஆண்டு எழுதினார். பரவலாககவனத்தை பெற்ற இந்த நாவலைஎழுத்தாளர் நல்லதம்பி தமிழில்மொழிபெயர்த்தார். ஹீப்ரு மொழியில் ‘நினைவு சின்னம்' என்றபொருளை தரும் ‘யாத்வஷேம்' நூலை, எதிர் வெளியீடு கடந்த2020-ம் ஆண்டு தமிழில் வெளியிட்டது.
இந்த நூலுக்காக 2022-ம் ஆண்டின் சிறந்த மொழிப்பெயர்ப்பாள ருக்கான ‘சாகித்ய அகாடமி' விருது எழுத்தாளர் கே.நல்லதம்பிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூ ருவில் வசிக்கும் எழுத்தாளர் நல்லதம்பி ‘இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது:
கர்நாடக மாநிலம் மைசூருவில்நான் பிறந்து வளர்ந்தேன். எனது பெற்றோர் பணி நிமித்தமாக திண்டுக்கல் மாவட்டம் அழகாபுரியில் இருந்து இங்கு குடியேறினார்கள். மைசூரு பள்ளியில் தமிழ் வழியில் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கன்னட வழியில்தான் பள்ளிப்படிப்பை முடித்தேன். நாங்கள் வாழ்ந்த பகுதியில் இருந்த பெரியவர்கள், குழந்தைகள் தமிழ் கற்க வேண்டும்என முடிவெடுத்து கும்பகோணத்தில் இருந்து தமிழாசிரியர் ஒருவரை அழைத்து வந்தனர். அவரிடம்வீட்டிலே தமிழை எழுத படிக்ககற்றுக்கொண்டோம்.
எனக்கு இளம்வயதிலே இலக்கிய வாசிப்பில் ஆர்வம் அதிகமாக இருந்தது. தமிழ், கன்னட நூல்களைதொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்தேன். நான் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணியாற்றினாலும் எனக்கு இலக்கியம், ஓவியம், புகைப்படக் கலை ஆகியவற்றின் மீதே ஆர்வம் அதிகமாக இருந்தது.
ஆந்திர பிரதேச புகைப்பட கலைஞர்கள் சங்கத் தலைவராகஇருந்தேன். சர்வதேச அளவிலான விருதுகளை வாங்கி னேன். ஓய்வுபெற்ற பின்னர் முழு நேரமாகஇலக்கிய பணிக்கு திரும்பிவிட்டேன். 2013-ம் ஆண்டு லங்கேஷின் கன்னட கவிதைகளை ‘மொட்டு விரியும் சத்தம்' என்ற பெயரில் தமிழுக்கு மொழிபெயர்த்தேன். இதை தொடர்ந்து ‘கோஷிஸ் கவிதைகள்'என்ற பெயரில் கன்னடத்தில் எனது சொந்த கவிதை நூலை வெளியிட்டேன்.
கன்னடத்தில் இருந்து ஸ்ரீனிவாச வைத்யாவின் ‘ஓடை', விவேக் ஷான்பாக்கின் ‘காச்சர் கோச்சர்', வசுதேந்த்ராவின் ‘மோகனசாமி' உட்பட 20 நூல்களை தமிழுக்கு மொழி பெயர்த்திருக்கிறேன். தமிழில் பெருமாள் முருகனின் ‘மாதொரு பாகன்', ‘பூக்குழி', ‘பூனாச்சி' ஆகிய நாவல்களையும், சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளிய மரத்தின் கதை' நாவலையும் சேர்த்து 10 படைப்புகளை கன்னடத்திற்கு மொழி பெயர்த்திருக்கிறேன்.தற்போது கல்கியின் ‘பொன்னியின்செல்வன்'நாவலை கன்னடத்தில் மொழி பெயர்த்து வருகிறேன்.
எனது பணியை அங்கீகரிக்கும் வகையில் சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது உற்சாகமாக இருக்கிறது. தமிழுக்கும் கன்னடத்துக்கும் இணைப்பு பாலமாக இருக்கும் வகையில் இன்னும் நிறைய நூல்களை மொழிபெயர்க்க திட்டமிட்டுள்ளேன். எனது பணிகளுக்கு எப்போதும் ஆதரவாகஇருக்கும் அன்பு மனைவி மல்லிகாவுக்கு சாகித்ய அகாடமி விருதை சமர்ப்பணம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு நல்லதம்பி தெரி வித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT