Published : 18 Dec 2016 01:16 PM
Last Updated : 18 Dec 2016 01:16 PM
வாழ்க்கையின் மீது நம்பிக்கையற்றும், வாழ்க்கை தந்த கசப்புகளாலும் ஒருவர் அடைந்த வெறுமையால் இன்னொருவரைக் கொல்ல முடியுமா?
முடியும் என்கிறது ‘இன் கோல்ட் ப்ளட்’ எனும் ஆங்கில நாவல். 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் ஹோல்காம்ப் எனும் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டார்கள். அந்தக் கொலைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ட்ரூமன் கபோட் எழுதியதுதான் இந்த நாவல்.
நாவலாக வருவதற்கு முன், இது ‘தி நியூயார்க்கர்’ பத்திரிகையில் 1965-ம் ஆண்டு நான்கு பாகங்கள் கொண்ட தொடராக வெளியானது. பின்னர் ரேண்டம் ஹவுஸ் பதிப்பகத்தால் 1966-ம் ஆண்டு புத்தகமாக வெளியிடப்பட்டது.
நாவலின் சிறப்பம்சம் என்னவென்றால், அந்தக் கொலைகளைச் செய்த இளைஞர்கள் ரிச்சர்ட் டிக் ஹிக்காக், பெர்ரி ஸ்மித் ஆகியோரின் வாழ்க்கையை மிக ஆழமாக கபோட் ஆராய்ந்திருப்பதுதான். இரண்டு பேருமே வேறு வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்களுக்கு ஏற்படுகிற பிரச்சினை ஒன்றுதான். தத்தமது அடையாளத்தை இழப்பதுதான் அது!
தங்கள் குடும்பத்தில் தங்களுக்கு நேர்ந்த கசப்புகளால் காயமடைந்தவர்கள் அவர்கள். வீட்டை விட்டு வெளியேறியவர்கள். இருவருமே தங்களின் திறன்களை நிரூபிக்கத் தேவையான வாய்ப்புகள் கிடைக்கப் பெறாதவர்கள். பெண்களால் போஷிக்கப்பட்டவர்கள். குற்றம் புரிந்தவர்கள். சிறை சென்றவர்கள்.
இப்படியானவர்கள் எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் கொல்வது ஆச்சர்யப்படத்தக்க விஷய மல்ல. ‘ஆளுமைச் சிதைவு’ உள்ள யாரும் ஒரு கட்டத்தில் அந்த இளைஞர்களின் நிலைக்குத்தான் தள்ளப்படுவார்கள். அவர்களைச் சிறையில் வைத்துத் தண்டிப்பதைவிட, மனநல மருத்துவமனை யில் சேர்த்து சிகிச் சைக்கு உட்படுத்த வேண் டும். ஆனால், நாம் ஏற்படுத்தியிருக்கும் சட் டங்கள் அதற்கு ஏற்றவை அல்ல, என்கிறார் கபோட். இப்படிச் சொல்வதன் வாயிலாக, சமூகத்தையும் அவர் இந்தக் குற்றத்தின் பின்னணியில் கொண்டுவருகிறார்.
சட்டங்கள் பற்றிப் பேசுகிற இந்த நாவல், மரண தண்டனை குறித்தும் பேசுகிறது. நாவலின் ஓரிடத்தில் ரிச்சர்ட் டிக் ஹிக்காக் இப்படிச் சொல்வான்: “மரண தண்டனை என்பது ஒரு பழிவாங்கல்தான். நான் தூக்கிலிடப்படாத வரை, அந்தப் பழிவாங்கல் தேவை என்றுதான் நானும் சொல்வேன்”. இன்னொரு பக்கம், பெர்ரி ஸ்மித் இப்படிச் சொல்வான்: “நான் செய்த குற்றத்துக்காக மன்னிப்புக் கேட்பது முறையாகாது. அது அர்த்தமற்றது. ஆனாலும் நான் மன்னிப்புக் கேட்கிறேன்”.
மரண தண்டனை குறித்து அதிகளவில் உரை யாடல்கள் நடைபெறும் இந்தக் காலகட்டத்தில், நாம் மேற்கண்ட இரண்டு பேரின் நிலைகளிலிருந்தும் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT