Published : 20 Dec 2016 09:37 AM
Last Updated : 20 Dec 2016 09:37 AM
நம்மில் பலர் கற்பனையிலேதான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். எதிர்காலத்தில் கிடைக்கப்போகிற பணம், அதைக் கொண்டு வாங்கப் போகிற கார், வீடு, வசதிகளைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதிகாரத்தைக் கைப்பற்றி ஆளப் போவதாக தங்களுக்குத் தானே பேசிக் கொள்கிறார்கள்.
ஆசைப்படுவது வேறு. பேராசைப் படுவது வேறு. ஆசைப்படுவதை அடைவது எளிதில்லை. உறுதியா கப் போராட வேண்டும். விடாப்பிடி யாக முன்னேற வேண்டும். உற்ற துணையும் நல்யோசனைகளும் வழி காட்டவேண்டும். ஆனால், வெறும் கற்பனையில் திளைப்பதற்கு இவை எதுவும் தேவையில்லை.
இன்றைக்கு செங்கல்பட்டு பக்கம் அரை கிரவுண்ட் வாங்கிப் போட்டால் 2050-ல் நிச்சயம் அது 50 கோடி போகும் என்று பேசிக்கொண்டு இருக்கும் பலரை நான் அறிவேன். கையில் பணம் வைத்திருப்பவர்கள் இப்படியான யோசனைகளில் ஈடுபடுவது இல்லை. வெறும் ஆட்கள்தான் ஆயிரம் யோசனை வைத்திருக்கிறார்கள். தேடித் தேடி அறிவுரை சொல்கிறார்கள்.
குழந்தை பிறந்தவுடனே அது படித்து பெரியவனாகி, அமெரிக்கா போய் சம்பாதித்து அனுப்புகிற பணத்தில் எங்கே வீடு வாங்குவது என்பதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இதை எதிர்கால கனவு என்று சொல்ல முடியாது. அசட்டு கற்பனை என்று வேண்டுமானால் சொல்லலாம்.
சினிமாவிலும், அரசியலிலும் தன் னைப் பற்றி மிகையான எண்ணம் கொண்ட மனிதர்கள் நிறைய இருக்கிறார் கள். அவர்களை நம்புகிறவர்களும் அதிகம் இருக்கிறார்கள். அவர்கள் பேசிக் கொள்வதைக் கேட் டால் வேடிக்கையாக இருக்கும். நிஜத்தை ஏன் புரிந்துகொள்ள மறுக் கிறார்கள்?
ஸ்பெயின் நாட்டில் ஒரு கதை சொல்கிறார்கள். ஒரு சேவல் தண்ணீரில் தன் முகத்தை பார்த்தது. தனக்கு அழ கான ஒரு செங்கொண்டை இருப்பதை கண்டதும், அது உற்சாகத்துடன் சொன் னது: ‘‘நான்தான் இனிமேல் இந்தத் தேசத்தின் புதிய மன்னர்!’’
அப்படி தன்னை அது நினைத்துக் கொண்டவுடன் அதற்கு ஏற்பட்ட உற்சாகம், அந்தச் சேவலை உரத்து கூவச் செய்தது. ‘இனி, தன்னுடைய வேலை தலைநகருக்குப் போய், முடி சூடிக்கொள்ள வேண்டியதுதான்’ என்று அந்தச் சேவல் நினைத்துக்கொண்டது.
மறுநாள் அது தன்னை அலங்கரித்துக் கொண்டு தலைநகரை நோக்கிப் புறப்பட்டது. போகிற வழியில் ஒரு கோழி அந்தச் சேவலிடம் ‘‘எங்கே போகிறாய்? நானும் உன்னுடன் வரலாமா?’’ எனக் கேட்டது.
அதற்கு சேவல், ‘‘நான் புதிய மன்னராக முடி சூடிக்கொள்ளப்போகிறேன். அழகி யான நீதான் இனிமேல் ராணி. வா… நாம் சேர்ந்தே இருவரும் பயணம் செய்வோம்!’’ என்றது.
அவை இரண்டும் கம்பீரமாக நடந்து சென்றுகொண்டு இருந்தன. அப்போது அந்த வழியில் இருந்த எலிகளும், அணில்களும் அவற்றைப் பார்த்து ‘‘புது ராஜா… வாழ்க வாழ்க!’’ என வாழ்த்தொலி செய்தன.
வழியில் ஒரு முயல் அவற்றைப் பார்த்து ‘‘எங்கே போகிறீர்கள்… நானும் உங்களுடன் வரலாமா?’’ எனக் கேட்டது.
‘‘நான் தேசத்தின் புதிய மன்னராக பதவியேற்க போகிறேன். இவள் என் ராணி!’’ என்றது சேவல்.
அதைக் கேட்ட முயல் வியந்து போய், ‘‘எனக்கு ஒரு மந்திரி பதவி கிடைக்குமா?!’’ எனக் கேட்டது.
உடனே சேவல், ‘‘உன்னைப் பார்த்தால் படித்த முயலைப் போல தெரிகிறது. இன்று முதல் நீதான் என் பிரதான அமைச்சர்!’’ என்றது.
அவர்கள் மூவரும் தலைநகரை நோக்கி நடந்தார்கள். அப்போது ஒரு வான்கோழி அவற்றிடம் ‘‘எங்கே போகிறீர்கள் மூவரும்?’’ என விசாரித் தது. சேவல் உண்மையைச் சொன்னதும், ‘‘நானும் கூட வரலாமா?’’ எனக் கேட்டது. உடனே சேவல், வான்கோழியை தன்னு டைய தேசத்தின் ‘அரண்மனை நாட்டியக் காரி’யாக நியமித்தது.
சேவலும் கோழியும் முயலும் வான் கோழியும் தலைநகருக்குள் நுழைந்தன. பதவியேற்கும் முன்பாக தேவாலயத் துக்குப் போய் வணங்க வேண்டும் என முடிவு செய்தது சேவல். அதன்படியே சேவலும் கூட்டாளிகளும் அங்கிருந்த ஒரு பழைய தேவலாயத்துக்குள் சென் றன. அங்கிருந்த மதகுரு சேவலையும் கூட்டாளிகளையும் பார்த்த வுடன் வேகமாக கதவை அடைத்தான். தனக்கு விசேஷ மரியாதை செய்யப் போகிறான் என்று சேவல் கம்பீரமாக நின்றது.
மதகுருவோ தன் பணியாளர்களை அழைத்து சொன்னான்: ‘‘இவற்றை பிடித்து அடித்துக் கொல்லுங்கள். விருந்து சாப்பிட்டு நிறைய நாட்களாகி விட்டது!’’
மறு நிமிடம் பணியாளர்கள் வான் கோழியையும் முயலையும் கோழியை யும் வளைத்துப் பிடித்துக் கொன்றார்கள். பயந்து போன சேவல் ‘‘நான் இந்த நாட்டின் ராஜா…. ராஜா!’’ என்று கத்தியது.
‘‘அப்படி வேற நினைப்பு இருக்கா உனக்கு?!’’ என்று தடியால் ஓங்கி அடித்தான் பணியாளன்.
உருப்படாத ஆசையால் தான் கெட் டதுமில்லாமல், உடன் இருந்தவர்களை யும் சாகடித்தது சேவல். இந்தச் சேவலைப் போல நடந்துகொள்பவர்கள் எங்கும் இருக்கிறார்கள். அவர்கள் தனக்கென ஒரு துதிபாடும் கூட்டத்தையும் சேர்த்துக் கொண்டுவிடுகிறார்கள். உண்மையை ஒருபோதும் அவர்கள் ஏற்றுக்கொள்வதே இல்லை.
திறமையுள்ளவர்கள் தாழ்வுணர்ச்சி யால் அவதிப்பட்டுக் கொண்டு குறுகிய வட்டத்துக்குள் உழன்று கொண்டிருப் பதும்; ஒன்றுமில்லாதவர்கள் ஆர்ப்பாட்ட மாக நடந்துகொள்வதும் இன்றைய உலகின் இயல்பாகவே இருக்கிறது.
சீனாவில் நான்காம் நூற்றாண்டில் ஹுவா என்றொரு கவிஞன் இருந் தான். அவன் குப்பைமேட்டில் திரியும் சிறுகுருவி ஒன்றைப் பற்றி வியந்து கவிதை எழுதியிருக்கிறான். அக்கவிதையில் கிளிகள் அழகாக இருக்கின்றன. பழக்கப்படுத்தினால் மனிதர்களைப் போல பேசுகின்றன. அதனாலே அதை கூண்டில் அடைத்து சிறைப்படுத்திவிடுகிறார்கள்.
கழுகு வலிமையானது. கூர்மையான கண்களைக் கொண்டது. அதன் சிறகடிப்பில் வானமே அதிரக்கூடியது. ஆனால், அதையும் வேட்டைக்காரர்கள் வேட்டையாடிவிடுகிறார்கள். வெண் ணிறப் புறாக்கள் அமைதியானவை. ஆனால், அவை பலி கொடுக்கப் பட்டுவிடுகின்றன.
அழகில்லாத, எவருக்கும் விருப்பமில் லாத இந்த குப்பைக் குருவியோ சுதந்திரமாக இருக்கிறது. வேட்டைக் காரனைப் பற்றியோ, கூண்டை பற் றியோ எந்த பயமும் அதற்குக் கிடையாது.
சிறிய உயிர்களை உலகம் கண்டு கொள்வதில்லை. அவையும் உலகை கண்டு பயப்படுவதில்லை. தன் சுதந் திரத்தில் தன் விருப்பப்படி வாழ் கின்றன என்று முடிகிறது அந்தக் கவிதை.
எளிய மனிதர்கள் கஷ்டத்தில் உழலு கிறார்கள். சிரமப்படுகிறார்கள். ஆனால், சேவலைப் போல வீண்கற்பனையில் திளைப்பதில்லை. பேராசைக் கொள் வதில்லை. பாமர மக்களை விட படித்தவர்களிடம்தான் பேராசை அதி கமிருக்கிறது. இதைத்தான் படிப்பு உருவாக்கியிருக்கிறது என்றால் அதற் காக வேதனைப்படவே வேண்டியிருக் கிறது!
- கதைகள் பேசும்… | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT