Published : 08 Nov 2016 08:42 AM
Last Updated : 08 Nov 2016 08:42 AM
பியரெத் ஃப்லுசியோ எழுதிய ‘சின்னச் சின்ன வாக்கியங்கள்’ என்ற பிரெஞ்சு நாவலை தமிழில் ‘க்ரியா’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் தன்னுடைய ஊரில் வசிக்கும் மனிதர்கள் எல்லோருமே கண்ணுக்குத்தெரியாத கண்ணாடித் தாள் ஒன்றை கவசம் போல அணிந்துகொண்டு வாழ்கிறார்கள் என ஒரு பெண் நினைக்கிறாள். இந்தக் கண்ணாடித் தாளைக் கிழித்துக்கொண்டு அவர்களால் வெளியே வர முடியாது. நிஜ உலகை, நேரடியாக ஸ்பரிசிக்க எவரும் தயாராகயில்லை என வருத்தப்படுகிறாள். வாசிக்க வேண்டிய முக்கியமான நாவல் இது.
உறவுகள் பொய்த்துப் போன காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது நாவலைப் படித்து முடித்தபோது எனக்குத் தோன்றியது. எல்லா உறவுகளிலும் பொய் கலந்துவிட்டது. நல்லுறவு நீடிப்பதுபோல நாம் பொய்யாக நடித்துக் கொண்டிருக்கிறோம். நமது போலித்தனம்தான் கண்ணாடித் தாளாக உருமாறி நம்மைச் சுற்றியிருக் கிறது. அதில் இருந்து நாம் விடுபடுவது எளிதானது இல்லை.
‘யாரை நம்புவது?’ என்கிற கேள்வி, வயது வேறுபாடின்றி அனைவராலும் கேட்கப்படுகிறது. ‘எவரையுமே நம்ப முடிய வில்லை!’ என்கிற பதில் அனைவராலும் சொல்லப்படுகிறது. ‘இது நம்மையும் சேர்த்துத்தான் சொல்லப்படுகிறது’ என, ஏன் ஒருவருமே குற்றவுணர்ச்சி கொள்வதில்லை?
காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னார்: ‘‘பெருகிவரும் குற்றங்களுக்கு மூலக் காரணம் துரோகம். காதலிக்குக் காதலன் செய்யும் துரோகம்; மனைவிக்குக் கணவன் செய்யும் துரோகம்; கணவனுக்கு மனைவி செய்யும் துரோகம்; பெற்றோருக்குப் பிள்ளைகள் செய்யும் துரோகம்; சகஊழியர்களுக்கு அதிகாரிகள் செய்யும் துரோகம்; மக்களுக்கு அரசியல்வாதிகள் செய்யும் துரோகம்; நோயாளிக்கு மருத்துவர் செய்யும் துரோகம்; தேசத்துக்கு தீவிரவாதிகள் செய்யும் துரோகம்… என துரோகத்தின் பட்டியல் முடிவற்றது. வயது வேறுபாடின்றி அனைவரும் துரோகத்தைச் சந்திக்கிறார்கள். வேதனைப்படுகிறார்கள்!’’
அவர் சொன்னதைக் கேட்டு சிரித்தபடியே சொன்னேன்: ‘‘கனவில் கூட துரோகம் இழைக்க மாட்டார் என நட்பின் உறுதியைப் பற்றி கூறுவார்கள். இன்று அதெல்லாம் வெறும் கற்பனை. நம்பிக்கை துரோகம் செய்வது இயல்பாகிவிட்டிருக்கிறது. மனசாட்சி உள்ளவர்கள்தான் துன்பப்படுகிறார்கள். துரோகத்தின் வரலாறு மிக நெடியது. பல்லாயிரம் முறை நிகழ்த்தப்பட்டபோதும் மனிதர்களால் துரோகத்தை விலக்க முடியவேயில்லை. பர்மீய மக்கள் ‘வவ்வால்கள் ஏன் இடிந்த கட்டிடங்களில் வசிக்கிறது?’ என்பதற்கு ஒரு கதை சொல்கிறார்கள். அதுவும் துரோகத்தைப் பற்றியே பேசுகிறது’’ என்றேன்.
‘‘என்ன கதை..?’’ என ஆர்வத்துடன் கேட்டார் காவல்துறை அதிகாரி.
‘‘வயதோ, படிப்போ, வேலையோ எதுவும் கதை கேட்கும் ஆர்வத்தைத் தடுத்துவிடுவதில்லைதானே. அவருக்காக அந்த பர்மீயக் கதையைச் சொன்னேன்:
ஒரு காட்டில் வாழும் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் திடீரென ஒருநாள் காடு யாருக்குச் சொந்தம் என்கிற பிரச்சினை உருவானது. ‘காலம் காலமாக மரங்களில் நாங்கள் கூடுகட்டி வாழ்கிறோம். அதனால் காடு எங்களுடையது’ என்றன பறவைகள் .
விலங்குகளோ ‘இது நாங்கள் பிறந்த இடம். காட்டினை நம்பியே நாங்கள் வாழ்கிறோம். ஆகவே காடு எங்களுடையது!’ என்றன. இதனால் சண்டை உருவானது. ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன.
பறவைகள் தங்கள் பக்கம் சண்டையிட வருமாறு வவ்வாலை அழைத்தன. வவ்வாலுக்கு அதில் விருப்பமில்லை. அது சுகமாக பழங்களைத் தின்றபடியே ‘எனக்கு கண் வலி. இல்லாவிட்டால் நிச்சயம் உங்களுக்காக சண்டைபோட வருவேன்’ என்றது. ‘நன்றி நண்பனே..!’ என பறவைகள் விடைபெற்றன.
சண்டையில் விலங்குகள் ஜெயிப்பது போன்ற சூழல் உருவானது. ஒருவேளை விலங்குகள் ஜெயித்துவிட்டால் பறவைகளைக் காட்டைவிட்டு வெளியேற்றிவிடுவார்கள். அதற்கு முன்பாக நாம் விலங்குகளுடன் சேர்ந்துகொண்டுவிட வேண்டும் என்று வவ்வால் யோசித்தது.
உடனே விலங்குகளின் கூட்டணியில் தன்னை இணைத்துக் கொள்ளும்படி கேட்டது. ‘நீ ஒரு பறவை. உன்னை சேர்த்துக்கொள்ள முடியாது!’ என்றன விலங்குகள்.
‘இல்லை! சிறகுகள் இருந்தாலும் நான் பறவை இனமில்லை. குட்டி போட்டு பால் தருவதால் நானும் விலங்கினமே..’ என்றது வவ்வால். விலங்குகளும் வவ்வாலை தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டன. உடனே வவ்வால் சொன்னது: ‘பறவைகளின் பலவீனம் பசி. தானியத்தைக் காட்டி பறவைகளை எளிதாகப் பிடித்துவிடலாம். பறவைகள் குடிக்கும் நீரில் விஷத்தைக் கலந்துவிட்டால் அவற்றை மொத்தமாகக் கொன்றுவிடலாம்!’
இதைக் கேட்ட விலங்குகள் ஆரவாரம் செய்தன. சண்டை தொடர்ந்தது. திடீரென பறவைகள் பக்கம் ஜெயிப்பது போன்ற சூழல் உருவானது. உடனே வவ்வால் பறவைகளிடம் வந்து சேர்ந்தது.
‘சகோதரா! நான் குட்டிப் போட்டு பாலூட்டினாலும் நான் விலங்கினமில்லை. நான் உங்களைப் போல பறப்பவன். விலங்குகள் என்னை மிரட்டியதால் இதுவரையில் அவர்கள் பக்கம் இருந்தேன்!’ என்றது.
இப்போது வவ்வாலைப் பறவைகள் தங்கள் அணியில் சேர்த்துக்கொண்டன. ‘விலங்குகள் நெருப்புக்கு பயந்தவை. காட்டுக்கு தீ வைத்துவிட்டால் விலங்குகள் மொத்தமாக அழிந்துவிடும். மிருகங்களுக்கு அறிவு கிடையாது. பறவைகள்தான் புத்திசாலிகள்..’ என்றது வவ்வால். அதைக் கேட்டு பறவைகள் மகிழ்ச்சியில் சிறகடித்தன. சண்டை தொடர்ந்தது. முடிவில் கடவுள் தலையிடவே சமாதானம் ஏற்பட்டது.
‘காடு அனைவருக்கும் சொந்தமானது. மின்மினிப் பூச்சிகள் அழிந்துபோனால்கூட காடு அழியத் தொடங்கி விடும். காட்டில் எவரும் பெரியவரும் இல்லை; எவரும் சிறியவரும் இல்லை’ என கடவுள் அறிவித்தார். அதன்படி பறவைகளும் விலங்குகளும் இணைந்து வாழ்வதற்கு சம்மதித்தன.
பறவைகளும் விலங்குகளும் ஒன்றுகூடி கடவுளிடம் தெரிவித்தன: ‘சுயநலத்தோடு இனத்தை காட்டிக் கொடுத்த வவ்வாலுக்கு இனி காட்டில் இடம் தரமுடியாது; இடிந்த கட்டிடங்களில் இருட்டில் தலைகீழாகத் தொங்கி வாழட்டும்!’
அதைக் கேட்ட கடவுள் சொன்னார்: ‘துரோகிக்கு இதுதான் சரியான தண்டனை!’
விலங்குகளும் பறவைகளும் ஒன்றுசேர்ந்து வவ்வாலைக் காட்டை விட்டு வெளியே துரத்தின.
இனத்தைக் காட்டிக் கொடுத்து சுகமாக வாழ நினைத்தால், கடைசியில் நாமே விரட்டியடிக்கப்படுவோம் என்பதையே இக்கதை உணர்த்துகிறது. துரோகத்தால் வெளியேற்றப்பட்ட வவ்வால்கள் இடிந்த கோயில்களிலும் கட்டிடங்களிலும் வாழ்கின்றன. ஆனால் நம் உலகிலோ இனம், மொழி, நிலத்துக்குத் துரோகம் செய்பவர்கள் அதிகாரத்திலும் செல்வச் செழிப்பிலும் திளைக்கிறார்கள். அவர்களின் துரோகம் விருதுகளால் அங்கீகரிக்கப்படுகிறது. துரோகம் செய்வது தனித் திறமையாகக் கருதப்படுகிறது.
பாவம் எளிய மனிதர்கள்! எவரை நம்புவது? எதன் மீது நம்பிக்கை வைப்பது? ஏன் நம்பிக்கை துரோகம் இழைக்கப்படுகிறது… என்பதெல்லாம் அறியாமல் தடுமாறுகிறார்கள். வரலாறு துரோகிகளை ஒருபோதும் மன்னிப்பதில்லை. அத்துடன் துரோகத்துக்குத் துணை போனவர்களையும் அடையாளம் காட்ட மறப்பதில்லை. வரலாறு கற்றுத் தரும் இப்பாடத்தை நாம் ஏன் எப்போதும் மறந்து போகிறோம்?
- கதை பேசும்… | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com
இணையவாசல்: >புகழ்பெற்ற நாட்டுப்புறக் கதைகளை அனிமேஷன் திரைப்படமாக காண விரும்புகிறவர்களுக்கான இணையதளம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT