Published : 27 Nov 2016 12:08 PM
Last Updated : 27 Nov 2016 12:08 PM
இந்தியாவின் இசை கவுரவம் பாரத ரத்னா உஸ்தாத் பிஸ்மில்லாகான். பாரம்பரியமாக ஷெனாய் வாசிக்கும் குடும்பத்தில் பிறந்த எஸ்.பாலேஷ் நீண்ட காலம் உஸ்தாத் பிஸ்மில்லா கானிடம் குரு சிஷ்ய பாணியில் ஷெனாய் வாசிப்பதில் இருக்கும் பல நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டு, அவரோடு இணைந்து ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் புகழ்பெற்ற மேடை களிலும் உலக நாடுகள் பலவற்றி லும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி யிருப்பவர். பாலேஷின் மகன் கிருஷ்ணா பாலேஷும் உஸ்தாத் பில்மில்லா கானிடம் 7 ஆண்டுகள் ஷெனாய் பயிற்சி எடுத்துக் கொண்டவர்தான்.
தான்சேன் இசைப் பள்ளியின் சார்பாகத் தங்களின் குருநாதரான உஸ்தாத் பிஸ்மில்லா கானின் நூற்றாண்டைப் போற்றும் வகையிலும் பண்டிட் சன்னா பரமன்னா (பாலேஷின் தந்தை) அவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும் சென்னை, மியூசிக் அகாடமியில் சமீபத்தில் பிரம்மாண்டமான விழாவை பாலேஷும் கிருஷ்ணா பாலேஷும் நடத்தினர்.
கலைஞர்களைக் கவுரவித்த புரஸ்கார் விருதுகள்
ஹிந்துஸ்தானி இசையைப் பிரபலப் படுத்தும் சேவையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவரும் தார்வாடைச் சேர்ந்த பண்டிட் ராஜசேகர் மன்சூருக்கு உஸ்தாத் பிஸ்மில்லா கான் மற்றும் பண்டிட் சன்னா பரமன்னா கலா ரத்னா புரஸ்கார் விருதும், செவ்விய இசைக் கலைஞர்கள் பண்டிட் பசப்பா (கிளாரினெட்), விதூஷி சம்பா கல்குரா (வாய்ப்பாட்டு), பண்டிட் பிரமோத் கெய்க்வாட் (ஷெனாய்) ஆகியோருக்கு உஸ்தாத் பிஸ்மில்லா கான், பண்டிட் சன்னா பரமன்னா கவுரவ் புரஸ்கார் விருதுகளும் வழங்கப்பட்டன. இது தவிர, செவ்வியல் இசையிலும், திரையிசையிலும் நாடகத் துறையிலும் சிறந்த பங்களிப்பை நிகழ்த்திவரும் வித்வான் வி.எஸ்.நரசிம்மன் (வயலின்), பண்டிட் எம்.என்.முனேஷ் (தபேலா), ஒய்.ஜி.மகேந்திரா (தாள வாத்தியக் கலைஞர், நாடகக் கலைஞர்), பண்டிட் ஜனார்த்தன் மிட்டா (சிதார்) ஆகியோருக்கும் கவுரவ் புரஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன. ஜெயதேவி (வாய்ப்பாட்டு), ராஜாஸ் உபாத்யாய (வயலின்) ஆகியோருக்கு யுவ கலா புரஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன.
மனதை நிறைத்த ஜுகல்பந்தி
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக ஹிந்துஸ்தானி, கர்னாடக இசையின் சம்பிரதாயங்களை இணைக்கும் ஜுகல்பந்தி இசை நிகழ்ச்சி நடந்தது. பண்டிட் எஸ்.பாலேஷ் (ஷெனாய்), பண்டிட் அதுல்குமார் உபாத்யாய (வயலின்) உஸ்தாத் பிஸ்மில்லா கானின் மகன் உஸ்தாத் நாசிம் உசேன் (தபேலா) சுர்மானி கிருஷ்ணா பாலேஷ் (ஷெனாய்), சுரேஷ் ராஜ் (துக்கத்), பிரகாஷ் பாலேஷ் (ஹார்மோனியம்), ஆர்.கே.ரவிகுமார் (ஸ்வர்மண்டல்) ஆகியோரின் இசையில் வடக்கும் தெற்கும் மேடையில் சங்கமமானது. கர்னாடக இசையில் பெரும் ஈடுபாட்டுடன் இருக்கும் ரசிகர்களுக்கும் ஹிந்துஸ்தானி இசையில் விருப்பம் உள்ளவர்களுக்கும் முழுத் திருப்தி யளிக்கும் விதத்தில் (மாரு பிஹாஹ், மிஸ்ர கமாஜ்) இரண்டு முத்தான உருப்படிகளை மிகவும் விஸ்தாரமாக இசைத்தனர். விளம்ப காலத்தில் ஆரம்பித்துப் படிப்படியாக விஸ்வரூப தரிசனம் அளித்த இசையை வழங்கிய அந்த மகானுபாவர்களுக்குத் தங்களின் நன்றியைக் கரவொலியின் மூலம் தொடர்ந்து வழங்கினர் ரசிகர்கள். பண்டிட் பாலேஷின் ஷெனாயிலிருந்து வெளிப்பட்ட நாதத்தில் உஸ்தாத் பிஸ்மில்லா கானின் மூச்சுக் காற்றும் கலந்திருந்ததை உணர முடிந்தது. தொடர்ந்து, இந்திய இசையின் இன்னொரு கவுரவமான பாரத ரத்னா பண்டிட் பீம்சென் ஜோஷியின் மகன் பண்டிட் நிவாஸ் ஜோஷியின் இசை நிகழ்ச்சியும் நடந்தது.
இந்த ஒரு நாள் இசை நிகழ்ச்சியே இன்னும் ஒரு ஆண்டுக்குத் தாங்கும் என்று சொல்லும் அளவுக்கு மனம் நிறைய பொங்கி வழிந்தது இசை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT