Last Updated : 19 Jul, 2014 09:10 AM

 

Published : 19 Jul 2014 09:10 AM
Last Updated : 19 Jul 2014 09:10 AM

பண்பாட்டு வரலாறு திரும்ப எழுதப்பட வேண்டும்: அ. கா. பெருமாள் நேர்காணல்

அ.கா.பெருமாள், நாட்டார் வழக்காற்றியல் அறிஞர். ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரை நூல்கள் இவரது பங்களிப்புகள். அம்மானை வடிவத்தில் இருந்த பல நாட்டார் கதைகளை உரைநடையில் தொகுத்துள்ளார். வில்லுப்பாட்டு, தோல்பாவைக் கூத்து குறித்த இவர் ஆய்வுகள் முக்கியமானவை. கல்வெட்டுகள், இலக்கியங்கள் அடிப்படையில் இவர் குமரி மாவட்டத்தின் 2000 ஆண்டு வரலாற்றை எழுதியுள்ளார். அரசுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். நாகர்கோவிலில் வசிக்கிறார். தற்போது கேரளத்தில் கண்ணகி வழிபாடு குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.

உங்கள் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்...

நாகர்கோயிலுக்கு அருகில் உள்ள பறக்கைதான் சொந்த ஊர். இளங்கலைப் படிப்பு (பி.ஏ.) முடியும் வரை அங்குதான் இருந்தேன். பள்ளிப் படிப்பு, பறக்கையிலும், சுசீந்திரத்திலும் படித்தேன்.

நாட்டார் வழக்காற்றியலில் ஆர்வம் வந்தது எப்படி?

எங்கள் வீட்டுக்கு எதிரே திருவாவடுதுறை ஆதினம் மடம் இருக்கிறது. அங்கு முருகலிங்கத் தம்பிரான் என்று ஒரு தம்பிரான் இருந்தார். பத்து பன்னிரெண்டு வயதில் இருந்து அந்த மடத்தில் அமர்ந்து பாடப் புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. அந்தத் தம்பிரானைத் தேடி ரொம்ப வயசானவர்கள் வருவார்கள். அவர்கள் சொல்லும் தகவல்களைக் கவனமாகக் கேட்பேன். நாட்டார் வழக்காற்றியல் துறைக்கு வர ஒரு விதத்தில் இதுதான் காரணம் என நினைக்கிறேன்.

உங்கள் முதல் ஆய்வு எது?

1972-ல் சுந்தர ராமசாமியைச் சந்தித்தேன். அவர் ஒரு நல்ல நூலகம் வைத்திருந்தார். அடியார்க்கு நல்லார் உரையை நான் முதன்முதலில் பார்த்தது அங்குதான். அவர் வீட்டில் படித்த புத்தகங்கள் ஆய்வுக்கான முனைப்பைத் தந்தன எனலாம். முதன் முதலில் முனைவர் பட்ட ஆய்வுக்காக ‘தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி வையாபுரியாரின் கணிப்பு’ என்ற தலைப்பில் ஆய்வுசெய்தேன்.

ஆனால் ‘வையாபுரிப்பிள்ளை ஒரு தமிழ்த் துரோகி’ என ஆய்வு நிராகரிக்கப்பட்டது. அதைப் புத்தகமாக வெளியிட்டேன். திமுக தலைவர் கருணாநிதி, ‘குங்குமம்’ பத்திரிகையில், “ஒரு தமிழ்த் துரோகி குறித்து ஒரு தமிழ்ப் பேராசிரியரே எழுதுகிறாரே’ என விமர்சித்திருந்தார். அதனால் அந்தப் புத்தகத்தின் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன.

நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளுக்கு எப்போது வந்தீர்கள்?

முதன்முதலில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுக் கட்டுரைகளை வெங்கட் சாமிநாதனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘யாத்ரா’ இதழில்தான் எழுதினேன். வெங்கட் சாமிநாதனின் ஊக்கத்தின் பேரில் இசக்கி அம்மன் வழிபாடு, கணியான் கூத்து பற்றி எழுதினேன்.

அதற்கெல்லாம் நல்ல வரவேற்பு. பேராசிரியர் நா. வான மாமலை பாராட்டினார். அதே காலகட்டத்தில் (1987) குமரி மாவட்ட வில்லிசைப் பாடல்கள் ஆய்வுசெய்தேன். நாட்டார் வழக்காற்றியல் துறையில் எனது முதல் ஆய்வு.

இந்த ஆய்வுகள் எந்த விதத்தில் அவசியமானவை?

இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாறு விரிவாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் சுதந்திரப் போராட்டம் குறித்த சாமானியனின் மனநிலையை இதுவரை எழுதப் பட்ட வரலாறு பதிவுசெய்யவில்லை. மாறாக நாட்டுப்புறப் பாட்டுகள் இதைப் பதிவுசெய்திருக்கின்றன. ‘ஐ பை அரைக்காபக்கா நெய், வெள்ளக்காரன் கப்பலிலே தீயைக் கொளுத்தி வை’ என்று ஒரு நாட்டுப்புறப் பாடல் இருக்கிறது.

வ.உ.சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் விட்டார். இதைத் தொடர்ந்து அந்தக் காலகட்டத்தில் சாமானிய மக்களிடம் உருவான ஆங்கில ஆட்சிக்கு எதிரான மனநிலையை இந்தப் பாடல் சித்திரிக்கிறது. கட்டபொம்மன் கதைப் பாடலிலும், மருது சகோரதர்கள் கதைப் பாடலிலும் இதை நீங்கள் பார்க்கலாம்.

வழக்காற்றியலின் வகைகள் என்னென்ன?

நாட்டார் வழக்காற்றியல் என்பது சமுத்திரம். நாட்டார் ஓவியங்கள் இருக்கின்றன. இதை வைத்து 17, 18-ம் நூற்றாண்டில் ஒரு கலாச்சாரத்தை நீங்கள் உருவாக்க முடியும். ஒரு பெண் அப்போது எப்படி ஆடை அணிந்திருந்தாள், சுற்றுப்புறம் எப்படி இருந்தது என்பதை இந்த ஓவியங்கள் மூலம் நாம் அறியலாம். நம் ஊர்களில் பெரும்பாலான அம்மன் கோயில்களில் மேல் பகுதியில் நாட்டார் ஓவியங்கள் இருந்தன. ஆனால் அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் பல கோயில்களை இடித்து கான்கிரீட் கட்டிடங்களைக் கட்டிவிட்டனர்.

நாட்டார் கலைகளின் அழிவைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

சில தனித்துவமான கலைகள், தனிப்பட்ட ஜாதியினர் மட்டுமே ஆடக்கூடியவை. கணியான் ஆட்டம் ஆடுபவர்களின் குழந்தைகள் படித்து வேறு வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள். அவர்களின் சமூக வளர்ச்சி இது. இதைத் தடுக்க முடியாது.

ஆனால் இன்றைக்குப் பறையாட்டத்தை அந்தச் சமூகத்தினர் தங்களின் அடையாளமாக மாற்றியிருக்கிறார்கள். பல்வேறு நிகழ்வுகளில் இன்றைக்கும் பறையாட்டம் நிகழ்த்தப்படுகிறது. இதுபோல ஒவ்வொரு சமூகமும் கலைகளைத் தங்கள் அடையாளமாக முன்னிறுத்துவதன் மூலம் இதைத் தடுக்கலாம்.

நாட்டார் வழக்காற்றியல் எம்மாதிரியான பண்பாட்டு வரலாற்றைப் பதிவுசெய்கிறது?

சாமானிய மனித இயல்புகள் எல்லாம் நாட்டார் வழக்காற்றியலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மானுடவியலில் Taboo (விலக்கு) எனச் சொல்வோம். போன தலைமுறை வரை மாமியார் - மருமகன் நேர் எதிராகச் சந்தித்துக்கொள்வதோ, சகஜமாகப் பேசிக்கொள்வதோ கிடையாது.

ஆனால் அவர்களுக்கு இடையே ரகசியமான சில ஊடாட்டங்கள் இருந்ததைக் கூறும் நாட்டார் பாடல்கள் உள்ளன. ஆக ‘விலக்கு’ எங்கு இருக்கிறதோ அங்கு ஒரு முறை தவறிய உறவு இருந்துள்ளது என இதன் மூலம் புரிந்துகொள்ளலாம். ஆனால் இதை நாட்டார் வழக்காற்றியல் தவறு எனப் பதிவுசெய்யவில்லை. இயல்பென்றே சொல்கிறது. இதற்கான சான்றைக் கொலைச் சிந்துகளில் பார்க்கலாம். ஆனால் இம்மாதிரியான வாழ்வியல் ஒரு கல்வெட்டிலும் பதிவுசெய்யப்படவில்லை.

கல்வெட்டு அடிப்படையிலான வரலாற்றுக்கு நம்பகத்தன்மை இல்லை என்கிறீர்களா?

அது முழுமையான வரலாறு இல்லை என்கிறேன். சொல்லப்போனால் மொத்த இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுகளில் மூன்றில் ஒரு பங்கு இன்னும் வெளியிடப்படவில்லை. கிடைத்த கல்வெட்டுகளின் அடிப்படையில்தான் வரலாறு எழுதப்பட்டுள்ளது. 1950களுக்குப் பிறகு வரலாற்றுத் துறையில் குறிப்பிடத்தகுந்த ஆய்வுகள் வரவில்லை.

நாட்டார் வழக்காற்றியலை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றைத் திரும்ப எழுத வேண்டுமா?

வரலாறு மீட்டுருவாக்கக் கோட்பாட்டின்படி (Historical Reconstruction Theory) நாட்டார் வழக்காற்றியலை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தின் பண்பாட்டு வரலாறு திரும்ப எழுதப்பட வேண்டும். அப்படி எழுதப் படும்பட்சத்தில் ஏற்கனவே உள்ள தமிழகப் பண்பாட்டு வரலாற்றின் முகம் மாறும். சில விஷயங்கள் இன்னும் அழுத்தமும் தெளிவும் பெறும்.

என்ன மாதிரி விஷயங்கள்?

உதாரணமாக ரஜினிகாந்துக்கு ஏன் பாலபிஷேகம் பண்ணுகிறோம்? குஷ்புவுக்கு ஏன் கோயில் கட்டு கிறோம்? இதற்கெல்லாம் காரணத்தைப் பண்பாட்டு வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதன் மூலம் அறிய முடியும். கதாநாயக வழிபாடு நம்மிடம் ஆதிகாலத்தி லிருந்தே இருக்கிறது. கட்டபொம்மனையும், தேசிங்கு ராஜாவையும் கதைப்பாடல்கள் வழியாகக் கொண்டாடியதில் இதைப் பார்க்க முடியும்.

கோயில் வரலாறுகளைத் தொகுத்திருக்கிறீர்கள். அதற்கு என்ன தேவை இருப்பதாக நினைக்கிறீர்கள்?

கோயில்களைப் பற்றிச் சொல்லப்பட்ட புத்தகங்கள் பெரும்பாலும் தொன்மக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதை வைத்து ஜோதிடர்களும், குருக்களும் பணம் பறிக்கும் வேலைதான் நடந்து வருகிறது.

அல்லது கோயிலுக்கு எதிராகப் புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஒரு கோயிலில் கலாச்சாரத்தை முன்னிறுத்தும் பல அம்சங்கள் இருக்கின்றன. இதை அடிப்படையாகக் கொண்டு புத்தகம் எழுத வேண்டும் என நினைத்தேன். ஒரு சிற்பத்தில் ஒரு புராண அல்லது சமூகக் கதை இருக்கிறது.

மண்குதிரை- தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x