Published : 26 Nov 2016 08:38 AM
Last Updated : 26 Nov 2016 08:38 AM
புத்தரை முழுமையாக நேசிக்கக் கற்றுத்தருவதோடு புத்தரின் போதனைகளை உள்வாங்கி அவற்றை நிராகரிக்கவும் கற்றுத்தரும் நாவல் ஹெர்மன் ஹெஸ்ஸெவின் ‘சித்தார்த்தா’.
இந்திய பிராமண இளைஞன் சித்தார்த் தன் தான் பயின்ற வேத மார்க்கத்திலிருந்து விடுபட விரும்புகிறான். இதற்காகத் தந்தை தாயிடம் சொல்லிவிட்டு நண்பன் ஒருவனை அழைத்துக்கொண்டு காட்டுக்குச் சென்று சமண முனிவர்களோடு சேர்கிறான். அவர்களின் ஞானத்தை உணர்ந்த பிறகு, அவர்களிடமிருந்தும் பிரிந்து புத்த மதம் சென்ற சித்தார்த்தன் அங்கும் தான் எதிர்பார்த்தது கிடைக்காத ஏமாற்றத்தை அடைகிறான். புத்தரைச் சந்தித்து அவரிடமும் சொல்லிவிட்டு விடைபெறுகிறான்.
நகரத்துக்குச் சென்று அங்கு கமலா எனும் தேவதாசியைப் பார்த்ததும் அவள் அழகில் மயங்கி அவளையே மனைவியாக ஏற்று வாழ்கிறான் சித்தார்த்தன். பிறகு, கமலாவிடமிருந்தும் விடைபெறுகிறான். படகோட்டியைச் சந்திக்கிறான். படகோட்டி, நதி தனக்குச் சொன்ன தத்துவங்களை சித்தார்த்தனுக்குச் சொல்கிறார். ஆனால், அவரையும் நிராகரித்து சித்தார்த்தன் தனது சொந்த அனுபவத்தின் மூலமே நதியைக் கண்டடைகிறான்.
'எல்லாமே திரும்ப வரும்' என்று நதி சொல்லிக்கொடுத்ததாகப் படகோட்டி சொன்னாலும் சித்தார்த்தனுக்கு நதி தரும் தரிசனம் வேறு. உலகில் எல்லோருக்கும் அவரவருக்கான அனுபவத்தை நதி வைத்திருப்பதைத் தான் உணர்ந்ததாக சித்தார்த்தன் படகோட்டிக்குச் சொல்கிறான்.
தன் அனுபவத்தில் தான் கண்டடைந்த ஞானத்தைப் பிறருக்கு உபதேசம் மூலம் வழங்குவதில் பயனே இல்லை என்று சித்தார்த்தன் பாத்திரம் மூலமாக ஹெர்மன் ஹெஸ்ஸெ நமக்கு உணர்த்துகிறார். ஹெர்மன் ஹெஸ்ஸெ இந்தியத் தத்துவங்களை நிராகரிக்கிறாரோ என்று தோன்றினாலும் அவரது குரலைப் புரிந்துகொள்ள விழையும்போது, ‘இந்தியத் தத்துவங்கள் மட்டுமல்ல, உலகின் எந்தத் தத்துவமுமே யாரோ ஒருவர் பெற்ற அனுபவங்கள்தாம். அந்த ஞான அனுபவங் களைப் பிறர் பின்பற்றலாம், ஆனால் அடைய முடியாது’ என்பதுதான் ஹெஸ்ஸெவின் தொனி என்று புரிந்துகொள்ள முடிகிறது. அவருக்குக் கிடைத்த நோபல் பரிசுக்கு இந்த நாவலும் ஒரு காரணம்.
தமிழில் திரிலோக சீதாராம் தொடங்கி வெவ்வேறு காலகட்டங்களில் சிற்சில மொழி பெயர்ப்புகள் வந்துள்ளன. ‘சித்தார்த்தா’ நாவலின் ஆன்மாவைத் தருவதில் சீதாராம் கவனம் செலுத்தியிருப்பார். பிற மொழிபெயர்ப்புகளிலோ எளிமை என்ற பெயரில் நாவலின் அழுத்தம் குறைந்துவிடுகிறது.
‘சித்தார்த்தா’ நாவலுக்கு உரிய மரியாதையை ‘சித்தார்த்தா’ திரைப்படம் செலுத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இயக்குநர் கான்ராடு ரூக்ஸ், இங்க்மார்க் பெர்க்மன் படங்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஸ்வென் நிக்விஸ்ட், ‘சித்தார்த்தா’வாக திரையில் வாழ்ந்த இந்தி நடிகர் சசி கபூர் ஆகியோர்தான் இதற்கு முக்கியக் காரணம்.
‘சித்தார்த்தா’ தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் திரையிடப் பட்டது. இந்தியாவெங்கும் பரவலாக இந்தத் திரைப்படம் பேசப்பட்டது. நிழல்போலத் தெரியும் நிர்வாணப் பெண்ணிடம் (இந்தி நடிகை சிமீ கரேவால்) சசி கபூர் மண்டி யிட்டு யாசிக்கும் சுவரொட்டி அப்போது பிரபலம். சென்சார் போர்டில் நிறைய பிரச்சினைகளையும் இந்தப் படம் சந்தித்தது.
நாவலில் துறவு செல்வதற்கு முன் தந்தை யிடம் அனுமதி பெற நிற்கும் காட்சிகள் விரி வாக இல்லை. அம்மாவிடம் ஆசி பெற்றுச் செல் என்று அப்பா கிளம்பி விடுகிறார். திரைப்படத்திலோ ஆற்றங்கரை யையும் தாய், தந்தையையும் வணங்கி விட்டு விடைபெறுகிறான். வெளிநாட்டு இயக்குநர் இந்தியக் குடும்ப நெறியை நன்கு புரிந்துவைத்திருந்ததை இந்தக் காட்சி காட்டுகிறது.
படகோட்டியைப் பிரிந்து, நண்பனைப் பிரிந்து, மனைவியைப் பிரிந்து, மகனைப் பிரிந்து தனித்து அலையும் தேடலைப் பேசு கிறது படத்தின் பின்பாதி. ஒருவித சோக இழையில் அதற்கு அற்புதமான பின்னணி இசையை ஹேமந்த் குமார் கொடுத்திருப்பார்.
ஹெர்மான் ஹெஸ்ஸெ
நாவலைவிடத் திரைப்படத்தில் நதியில் திரும்பத் திரும்பப் பயணிக்கும் காட்சிகள் அதிகம். அந்தக் காட்சிகளின் வழியே பெரிய உரையாடலையே நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர். சித்தார்த்தனின் ஆன்மா எப்போதும் கொழுந்துவிட்டு எரிந்துகொண் டிருக்கக் கூடியது; அது தன் வாழ்க்கைப் போக்கையே மேலிருந்து கழுகுப் பார்வை யோடு பார்க்கும் தத்துவ வலிமை கொண் டது என்பதை ஆழமாகச் சொல்லும் காட்சிகள் படத்தின் பலம். சிறந்த இலக் கியம் ஒன்றுக்குத் திரையில் உயிரூட்டி யிருக்கிறார் இயக்குநர் கான்ராடு ரூக்ஸ்.
- பால்நிலவன்,
தொடர்புக்கு: sridharan.m@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT