Published : 05 Nov 2016 09:45 AM
Last Updated : 05 Nov 2016 09:45 AM
இன்றைய தலைமுறைக் குழந்தைகள் பாடப் புத்தகங்களைத் தாண்டி, பிற நூல்களைப் படிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு ஒருபுறம். குழந்தைகள் படிப்பது மாதிரியான நூல்கள் தமிழில் வருவதில்லை என்கிற குற்றச்சாட்டு இன்னொரு புறம். இந்த இரண்டுக்குமான இடைவெளியில் இருக்கிற உண்மையைப் புரிந்துகொண்டாலே போதும், குழந்தைகள் எல்லோரும் புத்தகங்களைப் படிப்பதற்கான நல்ல சூழலை நம்மால் உருவாக்க முடியும்.
குழந்தைகளின் மனவுலகம் கதைகளாலானது. ‘கதை சொல்லப் போறேன்…’ என்றதும் உற்சாகத்தோடு நம்மருகே ஓடி வருகிறவர்களாகவே குழந்தைகள் இப்போதும் இருக்கிறார்கள். ஒரு புத்தகத்தை எடுத்து, அதிலுள்ள கதைகளை வாசிப்பதற்கு முன்பாகவே, புத்தகத்திலுள்ள சித்திரங்களுடன் நெருக்கமாகிவிடுவது குழந்தைகளின் இயல்பு. குழந்தைகளுக்குக் கதைகள் படிப்பது பிடிக்குமென்றால், படக் கதைகள் இன்னும் ரொம்பவே பிடிக்கும்.
குழந்தைகளுக்குச் சொல்லப்படும் புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள் அல்லது பிற சாகசக் கதைகள் எதுவென்றாலும், படக்கதையாகத் தரும்போது அவற்றைக் குழந்தைகள் விரும்பிப் படிப்பதைப் பார்க்கலாம். தமிழில் குழந்தைகளுக்கான படக்கதை நூல்கள் அருகிப்போன நிலையில், செண்பகா பதிப்பகம் பெருமுயற்சியெடுத்து 20 படக்கதை நூல்களைத் தற்போது வெளியிட்டுள்ளதைப் பாராட்டி வரவேற்க வேண்டும்.
புரட்சியாளர் அம்பேத்கர், மகாகவிகள் வால்மீகி, காளிதாசன், சுப்பிரமணிய பாரதியார், சுதந்திரப் போராட்ட தியாக தீபங்கள் பகத் சிங், வ.உ. சிதம்பரனார், திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன், கணித மேதை இராமானுஜன், அன்னை தெரசா, ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் உள்ளிட்ட பல்வேறு இந்திய தமிழக ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமான படக்கதைகளாக வெளியிட்டுள்ளார்கள்.
நூலின் உள்ளட்டையில் ஒரு பக்க அளவில் படக்கதையின் நாயகரின் வாழ்க்கையைச் சுருக்கமாய் அறிமுகம் செய்திருப்பது நல்ல தொடக்கம். அடுத்ததாக,தொடரும் வாழ்க்கை வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளை மட்டும் தொகுத்துத் தந்திருப்பதும் படிப்பதற்கு சுவாரசியமாக உள்ளது. 20 நூல்களுக்கும் ஓவியர் மிதுன் ஓவியங்களை வரைந்திருக்கிறார். பல நூல்களுக்கு மிதுனின் ஓவியங்கள் அழகு சேர்த்துள்ளன.
இதில்,12 நூல்களை வேணுகோபாலும், மீதமுள்ள நூல்களை விமோசனா, எஸ்.சீனிவாசன், எஸ்.னிவாசன் ஆகிய மூவரும் எழுதியிருக்கிறார்கள். படக் கதைகளுக்கான மொழிநடை இன்னும் செறிவாகவும் சுருக்கமாகவும் இருந்திருக்கலாம். ஒரு வாக்கியத்தில் 16-க்கும் மேற்பட்ட வார்த்தைகள் இருப்பது குழந்தைகள் வாசிப்புக்கு அயர்ச்சியை ஏற்படுத்தாதா?
அதேபோல், அங்கங்கே இடறும் எழுத்துப் பிழைகளையும் கவனமெடுத்து களைந்திருக்க வேண்டும். நேதாஜி படித்த கல்லூரியின் பேராசிரியர் பெயர் அட்டன், ஆடன், ஆட்டன் என்று ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி வருகிறது.
குழந்தைகள் மத்தியில் வரலாற்று நாயகர்களை அறிமுகம் செய்துவைக்கும் நல்ல நோக்கில் வெளியிடப்பட்டுள்ள இந்நூல்களோடு, விஷ்ணுவின் அவதாரமாக நம்பப்படும் திருப்பதி வெங்கடேஸ்வரா பற்றிய தொன்மைக் கதையை வெளியிட்டிருப்பதும், வீரபாண்டிய கட்டபொம்மன் நூலுக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குதிரை மீதமர்ந்து வாள் வீசுவது போன்ற படத்தை வைத்திருப்பதும் நெருடலாகத்தான் உள்ளது. மற்றபடிம், நம் வீட்டுக் குழந்தைகள் ஒவ்வொருவர் கையிலும் தவழ வேண்டிய புத்தகங்கள் இவை.
- மு.முருகேஷ், தொடர்புக்கு: murugesan.m@thehindutamil.co.in
சிறுவர் சித்திரக் கதை வரிசையில் 20 நூல்கள்
ஒவ்வொரு நூலும் ரூ.50/-
செண்பகா பதிப்பகம், சென்னை 17.
போன்: 044 24331510.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT