Published : 15 Oct 2022 06:25 AM
Last Updated : 15 Oct 2022 06:25 AM

நூல்நோக்கு: நினைவுகளில் நீளும் நூல்

இந்த நூல் 1850 முதல் 1950 காலகட்டத்தில் வெளிவந்த ஆங்கில-ஐரோப்பிய நாவலாசிரியர்களின் 23 படைப்புகளின் சுருக்கமே. அவை அனைத்தும் பிராய்ட், யுங், அட்லர் உள்ளிட்ட உளவியல் மேதைகளின் கருத்துகளின் தாக்கத்தில், நனவோடை உத்தி வடிவில் எழுதப்பட்டிருந்தன. நனவோடை உத்தியும் உளவியல் தாக்கமும் அந்த நாவல் வடிவின் தனித்தன்மையும் இந்நூலில் விரிவாக அலசப்பட்டு உள்ளன. முக்கியமாக, ஹென்றி ஜேம்ஸ், ஜேம்ஸ் ஜாய்ஸ் உள்ளிட்ட ஆசிரியர்களின் வாழ்க்கைச் சுருக்கத்தையும் இந்நூல் அளிக்கிறது. ஹென்றி ஜேம்ஸ் நாவல்களில் தென்படும் நிஜமும் பிம்பமும் வெவ்வேறாக இருக்கும். அந்தத் தன்மையை இந்நூல் நமக்கு எடுத்துரைக்கும் விதம் அலாதியான அனுபவத்தைத் தருகிறது. தாஸ்தாயெவெஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ நாவலுக்கு ஹென்றி ஜேம்ஸ் நாவல்களின் பாத்திரங்களுக்கு இடையிலான ஒற்றுமை குறித்த விவரிப்பு நமக்கு ஆச்சரியமூட்டும் விதமாக இருக்கிறது. வர்ஜீனியா உல்ஃப், ஆல்டஸ் ஹக்ஸ்லி, சாமுவேல் பெக்கட், கிரகாம் கிரீன், ஜோசப் கொன்ராட், லாரன்ஸ் ஸ்டேர்ன் உள்ளிட்ட நாவலாசிரியர்களின் படைப்புகளையும் அவர்களது வாழ்க்கையையும் முறையாகத் தொகுத்து, சுவாரசியமான நூலாக்கியிருக்கிறார் இதன் ஆசிரியர். இலக்கிய ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது. - ஹுசைன்

நனவோடைக் காலம் (1850-1950)
ராமசாமி மாரப்பன்;
வெளியீடு: இளங்கோவடிகள் இண்டெலக்சுவல்ஸ்,
நாமக்கல்- 637 001
விலை: ரூ.600
தொடர்புக்கு: 96007 97655.

அர்ப்பணிப்பு வாழ்க்கை

சமூகத்திற்கு அளப்பரிய சேவை புரிந்த செவிலியர் ஒருவரையும் அர்ப்பணிப்புடன் கூடிய அவருடைய பணி வாழ்க்கையையும் படைப்பாக்க முடியும் என்பதை சூலூர் கலைப்பித்தன் இந்த நாடக நூலின் வழி நிரூபித்திருக்கிறார். அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்த லட்சுமி என்பவரையே கதையின் நாயகியாக்கி, வேலு நாச்சியாரின் தீரமும் அன்னை தெரசாவின் கருணையும் லட்சுமியின் பணி சிறக்க உதவியதாக இந்நூலில் பதிவாக்கியிருக்கிறார் கலைப்பித்தன். - யுகன்

செவிலித்தாய் சூலூர் கலைப்பித்தன்
வெளியீடு: சூலூர்த் தமிழ்ச் சங்கம், கோயமுத்தூர்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9442483066

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x