Published : 01 Oct 2022 06:36 AM
Last Updated : 01 Oct 2022 06:36 AM
மதுரையில் நடைபெற்றுவரும் புத்தகக்காட்சியில், தமிழ்நாடு அரசின் ‘இல்லம் தேடிக் கல்வி’ அரங்குக்கு வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ‘புத்தகக் காட்சிக்கு நாம் ஏன் வர வேண்டும்?’ என்ற தலைப்பிலான புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. புத்தகக் காட்சிக்கு வருவதன் மூலம் ஒரு மாணவனுக்கு ஏற்படும் நல்ல மாற்றம் கதையாகச் சொல்லப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்களான சக.முத்துக்கண்ணன், ச.முத்துக்குமாரி, ரா.ராணி குணசீலி ஆகியோர் இணைந்து இந்நூலை எழுதியிருக்கிறார்கள். தொடர்புக்கு: 99440 94428.
சலுகை விலையில் ‘என்றும் காந்தி’ - நாளை (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் அமைந்துள்ள காந்திய இலக்கியச் சங்கத்தில் சிறப்புப் புத்தகக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ‘இந்து தமிழ் திசை’ வெளியீடான ‘என்றும் காந்தி’ புத்தகம் சிறப்புச் சலுகை விலையில் வழங்கப்படவுள்ளது. அன்று ஒரு நாள் மட்டும் அனைத்துப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடியும் வழங்கப்படவுள்ளது.
சவுதி புத்தகக் காட்சியில் தமிழ்ப் புத்தகங்கள் - சவுதி அரேபியா, ரியாத்தில் சர்வதேசப் புத்தகக் காட்சி செப்டம்பர் 29இல் தொடங்கியது. அக்டோபர் 8 வரை நடைபெறவுள்ள இந்தப் புத்தக் காட்சியில் சிக்ஸ்த் சென்ஸ், காலச்சுவடு ஆகிய பதிப்பகங்கள் உள்பட 50 முன்னணிப் பதிப்பகங்களின் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அரங்கு எண் E 36இல் விற்பனைக்குக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இந்தக் காட்சி காலை 10இலிருந்து இரவு 11 மணி வரை நடைபெறும்.
சலபதி நூல் ஆங்கிலத்தில்... வரலாற்றாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ‘தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை’ இப்போது ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. ‘The Brief History of a Very Big Book: The Making of the Tamil Encyclopaedia’ என்ற தலைப்பில் பெர்மனண்ட் ப்ளாக் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. தமிழரின் நூற்றாண்டுக் கனவான கலைக்களஞ்சியம் உருவான வரலாற்றை சலபதி, இந்நூலில் நயம்பட எழுதியிருக்கிறார். தமிழில் வெளிவந்து
அறிவுச் சூழலில் கவனம் பெற்ற நூல் இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT