Published : 01 Oct 2016 09:06 AM
Last Updated : 01 Oct 2016 09:06 AM
தொலைக்காட்சி அலைவரிசைகள் வந்தபோதுகூட இந்த அளவுக்கு பாதிப்பு இல்லை...
பாக்கெட் நாவல் வடிவத்தைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர் ஜி.அசோகன். வேலைவாய்ப்பு, வர்த்தகம் தொடர்பான பத்திரிகைகளும் வெளியிட்டிருக்கிறார். சிறப்புப் பதிப்பாக ‘புளிய மரத்தின் கதை’யிலிருந்து தேவி பாரதியின் ‘நிழலின் தனிமை’ வரை வெளியிட்டவர். ‘கும்கி’ என்னும் அரசியல் விமர்சனப் பத்திரிகையை விரைவில் தொடங்கவிருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து…
எப்போது தொடங்கியது இந்தப் பயணம்?
எங்கள் அப்பா எல்.ஜி.ராஜ், பத்திரிகைத் துறையில் இருந்தவர்; ஓவியர். 1970-ல் ‘முயல்’ என்று ஒரு சிறுவர் பத்திரிகையை 10 காசுக்கு அவர் கொண்டுவந்தார். இப்போது நான் செய்துவருவதெல்லாம் அன்றைக்கு அவர் சொல்லிவிட்டுப் போனதுதான்.
மாத நாவல் தொடங்குவதற்கான உந்துதல் எப்படி வந்தது?
என் அப்பா மறைவுக்குப் பிறகு 1985-ல் பொறுப்புக்கு வந்தேன். முதலில் ‘டைம்பாம்’, ‘இது அரசியல் கொலையா?’ என்று இரு நாவல் கள் எழுதினேன். ‘டீனேஜ் நாவல்’தலைப்பில் அந்த நாவல்களை வெளியிட்டேன். ஆனால் அந்த நாவல்கள் விற்கவே இல்லை. ‘அழகாக இருந்தால் நடிகர் ஆகணும்; இல்லைன்னா இயக்குநர் ஆகிடணும்னு’ சொல்வார்கள் இல்லையா? அதனால்தான் இயக்குநர் ஆகிவிட் டேன். மாத நாவல் ஆசிரியர் ஆகிவிட்டேன்!
யார் நாவலை முதலில் பதிப்பித்தீர்கள்?
முதலில் எழுத்தாளர்களுக்கு மாத நாவல் ஆரம்பிப்பது தொடர்பாகக் கடிதம் எழுதினேன். முதல் பதில் ராஜேஷ்குமாரிடமிருந்து வந்தது. முதல் பாக்கெட் நாவல் ராஜேஷ்குமாரின் ‘மாலை நேர மரணம்’வந்தது. அதற்கு நல்ல வரவேற்பு. தொடர்ந்து ராஜேந்திரகுமார், பாலகுமாரன், அனுராதா ரமணன் போன்றோரின் நாவல்களை வெளியிட்டேன். 20 ஆயிரம் பிரதிகளில் தொடங்கி ஒரு வருஷத்தில் ஒரு லட்சம் ஆனது.
உங்களுடைய பதிப்புகளில் அதிக வரவேற்பைப் பெற்றது ‘க்ரைம் நாவல்’தான் அல்லவா?
ஆமாம். அதை 1986-ல் தொடங்கினேன். ‘பாக்கெட் நாவ’லில் வெளிவந்த ராஜேஷ்குமார் நாவல்களுக்குத் தனி வரவேற்பு இருந்தது. அதனால் அவருக்குத் தனியாக ஒரு நாவல் பத்திரிகை தொடங்க நினைத்தேன். அதுதான் ‘க்ரைம் நாவல்’. ‘க்ரைம் நாவ’லில் மட்டும் ராஜேஷ்குமார் இந்த மாதம் 300-வது நாவல் என்ற உயரத்தைத் தொட்டிருக்கிறார்.
ராணிமுத்து, கல்பனா என்று மாத நாவல்கள் வந்த காலகட்டத்தில், ஏன் ‘க்ரைம் நாவல்’, ‘பாக்கெட் நாவல்’ என்ற பெயர்களைத் தேர்வுசெய்தீர்கள்?
ஒரு பொருளைப் பார்த்தால் அது என்னவென்று தெரிய வேண்டும். அது வியாபாரத்துக்கு முக்கியம். ‘சூரிய பவன்’ என்று வைப்பதைவிட ‘இட்லிக் கடை’ என்று வைக்கலாம். அதுதான் நேரடியாக இருக்கும்.
தொலைக்காட்சி அலைவரிசைகள் வருகைக்குப் பிறகு நாவல் விற்பனை குறைந்திருக்கிறதா?
கடந்த நான்கைந்து ஆண்டுகளில்தான் நாவல் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி அலைவரிசைகள் வந்த போதுகூட இந்த அளவுக்கு இல்லை. ‘பாக்கெட் நாவல்’ இடத்தை இன்றைக்கு வாட்ஸ்-அப்பும், ஃபேஸ்புக்கும் எடுத்துக்கொண்டன. பயணம்போகும் பலரும் கைபேசியில்தான் நேரத்தைச் செலவிடுகிறார்கள். நாவல் வாசிப்பு குறைந்து, பதிப்பும் லட்சத்திலிருந்து ஆயிரங்களாகக் குறைந்திருக்கிறது.
‘பாக்கெட் நாவல்’ வெளியிட்டுக்கொண்டே இலக்கிய நாவல்களையும் அவ்வப்போது வெளியிடுகிறீர்கள். எப்படி ஏற்பட்டது இந்த மாற்றம்?
அந்தக் காலகட்டத்தில் இலக்கியக் கூட்டங் களில் ‘பாக்கெட் நாவ’லைத் திட்டுவார்கள். ‘பாக்கெட் நாவல்’ சமுதாயச் சீர்கேடு என்று சொல்வார்கள். சுஜாதா, வைரமுத்துகூட விமர்சனம் செய்திருக்கிறார்கள். அவர்கள் சொல்கிறபடியான நாவல்களைப் பதிப்பித்தால் சமுதாயம் சீராகுமோ இல்லையோ? அப்படி ஒரு புத்தகம் பதிப்பித்தால் என் மனசுக்கு ஒத்தடமாக இருக்கும் என்று நினைத்தேன்.
இலக்கிய நாவல்களில் முதலில் எதைப் பதிப்பித்தீர்கள்?
எழுத்தாளர் சுந்தர ராமசாமி இறந்த சமயத்தில் அவரைக் கவுரவிக்கும் விதத்தில் ‘புளிய மரத்தின் கதை’யை முதலில் கொண்டு வந்தேன். அதற்குப் பெரிய வரவேற்பு கிடைத் தது. தொடர்ந்து சாரு நிவேதிதா, சி.சு. செல் லப்பா, அசோகமித்திரன், ஹெப்சிபா ஜேசுதா சன், சா. கந்தசாமி நாவல்களை வெளியிட்டேன்.
அதை ஏன் தொடர்ந்து செய்யவில்லை?
இந்த மாதிரியான நாவல்களை வாசகர் களால் ஒரு மாதத்துக்குள் வாசிக்க முடிவதில்லை. விற்பனையும் பாதிக்கிறது. அதனால் ஆண்டுக்கு இரு முறை மட்டும் வெளியிடலாம் என்றிருக்கிறேன்.
எதிர்காலத் திட்டம் என்ன?
இணையத்திலேயே நாவல்கள் வாசிக்க https://noveljunction.com/ என்னும் தளம் தொடங்கியிருக்கிறேன். மேலும் இன்றைக்கு வரும் சிறுவர் பத்திரிகைகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் படிக்கக்கூடிய அளவில் அறிவார்த்தமாக வருகின்றன. சிறுவர்கள் தமிழ் படிப்பது மாதிரியான எளிமையான விஷயங்களைக் கொண்டு ஒரு பத்திரிகை கொண்டுவரும் திட்டமும் இருக்கிறது.
- மண்குதிரை, தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT