Published : 23 Oct 2016 11:28 AM
Last Updated : 23 Oct 2016 11:28 AM

வாசிப்பின் வழித்தடம்: ஒன்றிலிருந்து ஒன்று

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் தி.ஜானகிராமனின் ‘அடி’ என்ற நெடுங்கதை படித்தேன். அக்கதையின் சில காட்சிகள் மனத்தில் பதிந்திருந்தன. இவ்வளவு காலத்துக்குப் பிறகு திடீரென்று அக்கதையை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. தி.ஜானகிராமனின் மொத்தச் சிறுகதைத் தொகுப்பில் இக்கதை இல்லை. தொகுப்பாளர் சுகுமாரனிடம் விசாரித்தேன். அக்கதை குறுநாவல் வகையாக இருப்பதால் குறுநாவல் தொகுப்பில் இடம்பெறவிருப்பதாகத் தெரிவித்தார். அக்கதை இடம்பெற்ற பழைய சிறுகதைத் தொகுப்பை அனுப்பிவைத்தார்.

செல்லப்பாவுக்கும் பிறன் மனைவியான பட்டுவுக்கும் ஏற்படும் அழகான உறவைப் பற்றிய கதை அது. இருவருக்குமிடையிலான பிரியத்தையும் தேக உறவையும் இயல்பாக எழுதியிருப்பார். பெரும்பாலான சம்பவங்களை உரையாடல்கள் மூலமாகவே நகர்த்தியிருப்பார். தேக உறவுக்குப் பின் பட்டு கதவை லேசாகத் திறந்து வைத்துவிட்டு, நாற்காலியில் உட்கார்ந்த பின் நிகழும் உரையாடல் வெகு இயல்பு.

இக்கதையைப் படித்தபோது, ஜானகிராமனைப் பற்றி சுந்தர ராமசாமி எழுதியிருந்த ‘நினைவோடை’ நூல் நினைவுக்கு வந்தது. ஆரவாரமில்லாத, மென்மையான, பெண்மை கலந்தவராக அந்த நினைவோடையில் ஜானகிராமன் சித்திரப்படுத்தப்பட்டிருந்ததாக எனக்கு நினைவு. கதையில் வரும் செல்லப்பாவும், இதே சாயல்தான். அந்த ‘நினைவோடை’யை மீண்டும் படித்தேன். ஜானகிராமனின் வீட்டுக்கு சுந்தர ராமசாமி சென்றபோது, அவர் தரையில் உட்கார்ந்திருக்கிறார். தரையில் உட்கார்ந்து மடியில் பலகையை வைத்து எழுதுவதுதான் அவர் வழக்கம். சுந்தர ராமசாமிக்கும் அவர் நண்பர் எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பிக்கும் நாற்காலி போட்டு அமரச் சொல்கிறார். ஃபேன் ஓடவில்லை. உள்ளே போய் வாக்கிங் ஸ்டிக்கை எடுத்து லேசாகச் சுற்றிவிடுகிறார். ஃபேன் ஓடுகிறது. இப்படித்தான் ஒவ்வொரு தடவையும் செய்ய வேண்டும் என்கிறார் ஜானகிராமன்.

பின்னால் ஜானகிராமனின் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தபோது, சுந்தர ராமசாமியிடம் அவர் ஒரு நிகழ்வைக் கூறுகிறார். முதலிரவு அன்று ஜானகிராமன், கட்டில் ஓரத்தில் இருந்த மாலையைத் தூக்கித் தன் மனைவியின் கழுத்தில் போடுகிறார். அந்த மாலையை எடுக்காமல் வைத்திருக்குமாறும், தான் பாடி கச்சேரி முடிந்ததும் மாலையை எடுத்தால் போதும் என்றும் கூறுகிறார். நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் மனைவி, இவரை விசித்திரமான ஆள் என்று நினைத்துக்கொள்கிறார்.

‘மனசுக்குள் சந்தனத்தைப் பூசக்கூடிய தன்மை அவரிடம் இருந்தது’ என்று ஜானகிராமனைப் பற்றி சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார். இந்த ‘நினைவோடை’யையும் அதன் பின்பகுதியில் உள்ள பதிவுகளையும் படித்தபோது, எனக்கு சுந்தர ராமசாமியிடம் ஏற்பட்ட பழக்கம், சந்திப்புகள், நினைவுகள் வந்துவிட்டன.

பிறகு ஜானகிராமனையும், சுந்தர ராமசாமியையும் வேறு பெயர்களில் கதாபாத்திரமாக்கி ஜெயமோகன் எழுதிய ‘மயில் கழுத்து’ கதையைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது. ‘அறம்’ தொகுப்பில் இக்கதை உள் ளது. அக்கதையைப் படித்தேன். ஜானகிராமன், சுந்தர ராமசாமி ஆகியோரின் இயல்புகளை அருமையாகச் சித்தரித்திருப்பார். கதையில் ஜானகிராமனின் பெயர் ராமன். சுந்தர ராமசாமியின் பெயர் பாலசுப்பிரமணியன். ராமன் இன்னொருவரிடம் பாலசுப்பிரமணியனை அறி முகப்படுத்தும்போது கூறுவார், “பிளேடு மாதிரி ஆளு”.

இடையிடையே அண்மையில் நான் எழுதிய ‘பெண் காது’ என்ற கதை நினைவுக்கு வந்தது. மனதிலிருப்பதைக் கூறுவதை மனைவி கேட்காமல் சலனமின்றி இருப்பதால் அவளை விவாகரத்து செய்துவிட்டு ‘காது கேட்கும்’ ஒரு மனைவி வேண்டும் என்று விளம்பரம் செய்கிறான். விளம்பரத்தைப் பார்த்து ஒருத்தி வருகிறாள். அவன் கூறுவதை அவள் தலையை ஆட்டியபடி ‘ம்…’ கொட்டிக் கேட்டுக்கொண்டிருக்கிறாள். அதில் தொய்வும் மெலிவும் இல்லை என்று கதை முடியும்.

பெண் காது, பெண் வார்த்தைகள், பெண் அழகு, பெண் ஆதரவு, பெண் புத்திசாலித்தனம் என்று பலவுமாக ஆண் தேடிக்கொண்டே இருக்கிறான். காலையிலிருந்து மதியம் வரை ஒன்றிலிருந்து ஒன்று என்று ஒரு தொடர்பில் புத்தகங்களைப் படித்துவிட்டேன். இத்தொடர்பில் மறைபொருளாகப் பல விஷயங்கள் இருக்கின்றன என்று தோன்றியது.

பிறகு நல்ல தூக்கம். விழிக்கும்போது, காலை என்றே நினைத்துவிட்டேன். அப்படி ஒரு தூக்கம். மதியத் தூக்கத்தின் கனவில் ஜானகிராமனின் கதையில் வரும் ‘பட்டு’ வந்திருந்தாள்.

- சுரேஷ்குமார இந்திரஜித் சிறுகதையாசிரியர், கட்டுரையாளர். தொடர்புக்கு: sureshkumaraindrajith@gmail.com



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x