Published : 07 Jun 2014 10:22 AM
Last Updated : 07 Jun 2014 10:22 AM
உங்களைப் பொறுத்தவரை மகிழ்ச்சி என்பதன் வரையறை என்ன?
மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை. என்னைப் பொறுத்தவரையில் இயற்கையின் எழில், மற்றும் சின்னஞ்சிறு குழந்தையின் சிரிப்பு ஆகியவை அளிக்கும் மகிழ்ச்சி உணர்வுக்கு எதுவுமே இணையில்லை.
மிகப் பெரிய அச்சமாக இருப்பது எது?
கருத்துரிமைக்கும் பேச்சுரிமைக்கும் தடை போடக்கூடிய சர்வாதிகார அரசியல்.
நீங்கள் உங்களுடன் அடையாளம் காணும் வரலாற்று ஆளுமை?
யாரையும் எனக்குச் சொல்லமுடியாது. எல்லோரும் தனி நபரகவே செயல்படுவதாகப் படுகிறது. ஒருவரிலும் ஒரு தனி நபர் அடையாளம் காண இயலாது.
உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத குணம்?
எல்லோரையும் சடுதியில் நம்பும் குணம்.
உங்களுக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்?
ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர் என்று இல்லை. பல எழுத்தாளர்களின் எழுத்தின் அழகும் வசீகரமும், கருத்துச் செறிவும் என்னை அந்தந்தப் பருவத்திற்கேற்ப ஆட்கொண்டிருக்கின்றன..
உங்களுக்கு மிக விருப்பமான பயணம்?
ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்வது. துருக்கிப் பயணம் அபூர்வமான ஆச்சரியங்கள் கொண்டது.
ஆற்றவே முடியாத வருத்தம் எது?
என் அண்ணன் திடீரென்று இறந்த அன்று ஏற்பட்ட வருத்தம். அன்று காலை அவருடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள வேண்டும் என்று நினைத்தும் செய்யாமல் சோம்பல்பட்டது. அதேபோல எனக்கு மிகவும் நெருக்கமான அநுத்தமா அவர்கள் இறந்தபோது. தொலைபேசியில் பேச நினைத்துத் தள்ளிப்போட்டது. அவரது மரணச் செய்தி அறிந்ததும் துக்கப்பட்டது. இவை இரண்டும் ஆற்ற முடியாத துக்கங்கள்.
உலகிலேயே நீங்கள் மிகவும் விரும்பும் நபர்?
பலவீனங்கள் இல்லாத மனிதர் இருக்க முடியாது. பலரைக் கண்டு பிரமிப்பு உண்டு. முக்கியமாக மார்டின் லூத்தர் கிங் (அவருடைய ‘I have a dream' என்ற பேச்சைக் கேட்டால் கண்ணீர் வரும்) நெல்சன் மண்டேலா.
உங்களது தற்போதைய மனநிலை என்ன?
அமைதி.
எப்படி இறக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
யாருக்கும் பாரமாக இல்லாமல். அலுப்பு ஏற்படுத்தாமல். இரவு படுத்தால் காலை கண் விழிக்கக் கூடாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT