Published : 01 Oct 2016 10:12 AM
Last Updated : 01 Oct 2016 10:12 AM

நானும் என் வீடும்: என் வாசிப்பும் எழுத்தும்!

எழுதாமல்கூட இருந்துவிட முடியும்; வாசிக்காமல் இருக்கவே முடியாது...

ஒரு எழுத்தாளராகப் பலரிடமும் நான் எதிர்கொள்ளும் கேள்வி, “இவ்வளவு எழுதவும் தொடர்ந்து படிக்கவும் எப்படி நேரம் கிடைக்கிறது?” என்பது. திட்டமிடலே எனது செயல்பாட்டின் ஆதாரம். படிக்க/ எழுத வேண்டியவற்றைக் காலக்கெடுவுடன் திட்டமிட்டுக்கொள்வேன். அதை உறுதியாகப் பின்பற்ற முயல்வேன்.

படிப்பதற்கு என நான் தனியே நேரம் ஒதுக்குவதில்லை. ஒய்வு கிடைக்கும் நேரமெல்லாம் படித்துக்கொண்டிருப் பேன். வெளியூர் பயணங்களில் நிறைய நேரம் கிடைக்கும். படிப்பதற்காகவே எங்காவது மலைப் பிரதேசங்களுக்குச் சென்று தங்குவதும் உண்டு. எழுதாமல்கூட இருந்துவிட முடியும்; வாசிக்காமல் இருக்கவே முடியாது.

பள்ளி வயதிலிருந்தே புத்தகம் படிப்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறேன். வீட்டில் புத்தகங்கள் வாங்குகிற பழக்கம் இருந்ததே முதல் காரணம். பெற்றோர்களின் அன்பும் அக்கறையுமே பிள்ளைகளின் ஆளுமையை உருவாக்குகின்றன என்று நினைக்கிறேன். காமிக்ஸ் புத்தகங்களில்தான் எனது வாசிப்பு தொடங்கியது. பின்பு ரஷ்ய இலக்கியங்களின் அறிமுகம் கிடைத்தது. கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்த பின், சர்வதேச இலக்கியங்கள் அறிமுகம் ஆயின. ஷேக்ஸ்பியர், மில்டன், கதே, விக்தோர் ஹ்யூகோ, டிக்கன்ஸ், ஸ்டெந்தால், ப்ளோபெர், மாப்பசான், எட்கர் ஆலன் போ, ஹெமிங்வே, பாக்னர், மெல்வில் என நிறையப் படித்தேன். பின்பு லத்தீன் அமெரிக்க இலக்கியங்களைத் தேடிப் போனேன். எனது ஆதர்ச எழுத்தாளர்கள் என்று மூன்று பட்டியல் உண்டு. சர்வதேசத்தில் டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, போர்ஹெஸ், செகாவ், ஷேக்ஸ்பியர். தமிழில் புதுமைப்பித்தன், மௌனி, கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், ஜி.நாகராஜன், வண்ணநிலவன். இந்திய அளவில் கபீர், வைக்கம் முகம்மது பஷீர், சதத் ஹசன் மண்டோ, தாகூர், தாராசங்கர், ஆனந்த், ராஜாராவ்.

என் பதினாறு வயதில் அறிமுகமாகி இலக்கியத்தின் மேன்மையை உணரச்செய்து இன்றும் என்னை வழிநடத்திவருபவர்கள் கவிஞர் தேவதச்சனும் தோழர் எஸ்.ஏ.பெருமாளும்.

எனது லட்சியங்கள் சர்வதேச இலக்கியத்தால் உருவாக்கப்பட்டவை. பதினாறு வயதில் எழுத ஆரம்பித் தேன். எழுதிய கதையை ரகசியமாக ஒளித்துவைத்து எனக்கு நானே படித்துக்கொண்டிருந்தேன். ‘கணை யாழி’யில் வெளியான ‘பழைய தண்டவாளம்’ எனது முதல் கதை. பயணங்களே என்னை எழுத்தை நோக்கித் தொடர்ந்து தள்ளின. கங்கையில் குளித்தேன். பிரம்மபுத்திராவைக் கடந்து சென்றேன். இமயத்தின் அடியில் உறைபனியில் நடுங்கிக் கிடந்தேன். பாலைவன வெயிலில் ஒட்டக வண்டியில் பயணித்தேன். கொல்கத்தாவின் புழுதி படிந்த வீதிகளில் நடந்தேன். அஜ்மீரிலும் லடாக்கிலும் மீரட்டிலும் கான்பூரிலும் அலைந்த இரவுகள் மறக்க முடியாதவை. இலக்கில்லாமல் சுற்றி நான் கண்ட இந்திய அனுபவமே என்னை இடையறாது எழுத வைக்கிறது.

சில எழுத்தாளர்கள் தங்கள் சொந்த வாழ்க்கை அனுபவத்திலிருந்தே பெரிதும் எழுதுகிறார்கள். நானோ என் வாழ்க்கை அனுபவத்திலிருந்து ஐந்து சதவீதத்தை மட்டுமே எழுத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். கற்பனையின் முடிவற்ற சாத்தியங்களை எழுத்தில் உருவாக்க முயற்சிப்பவன் நான். இதுவரை 8 நாவல்களும் 250 சிறுகதைகளும் எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு நாவலும் தனித்துவமானது. கதைக்களம், மொழி, சொல்லும் முறை யாவும் மாறுபட்டவை. இதுபோலவே சிறுகதைகளில் பல்வேறுவிதமான உருவ, உள்ளடக்கங்களைக் கையாண்டிருக்கிறேன். ஒவ்வொரு கதையும் ஒரு சவால்.

ஒரு நாவலை எழுதுவதற்கு ஒன்றரை ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை தேவைப்படுகிறது. எழுதியதை எடிட் செய்வதற்கு ஆறு மாத காலமாகும். அச்சில் நானூறு பக்கங்கள் உள்ள ஒரு நாவல் முதல் வடிவத்தில் ஐநூறு அல்லது அறுநூறு பக்கங்கள் இருக்கும். எழுதுவதைக் காட்டிலும் சவாலானது அதை எடிட் செய்து குறைப்பது. அதேபோன்ற இன்னொரு சவால், கதைகளுக்குத் தலைப்பு வைப்பது. சில கதைகளுக்குத் தலைப்பு வைப்பதற்காக மாதக் கணக்கில் காத்திருக்கிறேன்.

நான் தினமும் ஐந்து ஆறு மணி நேரம் எழுதக் கூடியவன். ஒரு அலுவலகம் சென்று பணியாற்றுபவர் எப்படிக் காலையிலிருந்து மாலை வரை பணியாற்றுகிறாரோ அப்படி எழுத்துக்கு நேரம் ஒதுக்குகிறேன். வீட்டில் இருந்தாலும் அந்த நேரத்தில் என்னை யாரும் நெருங்க முடியாது. புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டு உடனடியாக அதை எழுத்துக்கு உறுதுணையாக்கிக்கொள்வேன். 1994 முதலாகவே கணினியிலேயே எழுதுகிறேன். இணையத்தின் வழியே பல்வேறு நாடுகளின் முக்கிய எழுத்தாளர்களுடன் மின்னஞ்சல் தொடர்பு வைத்திருக்கிறேன். விவாதக் குழுக்களுடன் இணைந்து கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் வந்தாலும்கூடப் பெரும்பாலும் பதில் எழுதிவிடுவேன். ஒன்றிரண்டு வரிகளுக்குள் மட்டுமே பதில் எழுதுவது என் பழக்கம்.

ஒருபுறம், மகாபாரதத்தில் வரும் கௌரவர்கள் நூறு பேரின் பெயர்களையும் நீங்கள் கேட்டாலும் நினைவிலிருந்து எப்போதும் என்னால் சொல்ல முடியும்; ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி படைப்புகளில் எதைக் கேட்டாலும் உடனுக்குடன் சொல்ல முடியும்; மறுபுறம், என் வங்கிக் கணக்கைக் கையாளும் கடவுச்சொல்கூட என் நினைவில் தங்குவதில்லை. வெளியூர் விடுதிகளில் தங்கும்போது, அறை எண்ணை மறந்துவிடாமல் இருக்க அறை எண்ணைப் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளும் அளவுக்கு ஒரு ‘கஜினி’ நான்.

மூளையின் ஒருபக்கம் மட்டுமே வேலை செய்கிறதோ என்னவோ!

- எஸ். ராமகிருஷ்ணன், தொடர்புக்கு: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x