Published : 18 Oct 2016 10:43 AM
Last Updated : 18 Oct 2016 10:43 AM

கடவுளின் நாக்கு 15: யாருக்கானது சட்டம்!

பல்வேறு துறைகள் சார்ந்து புதிது புதிதாக சட்டங்கள் இயற்றப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இந்தச் சட்டங்களின் பயன் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பற்றி மக்கள் அறிந்திருக்கவே இல்லை. உண்மையில் இந்தச் சட்டங்களில் பலவும் ஏட்டளவில் மட்டுமே உள்ளன. இவற்றை நடைமுறைப்படுத்தச் செய்வது மிகவும் கடினம்.

நீதியரசர் சந்துரு தனது உயர் நீதிமன்ற பணிக் காலத்தில் வழங்கிய தீர்ப்புகளைத் தொகுத்து, ‘அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்’ என்ற நூலாக வெளியிட்டிருக்கிறார். அதில், மிக முக்கிய சமூகப் பிரச்சினை களாக இருந்த வழக்குகளுக்கு அவர் எவ்வாறு தீர்ப்பு வழங்கினார் என்பதை சிறப்பாக விளக்குகிறார்.

‘அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காக இவ்வளவு சட்டங்கள் இருக்கின்றன. அதை செயல்படுத்த வேண்டியது நமது கடமை!’ என நீதியரசர் அழுத்தமாக குறிப்பிடுகிறார்.

பழங்குடி மக்களுக்கு நேர்ந்த துயரங்களுக்கு நாகரீகம் அடைந்த நாமே முக்கிய காரணம். பழங்குடி மக்களுக்குள் சமூகத் தடைகளை உருவாக்கி, புரியாத சட்டங்களின் மூலம் அவர்களின் வாழ்வுரிமையைப் பறித்து வருகிறோம்.

தாதுக் கொள்ளைக்காக காடு சூறையாடப்படுகிறது. வனவாசி கள் வெளியேற்றப்படுகிறார்கள். தங்கள் அடையாளங்களை, உரிமைகளை இழந்த மக்கள் குழுவாக இணைந்து போராடுகிறார்கள். இப்பிரச்சினை வடகிழக்கு மாநிலங்களில் இன்று வளர்ந்தோங்கி நிற்கிறது.

‘நீதி என்பது வெறும்கால் கொண்டவனை கடிக்கும் பாம்பு’ எனச் சொல்கிறார் எழுத்தாளர் எடுவார்டோ கலியானோ. அது உண்மை. பணம் படைத்தவனுக்கு சட்டம் வளையவே செய்கிறது. வசதியானவன் செய்யும் குற்றங்கள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை.

ஆப்பிரிக்க பழங்கதை ஒன்றிருக்கிறது. அதில் பாம்புகள் ஒன்றுசேர்ந்து புதிதாக சட்டம் ஒன்றை உருவாக்கு கின்றன. அதன்படி ‘இனிமேல் எலிகளின் வளைக்குள் முன்அனுமதியில் லாமல் போகக் கூடாது. மீறிப் போவது குற்றம். அப்படி போகிற பாம்பு தண்டிக்கப்படும்’ என அறிவிக்கிறார்கள்.

எலிகளின் நலனுக்காக தாங்கள் கொண்டுவந்துள்ள இந்தச் சட்டத்தைப் பற்றி எடுத்துச் சொல்ல எலிகளைத் தேடி ஒரு பாம்புச் சென்றது.

பாம்பை கண்டதும் ஒரு எலிகூட வெளியே வரவில்லை. ஒரு எலி வளையின் முன்பாக பாம்பு நின்றுகொண்டு ‘‘நண்பனே… என்னைக் கண்டு பயப்படாதே! உன் அனுமதியின்றி உன் வீட்டுக்குள் நான் வர மாட்டேன். அப்படி வருவது குற்றம் என ஒரு புதிய சட்டம் இயற்றியிருக்கிறோம். அதை உன்னிடம் தெரிவிக்கவே வந்தேன்’’ என்றது.

எலிக்கு ஒன்றுமே புரியவில்லை. அது பதுங்கிக் கொண்டு வெளியே வரவே இல்லை.

‘தான் சொன்ன சட்டம் எலிக்குப் புரியவில்லையோ…’ என நினைத்த பாம்பு, எலி வளைக்குள் போய் அங்கிருந்த எலியைப் பிடித்து தின்றுவிட்டுச் சொன்னது:

‘‘இப்படிச் செய்வது தவறு என சட்டம் இயற்றியிருக்கிறோம். புரிகிறதா?’’

பாம்பின் செயலைக் கண்ட எலிக் குஞ்சுகள் பயந்து ஒடுங்கியிருந்தன.

பாம்பு சொன்னது: ‘‘என் மீது இப்போது நீங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். நீதி மன்றத்துக்குச் செல்லுங்கள்!’’

இதைக் கேட்ட எலிக் குஞ்சுகளில் ஒன்று கூட வாயைத் திறக்கவில்லை.

‘‘முட்டாள் எலிக்குஞ்சுகளே! உங்களுக்கு எப்படித்தான் சட்டத்தைப் புரிய வைப்பது…’’ என்று சொல்லியபடியே ஒவ்வொரு எலியாகப் பிடித்துத் தின்னத் தொடங்கியது.

கடைசி எலிக் குஞ்சு சொன்னது: ‘‘மன்னிக்கவும்! இந்தச் சட்டம் எதற்காக? இதனால் ஒரு பயனும் இல்லை. சட்டத்தை உண்டாக்கியது நீங்கள். நீதி விசாரணை செய்யப்போவதும் நீங்கள். உங்களை எதிர்த்து நாங்கள் எப்படி வழக்காட முடியும்? எங்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்?

‘‘அடேய் முட்டாள் எலிக்குஞ்சே! சட்டத்தைதானே உங்களுக்கு அறிமுகம் செய்து காட்டுகிறேன். இது கூடவா புரியவில்லை. இப்படி சட்டத்தை மதிக்காமல் இருந்தால் உன்னை தண்டிக்கத்தானே வேண்டும்?’’ என்று சொல்லியபடி அந்த எலிக் குஞ்சையும் பிடித்துத் தின்றுவிட்டது.

பாம்புகள் எலியின் நலனுக்காக சட்டம் போட்டால் இப்படித்தான் இருக்கும்!

பழங்குடி சமூகத்தில் அதிக சட்டங்கள் இல்லை. ஆனால், கறாரான நீதியிருந்தது. அவர்கள் இயற்கையோடு வாழ்ந்தபோதும் இயற்கையைச் சூறையாடவில்லை. சுய லாபத்துக்காக விற்று பணமாக்கவில்லை. ஆனால், வெளியில் இருந்த வந்த மனிதர்களே வனவளத்தைக் கொள்ளையடித்தார்கள். அதோடு பழங்குடி மக்களின் நலனுக்காக என புதிய வரிகளையும் சட்டங்களையும் அறிமுகம் செய்தார்கள்

பழங்குடி மக்கள் இலைஆடைகளை அணியக் கூடாது என ஆங்கில அதிகாரிகள் ஒரு சட்டம் கொண்டுவந்தார்கள். அதன்படி அவர்களின் இலை ஆடைகள் பறிக்கபட்டு தீவைத்து எரிக்கப்பட்டன. தைக்கப்பட்ட துணி ஆடைகளை அவர்களுக்கு மாற்றாக தந்தார்கள். அந்த அதிர்ச்சியை ‘ஜுயாங்’ பழங்குடி மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நாங்கள் இயற்கையை ஆடையாக உடுத்திக் கொள்கிறோம். அதில் என்ன தவறு என போர்க் குரல் எழுப்பினார்கள். அந்த எழுச்சி அதிகாரத்தால் அடக்கி ஒடுக்கப்பட்டது.

பழங்குடி சமூகத்தில் பெண்களுக்கு உயர்ந்த இடம் இருந்தது. அவர்கள் சுதந்திரமாக செயல்படக்கூடியவர்கள். கடின உழைப்பாளிகள். உடலும் மனமும் முதிர்ச்சி அடைந்த பிறகே திருமணம் செய்துகொள்வார்கள். திருமணத்துக்கு முன்பு பாலுறவு அனுமதிக்கபட்டது. தோல்வியுற்ற திருமணத்தில் இருந்து மணவிலக்கு பெற்றுக் கொள்ளமுடியும். கணவன் இறந்துவிட்டால் மறுமணம் செய்துகொள்ளலாம். பல இனங்களில் பெண்களுக்கு சொத்துரிமை உண்டு. எப்போது காட்டுக்குள் வாகனங்களின் ஒலி கேட்கத் தொடங்கியேதோ, அதுதான் பழங்குடி மக்களின் சாவு மணியானது. காலனிய கொள்கைகள் காரணமாகவே பழங்குடி மக்களின் தனித்துவமிக்க பண்பாடு அழித்து ஒழிக்கபட்டது.

பழங்குடி இனத்தின் உணவளிக்கும் தெய்வமான ‘அன்னதேவ்’ காட்டைவிட்டுத் தப்பியோடி ரயிலேறி மும்பை நகரத்தில் ஒளிந்துகொண்டுவிட்டது. வற்றாத உணவு தரும் தெய்வம் வசிப்பதால்தான் நகரவாசிகள் உண்டு கொழுக்கிறார்கள். ஊதிப் பெருக்கிறார்கள். தங்களை கடவுளும் கைவிட்டுப் போக, காட்டில் தாங்கள் அநாதை களைப் போல துரத்தப்படுவதாகவே பழங்குடிகள் கூறுகிறார்கள்.

பழங்குடி மக்களை மிருகக் காட்சிச் சாலையில் உள்ள மிருகங்களைப் போல வேடிக்கை பார்ப்பதை நாம் கைவிட வேண்டும். பழங்குடிகளுக்கான பொருளாதாரத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். நாம் அனைவருமே இயற்கையின் பகுதிகள்தான். இயற்கைக்கு எதிராக இழைக்கப்படும் எந்த ஒரு குற்றமும் மானுடத்துக்கு எதிரான குற்றமே. ஆகவே, பழங்குடிகள் காட்டில் இருந்து வெளியேற்றப்படும்போது அதற்கான எதிர் குரலை ஒலிக்க வேண்டியது நமது சமூக கடமை!

- கதைகள் பேசும்…

இணையவாசல்: >ஆப்பிரிக்க நாட்டுபுறக் கதைகளை வாசிக்க

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x