Published : 28 Oct 2016 08:48 PM
Last Updated : 28 Oct 2016 08:48 PM
இது என்ன அநியாயம்? சமையல் கலையைப் புத்தகத்திலிருந்து தெரிந்துகொள்ள வேண்டுமா? சமையல், பெண்களின் இயல்பான குணங்களில் ஒன்று என்றுதானே நினைத்திருந்தோம். சமையல் தெரியாத பெண்களும் இருக்கிறார்களா என்று அதிர்ந்துபோனார்கள் அன்றைய மக்கள். 70 ஆண்டுகளுக்கு முன்பு சொப்பு வைத்து விளையாடும் பருவத்திலேயே சிறுமிகள், சமையலைக் கற்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்படிச் சமையலைக் கற்றவரில் ஒருவர்தான் மீனாட்சி அம்மாள்.
19 வயதில் திருமணம். 22 வயதில் கணவரை இழந்தார். தனியாளாகக் கைக்குழந்தை, மச்சினர், மாமியார் என்று குடும்பத்தைப் பராமரித்துவந்தவர், சமையலிலும் பிரமாதப் படுத்தினார். மீனாட்சி அம்மாளின் கைப்பக்குவத்துக்கு மிகப் பெரிய ரசிகர் வட்டம் இருந்தது. இந்தியாவின் வெவ்வேறு பாகங்களில் பரவியிருந்த அவரது உறவினர்கள், மீனாட்சி அம்மாளிடம் சமையல் குறிப்புகளைக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் சளைக்காமல் எழுதிக் கொடுத்துக்கொண்டே இருப்பார்.
இவரது உறவினர் கே.வி.கிருஷ்ண சாமி ஐயர், இப்படி ஒவ்வொருவருக்கும் சமையல் குறிப்பு எழுதிக் கொடுப்பதற்குப் பதில், ஒரு புத்தகமாகக் கொண்டு வந்தால் எல்லோருக்கும் பயன்படுமே என்று ஆலோசனை வழங்கினார். மீனாட்சி அம்மாளும் புத்தகம் எழுதினார். சமையல் புத்தகம் என்றதும் பலரும் இதை யார் வாங்கப்போகிறார்கள் என்று கிண்டல் செய்தார்கள். பதிப்பகங்கள் எதுவும் புத்தகம் வெளியிட முன்வரவில்லை. தானே புத்தகத்தைக் கொண்டுவர முடிவு செய்தார் மீனாட்சி அம்மாள். தன் நகைகளை விற்றார். தானே புத்தகத்தைப் பதிப்பித்தார்.
1951-ம் ஆண்டு தமிழின் முன்னோடி சமையல் புத்தகம், ‘சமைத்துப் பார்’ வெளிவந்தது. புத்தகத்துக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று மீனாட்சி அம்மாளே எதிர்பார்க்கவில்லை. புத்தகம் குறித்துப் பலரும் சிலாகித்துப் பேச ஆரம்பித்தனர். விற்பனை பெருகியது. திருமணமாகி வெளிநாடு செல்லும் பெண்கள், விசாவை மறந்தாலும் மீனாட்சி அம்மாள் புத்தகத்தை மறக்கவில்லை. ஐந்தே ஆண்டுகளில் தன் புத்தக வருமானத்தை வைத்து, மயிலாப்பூரில் ஒரு வீட்டை வாங்கினார் மீனாட்சி அம்மாள்.
மிளகாய்த் தூள், சாம்பார்ப் பொடி என்று சொன்னால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்குவத்தில் வைத்திருப்பார்கள். அவற்றால் மீனாட்சி அம்மாளின் சுவையைக் கொடுக்க முடியாது. அதனால் பொடி வகைகள் எல்லாவற்றையும் சேர்த்து அடுத்த புத்தகத்தைக் கொண்டுவந்தார். அதற்கும் அமோக வரவேற்பு! விழாக்கள், திருமணம் போன்றவற்றுக்கு எப்படித் தயாராவது, பண்டிகைக் கால உணவுகள் போன்ற பல விஷயங்களை வைத்து, அவர் மறைவுக்குப் பின்பு மூன்றாவது புத்தகம் வெளிவந்தது.
அதற்குப் பிறகு சமையல் புத்தகங்களைப் பலரும் எழுத ஆரம்பித்தனர். விதவிதமான சமையல் புத்தகங்கள் வெளிவந்தன. சைவச் சமையல், அசைவச் சமையல், வட்டாரச் சமையல், கிராமத்துச் சமையல், மாநிலச் சமையல், அயல்நாட்டுச் சமையல், மைக்ரோவேவ் சமையல், சிறுதானியச் சமையல் என்றெல்லாம் தினுசு தினுசாக உணவு வகைகள் உருவாகிக்கொண்டும், புத்தகங்கள் வெளிவந்துகொண்டும் இருக்கின்றன.
இன்றளவும் ‘சமையல் புத்தகமா?’ என்று இளக்காரமாகப் பார்க்கப்பட்டாலும் விற்பனையில் முதலிடம் சமையல் புத்தகங்களுக்குத்தான். சமையல் குறிப்புகளை இணைப்புப் புத்தகங்களாக வழங்கும்போது பத்திரிகைகளின் விற்பனை கணிசமாக அதிகரிப்பதால் சமையலுக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்துவருகிறார்கள். தொலைக்காட்சி, யூ டியூப், ஃபேஸ்புக் என்று சமையல் கலை அடுத்தடுத்த பரிணாமங்களை அடைந்துவருகிறது. அதே போல மீனாட்சி அம்மாளின் புத்தகங்களும் மாற்றத்தை ஏற்று, நவீனமாகிக்கொண்டே வருகின்றன.
மீனாட்சி அம்மாள் காலத்தில் கூட்டுக் குடித்தனமாக இருந்தனர். ஒரு வீட்டில் ஏராளமானவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு ஏற்ப அளவுகளை அவர் கொடுத்திருக்கிறார். கொட்டைப் பாக்கு அளவு புளி, குழிக் கரண்டி எண்ணெய், ஓர் ஆழாக்கு அரிசி போன்ற பதங்கள் எல்லாம் இப்போது வழக்கில் இல்லை. நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கான அளவுகள், தற்காலத்தில் இருக்கும் சொற்களைப் பயன்படுத்தி, புத்தகங்களை நவீனப்படுத்தி, கொண்டுவந்திருக்கிறார் அவரது பேத்தி ப்ரியா ராம்குமார்.
“சமைத்துப் பார் ஆங்கிலத்தில் வெளிவந்து 48 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழ், ஆங்கிலம் தவிர, மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் புத்தகங்கள் கொண்டுவந்தோம். நாங்கள் விளம்பரம் எதுவும் செய்வதில்லை. வாங்கிப் பயன்படுத்தியவர்களின் வாய்மொழி மூலமாகவே 65 ஆண்டுகளாக விற்பனையில் முன்னிலையில் இருக்கின்றன. இதுவரை 45 பதிப்புகளைக் கண்டுவிட்டன. அடுத்து மின்புத்தகங்களாகக் கொண்டுவரும் திட்டத்தில் இருக்கிறோம்” என்கிறார் ப்ரியா ராம்குமார்.
“சித்திரம், சிற்பம், சங்கீதம் போல சமையலும் உயரிய கலை. பல வண்ணங்களைக் குழைத்து, அற்புதமான சித்திரத்தைத் தீட்டுவது போல பல பொருட்களைச் சேர்த்து, பக்குவப்படுத்தி, ஒப்பற்ற உணவுப் பண்டத்தை உருவாக்குகிறார்கள் சமையல் கலை வல்லுனர்கள்” என்று சொன்ன மீனாட்சி அம்மாள், சமையல் கலைஞராகவும் எழுத்தாளராகவும் பதிப்பாளராwகவும் வெற்றி பெற்று, பிறருக்கும் வழிகாட்டியிருக்கிறார்.
மனிதர்களுக்குப் பசியும் ருசிக்கான தேடுதலும் இருக்கும் வரை சமையல் கலைக்கான தேவையும் இருந்துகொண்டே இருக்கும். காலத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டுவரும் மீனாட்சி அம்மாளின் புத்தகங்கள், இன்னும் பல தலைமுறை களுக்குச் சமையல் கலையைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்!
- எஸ். சுஜாதா, தொடர்புக்கு: sujatha.s@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT