Published : 16 Oct 2016 12:27 PM
Last Updated : 16 Oct 2016 12:27 PM
“எழுதணும்ன்னு ஆசைப்படுறேன் சார்…” இரண்டாவது சந்திப்பின் போது சுந்தர ராமசாமியிடம் சொன்னேன். “நல்ல ஆசைதானே” என்றார். சிரித்தேன். அவர் சிரிக்காமல் ஆமாம் என்பது போலத் தலையசைத்தார். சிறு இடைவெளிவிட்டு “பயமா இருக்கு” என்றேன். இப்போது மெல்லச் சிரித்தார். “என்ன பயம்… எழுத்து மேலயா..?” “இல்ல. எழுதுவது நல்லா வருமான்னு”
“ஓ.. அது இன்னும் விஷேசம் ஆச்சே.! ஆனா எழுத்து மேல பயம் இருந்தா ஒண்ணுமே செய்ய முடியாது. காலம் ஓடிடும்.” மேலும் மனதளவில் நெருங்கி அமர்ந்தேன். “எழுதுகிற வரைக்கும் அப்படியெல்லாம் பலதும் தோணும். ஆனா உட்கார்ந்து எழுத ஆரம்பிச்சிடணும். இப்போ எழுதுறதுக்கே பயந்தா பின்னாடி எல்லாம் இன்னும் பயம் வந்திடும். நாளைக்கு எழுதற பத்தி இன்னைக்கே ஆசைப்படணும். என்னென்ன திட்டம் இருக்கு. எப்படி அதை செயல்படுத்துறதுன்னு யோசனை ஓடணும்.”
பெரிய விஷயமெல்லாம் சின்னப் பையனிடம் பேசுவதாகத் தோன்றியது. ஆனால் அவர் சம அளவில் வைத்தே எப்போதும் உரையாடுபவராக இருந்தார். “ரைட்டிங்கிறது ஒரு ட்ரீம் இல்லையா.. ஆனா அது பகல் கனவா போயிடாம பாத்துக்கணும்” என்று கூறி கண்ணாடிக்குள் உருளும் கண்மணிகளை மேலும் சிறியதாக்கிப் பற்கள் தெரியாமல் உதடு விரித்தார். அந்த ‘ட்ரீம்’ என்னும் சொல் ஏனோ அந்தச் சூழல், சொன்ன தொனி போன்றவற்றால் மனதில் அப்படியே தங்கிவிட்டது.
“ரொம்ப முக்கியமான விஷயம் என்னன்னா பிரசுர நோக்கத்தில கவனமா இருக்காம எதையாவது எழுதிப்பார்த்துக்கிட்டே இருங்க. சொல்ல வந்ததை சரியா சொல்ல முடியுதான்னு பார்த்தா உங்களுக்கே தெரியும்” என் முகத்தைப் பார்த்த பிறகு இன்னும் பொறுமையாக, “நீங்க வழியில பார்க்கிற மனிதர்கள், இயற்கை, பாதிக்கிற சம்பவம்ன்னு எழுதிப் பார்க்கலாம். அப்பறம் இதழ்களுக்குக் கடிதம் எழுதறது, படிச்ச புத்தகத்தை பத்தி மதிப்புரை மாதிரி எழுதப்பார்க்கறது எல்லாம் நல்ல பயிற்சி” என்றார்.
அவரைச் சந்தித்து விட்டுத் திரும்பும் போதெல்லாம் இது போன்ற சொற்களை எடுத்து வந்திருக்கிறேன். கைகளில் கூழாங்கற்களை உருட்டுவதுபோலப் பயணம்தோறும் அவற்றை மனதிற்குள் உருட்டுவது வாடிக்கையாக இருந்திருக்கிறது.
பின்னால் இருக்கும் இரண்டை எடுத்துக்கொண்டேன். இலக்கிய இதழ்களுக்கு கடிதங்கள் - குறிப்பாக அவற்றில் வெளியான சிறுகதைகள் குறித்து - அவ்வப்போது எழுதினேன். நூல்களை மதிப்பிட்டு எழுதியதும் நல்ல பயிற்சியாக அமைந்தது. மேலும் ஒன்று சொன்னார்: “விடாம வாசிக்கணும். எழுத்தாளனுக்கு இலக்கியம் வாசிச்சா மட்டும் போதும்னு ஒரு அபிப்ராயம் இருக்கு. அப்படியில்ல. அறிவுலகத்தில் இதுதான் வாசிக்கணும்ன்னு இல்லை. வேற வேற துறையில் இருக்கிறதையும் வாசிக்கலாம். அது எப்போ எங்கே உங்களுக்கு யூஸ் ஆகும்னு சொல்லவே முடியாது.” கொஞ்சம் இடைவெளி விட்டு, “அப்படி யூஸ் ஆகாம போனாத்தான் என்ன? ஒண்ணைக் கத்துக்கிட்டீங்க இல்லயா.! பிறகு எதைப் படிக்கணுங்கறது அவங்க அவங்க டேஸ்ட்டைப் பொறுத்தது. ஆனா படிக்கணும். தொடர்ச்சியா வாசிக்காத ஒருத்தன் நல்லா எழுதறான்னு சொன்னா, அதை நம்ப மாட்டேன்” என்று நிறுத்தினார்.
அவர் தேர்ந்த உரைநடையாளர் என்ற போதும் மனதையும் மொழியையும் புத்துணர்வு கொள்ளச் செய்வது கவிதையே என்று சொல்லிவந்தார். அவரது உரைநடை ஆக்கங்கள் பல, இன்று எழுதப்படும் கவிதை போலவே இருப்பதைக் காணலாம். ஆனால் தன் உரைநடையில் தொட்ட இடங்களை விடவும் குறைவான விஷயங்களையே தன் கவிதைகளில் தொட்டிருக்கிறார். அதை அ.கா. பெருமாளுக்கு அளித்த நேர்காணலில் அவரே ஒப்புக்கொள்ளவும் செய்திருக்கிறார். ஆனால் உரையாடலிலும் கடிதங்களிலும் கவித்துவத்தை அவர் விட்டுவிடவேயில்லை. ஒரு இசை ஆல்பத்தைக் கேட்ட பிறகு அது குறித்து தன் நண்பரிடம் சொல்லும்போது ‘அது மனதைப் பிடுங்கி ஆகாயத்தில் எறிந்தது’ என்று சொல்லியிருக்கிறார்.
“வழவழப்பு மட்டும் இல்லாம பாத்துக்கணும்” என்று எழுத்து பற்றிய வேறொரு உரையாடலில் சொன்னார். “கச்சிதம் பத்தி சொல்றீங்களா?” என்றேன். “அதுவெல்லாம் எழுதி முடிச்ச பிறகு. ரைட்டிங்குள்ளயே அது வராம இருக்கிறது நல்லது. அதுவும் ஆரம்பத்துலயே அதுல கவனமா இருந்தா பின்னால சிரமப்பட வேண்டியதேயில்லை” என்றார். நான் வாசித்த நூல்கள், அது பற்றிய என் கருத்துக்களை அவருக்கு எழுதும் கடிதங்களில் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அதில் நான் சென்றுவந்த இலக்கிய கூட்டங்களைப் பற்றித் தவறாமல் குறிப்பிடுவேன். ஒரு பதிலில் “அதையெல்லாம் தெரிவுசெய்துதான் செல்ல வேண்டும். அதுதான் ஆரோக்கியத்துக்கு நல்லது” என்றிருந்தார். அன்று அவ்வரிகள் புரிந்த உதவி மிகப் பெரிது. சுந்தர ராமசாமியிடம் பேசும்போதும் கடிதத்திலும் முதலில் எப்போதும் அவர் கேட்கும் கேள்விகள் இவை: ‘சமீபத்தில் என்ன புத்தகம் வாசித்தீர்கள்?’ ‘ஏதேனும் புத்தகம் வேண்டுமா? தேவையெனில் நூலகத்திலிருந்து அனுப்பச் சொல்கிறேன்.’
‘சமீபத்தில் என்ன புத்தகம் வாசித்தீர்கள்?’ என்று அவர் கேட்கும் கேள்வியை அவர் மறைவுக்கு ஒரு மாதத்திற்கு முன் அவருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டிருந்தேன். “நேரம் குறைவு. பல மரத்தைக் கண்ட தச்சன் ஒன்றையுமே வெட்ட மாட்டான் என்பது போலப் போய்க்கொண்டிருக்கிறது” என அமெரிக்காவில் இருந்து பதில் எழுதினார். ஆனால், அவர் ஏற்கெனவே வெட்டிச் சீராக்கி வைத்திருக்கும் மரங்கள் கண் முன்னே ஆயிரக்கணக்கான பக்கங்களாக விரிந்திருக்கின்றன. நாம் ஆசைப்பட்டு ஆனால் வெட்டப்படாமல் இருக்கும் மரங்கள் நம் நினைவை ஊடறுக்கின்றன.
கே.என்.செந்தில், எழுத்தாளர். தொடர்புக்கு: knsenthilavn7@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT