Published : 28 May 2016 09:59 AM
Last Updated : 28 May 2016 09:59 AM

ஒரு சாமானிய சரித்திரம்

பழுத்த அரசியல்வாதி, இடதுசாரி, தலித் மக்களுக்கான அரசியல் ஆளுமை, தெற்கெல்லை விடுதலைப் போராளி, பத்திரிகையாளர், இலக்கியவாதி, பேச்சாளர்... இவை எல்லாவற்றையும்விட, எளிமையும் அன்புமே உருவாகக் கொண்ட மனிதர் கொடிக்கால் சேக் அப்துல்லாஹ். இவரைப் பற்றி முக்கிய ஆளுமைகள் இந்த நூலில் எழுதியிருக்கும் விஷயங்கள், இந்தத் தலைமுறைக்குப் புதியவை, தேவையானவை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் கொடிக்கால் மாவட்டச் செயலாளராக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்வை விவரிக்கிறார் பொன்னீலன். அதன் சாராம்சம் இது: காசநோய் முற்றிய ஒரு பெண்ணை மருத்துவமனையில் சேர்க்கச் சொல்லி கொடிக்காலிடம் அழைத்துவந்தார் ஒருவர். அவரை நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தார் கொடிக்கால். அழைத்துவந்தவர் கிளம்பிவிட்டார். மறுநாள் அந்தப் பெண் இறந்துவிட்டார். அழைத்து வந்த ஆளும் வரவில்லை. பிணத்தைப் புதைக்க வேண்டும். கொடிக்காலின் கையில் பணம் இல்லை.

கட்சியின் மாவட்டக் குழுவில் இருந்த நீலகண்டனும் இவரும் மலிவான சவப்பெட்டி ஒன்றை வாங்கி, இருவர் மட்டும் தூக்கிச் செல்கிறார்கள். வழியில் சவப்பெட்டி உடைந்து பிணம் கீழே விழுகிறது. திரும்பவும் சவப்பெட்டியைக் கயிற்றால் கட்டித் தூக்கிச் செல்கிறார்கள். சுடுகாட்டுக்குச் சென்றால், அங்கு சாதியின் பெயரைச் சொல்லி ஆளாளுக்குத் துரத்துகிறார்கள். பல மணி நேரம் அலைந்து, வேறு வழியின்றி பழையாற்றின் கரையின் சாய்வுப் பகுதியில் பள்ளம் தோண்டி நல்லடக்கம் செய்தார்கள். எந்த மாவட்டச் செயலாளர் செய்வார் இந்தப் பணியை?

கொடிக்காலுக்கு யார் மீதும் கோபம் கொள்ளவும் தெரியவில்லை. இதை ஜெயமோகன் பதிவுசெய்திருக்கிறார். ஒரு கூட்டத்தில் ஜெயமோகன் பேசிக்கொண்டிருந்தபோது, கொடிக்கால் எழுந்து ஏதோ விளக்கம் கேட்கிறார். நிகழ்வில் லயித்திருக்கும் ஜெயமோகன், ‘நாங்கள் உங்கள் பேச்சைக் கேட்க இங்கே வரவில்லை’ என்று சற்றுக் கடுமையான தொனியில் சொல்கிறார். அன்றைய தினம் ஜெயமோகன், சுந்தர ராமசாமியைச் சந்தித்தபோது,

“கொடிக்கால் இந்த நகரத்தின் ஆன்மா. அவரை அவமதிப்பது என்னை அவமதிப்பது போன்றது” என்று புரியவைக்கிறார். பின்னர், கொடிக்காலிடம் ஜெயமோகன் மன்னிப்புக் கேட்டபோது, ‘என்ன இப்படி மன்னிப்பெல்லாம் கேட்கிறீர்கள்’ என்று அவரை தழுவிக்கொண்டிருக்கிறார். குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க நடந்த போராட்டத்தில் கொடிக்காலின் பங்கு குறித்து தோழர் நல்லகண்ணுவிடம் இருந்து அறிய முடிகிறது.

ப.சிவதாணுவிடமிருந்து கிடைக்கக் கூடிய தகவல் புதிதானது. புணே ஒப்பந்தத்துக்குப் பிறகு தனது உண்ணாவிரதத்தைத் திரும்பப் பெற்ற காந்தி, ஒரு லட்சம் பிராமண இளைஞர்களைத் திரட்டி, நாடு முழுவதுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுடன் சேர்ந்து வாழ அனுப்பினார். அப்படி கொடிக்காலின் தந்தையார் வீட்டுக்கு வந்தவர் காசிவாசி பாபு ராமானுஜதாஸ் என்கிறார். சுருக்கமாகச் சொல்வதானால், படைப்பாளிகள் ஒன்று திரண்டு கொடிக்கால் என்கிற அழகிய ஓவியத்தை உயிரோட்டமாகத் தீட்டியிருக்கிறார்கள்!

- டி.எல்.சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x