Published : 13 May 2016 10:00 AM
Last Updated : 13 May 2016 10:00 AM
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெயிலில் அலைந்துவிட்டு வீட் டுக்கு வந்து ஓரிடத்தில் உட்கார்ந் தேன். உட்கார்ந்தவன் மாலை வரை எழுந்திருக்கவும் இல்லை, உணவும் உண்ணவில்லை. என் மனைவி அந்தக் கட்டிடத்தில் இருந்த இருவரை அழைத்து என்னைப் படுக்கையில் போட வைத்திருக்கிறாள். அடுத்த நாள் காலையும் எழுந்திருக்கவில்லை. அதற்கடுத்த நாள் காலையும் எழுந்திருக் காததால் என்னை மருத்துவமனைக்கு என் மகன் எடுத்துச் சென்றான். அங்கு எனக்கு ரத்தத்தில் உப்புக் கரைசல் ஏற்றப்பட்டது. 10 நாட்களுக்குப் பிறகும் 30 ஆயிரம் ரூபாய்க் கட்டணத்துக்கும் பிறகு நான் வீடு திரும்பினேன்.
ஏதோ ஒரு கணக்கில் ரத்தத்தில் உப்பு அல்லது சோடியம் 135 இருக்க வேண்டும். எனக்கு 126 அல்லது 128-லேயே நிற்கிறது. உடலில் உப்பு குறைந்துவிடுவதில் இன்னொரு விளைவு, பல ஆண்டு நினைவுகள் போயே போய்விடுகின்றன. அத்துடன் சூழ்நிலைக்குப் பொருத்தமே இல்லாத பேச்சும் நடத்தையும். நான் நடு வீதியில் மயங்கி விழுந்து, சங்கடம் விளைவித்து விடுவேனோ என்ற மித மிஞ்சிய பயம். பயம் மனித மீட்சியின் முதல் எதிரி.
10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தீவிர நலக் குறைவு - சமீபத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை, தமிழ்மகன் எழுதிய ‘மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்’ (உயிர்மை வெளியீடு) என்ற நூல் வெளியீட்டின் போது நிகழ்ந்தது.
அன்று மாலை 5 மணி வரை மூளை நன்றாகவே இருந்தது. அப்புறம் தாங்க முடியாத பயம் பிடித்துக் கொண்டது. வண்டியில் ஏறுவது இறங்குவது, அப்புறம் படிகள் எல்லாமே என்னை விபத்துக்குள் தள்ளக் காத்திருப்பது போலவே இருந்தது. தமிழ்மகனின் அந்த நூலை ‘புரூஃப்’ நிலையிலேயே முழுக்கப் படித்திருந்தேன். குறிப்புகளும் எடுத்திருந்தேன். ஆனால், நான் எடுத்த குறிப்புகளே எனக்குப் புதிர்களாக இருந்தன. ஒன்றுமே புரியவில்லை. அங்கு குழுமியிருந்தவர்களிடம் விடை பெறுகிறேன் என்று சொல்லவில்லை. ‘என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று சொன்னது நினைவில் இருக்கிறது.
உடலில் உப்புச் சத்து குறைந்தால் ஒரு முதலுதவி இருக்கிறது. இது மருந்துக் கடைகளில் மட்டும் கிடைக்கும். நீண்ட நாள் வைத்தியத்துக்கு ‘எலெக்ட்ரால்’ என்ற பொடி இருக்கிறது. இந்தியாவில் இன்றும் சிசு மரண விகிதம் அதிகமாக இருக்கிறது. நூறு குழந்தைகள் இறப் பில் தொண்ணுறு உடல் உலர்ந்து இறக்கின்றன. இந்த ‘எலெக்ட்ரால்’ உலக சுகாதார அமைப்பின் மூலமாகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. குழந்தை சோர்ந்து கிடந்தால் உடனே நிறைய வெந்நீருடன் இந்த ‘எலெக்ட்ரால்’ பொடியைக் கலந்து குழந்தைக்குத் தர வேண்டும். எனக்கு இதெல்லாம் என் நினைவில் வரவில்லை. கீழே விழுந்து மற்றவர்களுக்கும் என் குடும்பத் தாருக்கும் சங்கடம் தரப் போகிறேன் என்ற அச்சமே மேலோங்கி இருந்தது. என் உடல்நிலை ஓரளவு சீரடைய இரண்டு நாட்கள் பிடித்தது.
இதைத் தவிர நான் என் எண்பத்தைந் தாவது வயதில் கற்ற பாடம்… ஒரு நூலை ‘புரூஃப்’ நிலையில் ஆசிரியரைத் தவிர மற்றவர் படிக்கக் கூடாது. சென்னை பற்றிய ஒரு நூறாண்டு வரலாறு ‘மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்’ நூலில் இருக்கிறது. இதற்கு நாம் தமிழ்மகனின் அப்பாவுக்கும் நன்றி செலுத்த வேண்டும். ஓர் ஊரைப் பற்றி, ஒரு சிறிய நூலில் இவ்வளவு விஷயங்களைக் கூறிவிட முடியுமா என்ற வியப்பு ஏற்படுகிறது. அப்புறம் புகைப்படங்கள். என் நண்பர் மீனாட்சி சுந்தரம் முகநூலில் கடந்த காலச் சென்னைக் காட்சிகளை வெளியிடுகிறார்.
என் தகப்பனார் உயிருடன் இருந்த வரை, வருடம் ஒருமுறை தென்னாட்டுக்கு வருவோம். இன்றும் அந்த நாட்கள் நிழலாக நினைவில் இருக்கின்றன. அதே நேரத்தில் ஓர் அயோக்கிய மருமகனால் அவர் மிகவும் பிரியமாக வளர்த்தப் பதினாறு வயது மகள் தினம் அடித்து உதைக்கப்படுவதை அறிந்து ஒரு வார்த்தை சொல்லாமல் அற்பாயுளில் உயிரைவிட்டார். அவர், என்னையும் என் சகோதரிகள் அனை வரையும் அழைத்துக் கொண்டு உயிர் காலேஜ், செத்த காலேஜ், மூர் மார்க்கெட், ரேக்ளா பந்தயம் எல்லாவற்றையும் காட்டியிருக்கிறார். தமிழ்மகனின் நூலை யும் அதிலுள்ள புகைப்படங்களையும் பார்த்தபோது அவருடைய தந்தையும் என் தந்தை போல் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.
நான் சென்னை பற்றி இரு ‘காஃபி டேபிள்’ புத்தகங்கள் பார்த்திருக்கிறேன். பெரிய அளவுப் பக்கங்கள், வழவழ என்றிருக்கும் தாள்கள், பெரிய அளவில் வண்ணப்படங்கள்... எனப் பல கவர்ச்சி அம்சங்கள் இருந்தும் பிரதியில் ஜீவனிருக்காது. அதாவது, சென்னையை அவர்கள் அறிவது தகவல்களால்தான். தமிழ்மகன் சென்னையை நேசிக்கிறார், கூவம் ஆற்றில் நறுமணம் வீசாதபோது கூட!
மிகச் சில எழுத்தாளர்களைத் தவிர அநேகமாக எல்லாரும் கதைக் களத்தை கதைக்குத் தேவையான அளவுக்கு விவரித்துவிடுவார்கள். ஒரு மகத்தான உதாரணம், சார்லெஸ் டிக்கன்ஸ். இவருடைய நாவல்கள் லண்டன் நகரத்தின் பல குறைபாடுகளை எடுத்துக் கூறி அவற்றைச் சரிப்படுத்த வழிவகுத்ததாகச் சொல்வார்கள். இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் சமூகத் தேவையைப் புறக்கணிப்பதில்லை. இன்று முறையான கல்வி பரவலாகக் கிடைக்கிறது, அதுவே காரணம் என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள். 50 ஆண்டுகள் முன்பும் கல்வி இருந்தது. ஆனால் அது கல்வி கற்றார் அனைவரிடமும் சமூகத் தேவையை உணர்த்தியதா?
என் சிறுகதை ஒன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சுந்தரம் என்ற ஆங்கிலப் பேராசிரியர் ஐ.சி.எஸ். பரீட்சைக்குப் போகத் தீவிரமாகத் தயார் செய்து கொண்டிருந்தார். ஏதோ ஓர் படிவத்தில் ஒரு ஐ.சி.எஸ். அதிகாரியின் கையெழுத்துத் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் அறிந்த அல்லது உறவினரான அதிகாரி கையெழுத்துப் போட மறுத்துவிட்டார். பேராசிரியர் பல பல்கலைக்கழகங்களில் பணி முடித்து ஓய்வு பெற்ற நாளில் இதை என்னிடம் சொன்னார். இது ஐ.சி.எஸ்.காரர்கள் மனநிலை.
அரவிந்தர், சுபாஷ் சந்திரபோஸ், ஆர்.சி. தத் போன்றவர்கள் ஐ.சி.எஸ். பரீட்சையில் தேறிய பிறகு அதைப் புறக் கணித்தார்கள். சுமார் நூறாண்டுகளுக்கு முன்பே ஆர்.சி.தத் தன் பட்டத்தைத் துறந்து ராமாயணம், மகாபாரதம் இரண்டையும் ஆங்கிலக் கவிதையாக மொழிபெயர்த்தார். பேராசிரியர் சுந்தரம் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். பெங்களூருவில் வைத்தி நாதன் என்றொரு ஆங்கிலப் பேராசிரியர் கூறினார்: “எவ்வளவோ பாதிரிமார்களும் தமிழ் - ஆங்கில மொழி அறிஞர்களும் திருக்குறளை ஆங்கிலப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களுடைய மொழிபெயர்ப்புகளில் பொருள் இருக்கிறது. சுந்தரம் மொழி பெயர்ப்பில் பொருளும் இருக்கிறது, கவிதையும் இருக்கிறது.”
சுந்தரத்தின் மொழிபெயர்ப்பை ‘பென்குவின்’ நிறுவனம் வெளியிட்டது. அவர்களுடைய பல வெளியீடுகளைப் போலவே சுந்தரம் நூலும் கடை அலமாரி அடித் தட்டில் அநாதையாகக் கிடக்கும்.
- புன்னகை படரும்…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT