Published : 28 May 2016 09:56 AM
Last Updated : 28 May 2016 09:56 AM
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1802) பிறந்து 1885-ம் ஆண்டு மே மாதம் 22 அன்று மறைந்த புகழ்பெற்ற பிரெஞ்சு ஆசிரியர் விக்தோர் ஹ்யூகோ, தன்னுடைய முதல் நாவலை 16 வயதிலும், கடைசி நாவலை 72 வயதிலும் எழுதினார். அவர் வாழ்ந்த நூற்றாண்டின் சமுதாயப் பிரச்சினைகள் அனைத்தும் அவருடைய எழுத்தில் இடம்பெற்றிருந்தன.
எழுத்தினால் மட்டுமே சமுதாய மாற்றங்களை ஏற்படுத்த முடியாதென்பதை உணர்ந்திருந்தாலும், எழுத்தில் பிறக்கும் சிந்தனைகளும் அதையொத்த செயல்பாடுகளும் படிப்படியாகச் சமூக மேம்பாட்டுக்கு வழி வகுக்கும் என்று நம்பினார். ‘மரண தண்டனைக் கைதியின் இறுதி நாள்’ என்ற அவருடைய நாவல் வெளிவந்து 150 ஆண்டுகளுக்குப் பிறகு, 1981-ல் பிரான்ஸில் மரண தண்டனை தடைச் சட்டம் அன்றைய அரசால் அமலுக்குக் கொண்டுவரப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் அவருக்கு நன்றியுடன் நினைவஞ்சலி செலுத்தினார்கள்.
பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு குமரன் வளவனின் கச்சிதமான மொழிபெயர்ப்பில் நேர்த்தியாக வெளியிடப்பட்டிருக்கும் இந்தச் சிறிய புத்தகம், இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாகவும் இருக்கிறது.
மரண தண்டனைக்கு ஆதரவாகவும் எதிராகவும் பேசும் இரு தரப்பினருமே ஆழ்ந்து படிக்க வேண்டிய புத்தகம். இதைப் படிக்கும் தமிழ் வாசகர்கள் இரண்டு விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். முதலாவதாக, 180 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் பிரான்ஸில் அன்று நிலவிய சூழலைப் பிரதிபலிக்கிறது. மரண தண்டனைக் கைதிகள் நடத்தப்பட்ட விதம், தெருவில் அவர்களை அழைத்துச் சென்ற திறந்த வண்டி, பார்வையாளர்களிடையே நிலவிய எதிர்வினை... அதுபோன்ற நிலை இன்றில்லையென்றாலும், மனிதநேய அடிப்படையில் ஆசிரியர் கோடிட்டுக் காட்டும் சில ஆதாரக் கருத்துகளில் மாற்றம் எதுவும் இல்லை.
ஜடமாக்கும் சிறைவாசம்
இரண்டாவதாக, இதை இலக்கியப் படைப்பு என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். சமுதாயப் பிரக்ஞையை விழிப்படையச் செய்வதே இதன் நோக்கம். தன்னுடைய முன்னுரையிலும் ஆசிரியர் இதையே வலியுறுத்துகிறார்: “கடந்த கால சமுதாயக் கட்டடத்தை மூன்று தூண்கள் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தன: மத குருக்கள், அரசர், தூக்கிலிடுபவன். ஆனால், வெகு காலத்துக்கு முன்பே ஒரு குரல் ஒலித்தது: மத குருக்கள் ஒழிந்துவிட்டார்கள்! சில காலம் முன்பு, இன்னொரு குரல் ஒலித்தது: அரசர்கள் ஒழிந்துவிட்டார்கள்! மூன்றாவது குரலை எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது: தூக்கிலிடுபவர்கள் ஒழியட்டும்!” (1831).
ஆனால், பழங்காலக் கட்டடத்தின் சில கற்கள் சரிந்தாலும், அதிர்ஷ்டவசமாகப் புதிய கட்டடம் உருவாவதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். “மத குருக்களுக்காக வருந்துபவர்களிடம் சொல்லலாம்: கடவுள் இருக்கிறார். அரசர்களுக்காக வருந்துபவர்களிடம் சொல்லலாம்: தாய்நாடு இருக்கிறது! ஆனால், தூக்கிலிடுபவர்களுக்காக வருந்துபவர்களிடம் சொல்ல இதுவரை எதுவுமில்லை.” இந்த நிலையில்தான் ஆக்கபூர்வமான மாறுதல்களை அவர் எதிர்நோக்கினார்.
முற்போக்குச் சிந்தனை ஒன்றுக்கு உணர்வுபூர்வமான கதை வடிவம் தருவதுதான் விக்தோர் ஹ்யூகோவின் குறிக்கோளாக இருந்ததென்று மொழிபெயர்ப்பாளர் குமரன் வளவன் குறிப்பிடுகிறார். மரண தண்டனை பெற்றவனின் கொடூரமான சிறைவாசம் அவனை ஒரு ஜடமாக ஆக்கிவிடுகிறது. ‘நான்’ என்ற சொல்லைவிட ‘என்னை’ என்ற சொல்லை அவன் அதிகமாகப் பயன்படுத்துகிறான் என்று குமரன் வளவன் பின்னுரையில் குறிப்பிடும்போது இந்த நுட்பத்தைக் கோடிட்டுக் காட்டுகிறார்.
மூலத்தின் தொனியை அவர் தெளிவாக உள்வாங்கியிருப்பது நன்றாகத் தெரிகிறது. அதே சமயம், மற்ற சிறைவாசிகளின் மொழியும் பேச்சுவழக்கும் அவனுக்கு விநோதமாக இருக்கின்றன: அசாதாரண சக்தியுடன், அச்சுறுத்தும் தனித்துவத்துடன் சில வாக்கியங்கள்... உதாரணம்: தூக்கிலிடப்படுவதற்கு ‘விதவையை மணப்பது’, தூக்குக் கயிறு, தூக்கில் தொங்கியவர்களின் ‘விதவை’ என்பதைப் போல.
கொடூரமான எள்ளல்
சிறையில் நிலவும் சூழலைக் கைதியின் உள்ளுணர்வு கொடுமையாக உணர்கிறது. “அங்கே அனைத்தும் வாடிவிடுகிறது, ஒரு பதினைந்து வயதுச் சிறுமியின் பாடலும்கூட! அங்கே ஒரு பறவையைக் கண்டால் அதன் சிறகின் மீது சேறு; அங்கு ஒரு அழகான பூவைப் பறித்து முகர்ந்தால், அதிலும் துர்நாற்றம்.”
கைதியின் தலை வெட்டப்படுவதற்கு முன் அவனுடைய சட்டையின் கழுத்துப் பட்டையைக் கத்தரிக்கிறான் ஒரு சேவகன். அப்போது தவறுதலாகக் கழுத்தில் கத்தி பட்ட மாத்திரத்தில், நடுங்கிவிட்டிருந்த கைதியிடமிருந்து ஒரு அமுங்கிய குரல் எழுகிறது. ‘மன்னிக்கவும், காயப்படுத்திவிட்டேனா’ என்று சேவகன் கேட்கிறான். அப்போது விக்தோர் ஹ்யூகோ எழுதுகிறார்: “மரண தண்டனை நிறைவேற்றுபவர்கள் மென்மையான நபர்கள்.” என்ன கொடூரமான எள்ளல்!
‘இலக்கியப் படைப்புகள், அரசியல் போராட்டங்கள் என்று பிரித்துப் பார்க்காத’ விக்தோர் ஹ்யூகோ, எல்லா விதத் தண்டனைகளின் தன்மையையும் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறார். மேலும், சமுதாயப் பிரச்சினைகளில், எல்லா விதமான தூக்கு மேடைகளிலும் அரசியல்ரீதியான தூக்கு மேடையே மிகக் கொடியது என்று கருதினார். இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த பிரெஞ்சுப் புரட்சியையும் அவர் மறக்கவில்லை. தன்னுடைய முன்னுரையில் அவர் சொல்கிறார்:
“புரட்சிக் காலங்களில், முதல் தலை உருளும்போதே கவனமாக இருக்க வேண்டும். மக்களின் பசியை அது தூண்டிவிடும்.” புரட்சிகள் இடித்து நொறுக்காத ஒரே அமைப்பு தூக்கு மேடை என்றும் அவர் சொல்கிறார்.
மரண தண்டனைக்கு எதிரான புத்தகம்
1957-ல் வெளிவந்த ‘கியோட்டின் குறித்த சில சிந்தனைகள்’ என்ற பிரெஞ்சு புத்தகத்தில் ஆல்பெர் காம்யுவும், ஆர்தர் கெஸ்லரும் தார்மிக, மனிதநேய அடிப்படையில் மரண தண்டனைக்கு எதிரான வாதங்களை முன்வைத்து நீண்ட கட்டுரைகளை வெளியிட்டார்கள். மரண தண்டனை எதிர்ப்பாளர்களுக்கு இன்றுவரை ஒரு பாடப் புத்தகமாக அது இருக்கிறது. இவர்களின் முன்னோடி விக்தோர் ஹ்யூகோ.
விக்தோர் ஹ்யூகோ காலத்துக்கும் இன்றைய சமூகத்துக்கும் இடையே எவ்வளவோ வித்தியாசங்கள் இருக்கலாம். அவர் கண்ட சமூகத்தின் லட்சியக் கனவு இது “...குற்றங்கள் நோய்களாகக் கருதப்பட வேண்டும்; நீதிபதிகளுக்குப் பதிலாக மருத்துவர்களும், வதை முகாம்களுக்குப் பதிலாக மருத்துவமனைகளும் அதிகரிக்க வேண்டும். சுதந்திரமும் ஆரோக்கியமும் ஒன்றையொன்று ஒத்திருக்கும். இரும்புக்கும் நெருப்புக்கும் பதிலாக, களிம்பும் தைலமும் பயன்படுத்தப்படும். கோபத்தினால் தீர்க்கப்படும் பிரச்சினைகளுக்குப் பரிவு தீர்வு காணும்...”
- வெ.ஸ்ரீராம், ‘அந்நியன்’, ‘குட்டி இளவரசன்’ போன்ற நூல்களை பிரெஞ்சு மொழியிலிருந்து மொழிபெயர்த்தவர்,
தொடர்புக்கு: ramcamus@hotmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT