Last Updated : 03 May, 2016 11:20 AM

 

Published : 03 May 2016 11:20 AM
Last Updated : 03 May 2016 11:20 AM

கதாநதி 16: சாரா- கடல் கடந்த கண்ணீர்!

சாரா எழுதி அண்மையில் வெளிவந்திருக்கும் நாவல் ‘சபராளி அய்யுபு’. சாராவின் இயற்பெயர் ஜபினத். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவருடைய ‘காட்டான்’ என்கிற கவிதைத் தொகுதி மண்ணில் படர்ந்த மரபு மற்றும் வாழ்க்கை மதிப்பீடுகளைப் பேசியது. குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடத்துவதில் ஈடுபாடுகொண்டவர் சாரா.

சபுர் என்னும் அரபிச் சொல்லுக்குப் பயணம் என்று பொருள். இஸ்லா மிய மக்கள் பகுதியில் பிழைப்புக் காக வளைகுடாவுக்குப் பயணப் படுகிறவர்களைச் சபுராளி அல்லது சபராளி என்பர். அப்படிப் பயணம் மேற்கொள்பவன் அய்யுபு என்பவன். அவன் கதை இது.

நாவல் கதை அல்ல. நாவலில் கதை இருக்கக்கூடும். தத்துவத்தின் பிம்ப வடிவம் என்கிறார் அல்பேர் கேமுய். வாழ்தலின் ஊடாக எழுதுபவருக்குக் கிட்டிய ஒரு புதிய ஒளி தெறிப்பு.

பிழைப்புக்காக வளைகுடா நாட்டுக்குப் புறப்படும் அய்யுபுவின் குழந்தைப் பருவம் முதலாக அவனது சுமார் 35 வயதுப் பிராயம் வரையுமான வாழ்க்கைப் பதிவாக இருக்கிறது, இந்த நாவல்.

10 மணிக்கு மேல் வரும் ஐஸ்காரரின் குரல், அய்யுபு போன்ற குழந்தைகளை விடவும் கம்மாவுக்கே அதிக உற்சாகம் தருகிறது. மாடியில் உப்புக் கண்டம் காயவைத்துக் கொண்டிருந்த கம்மா தட்டுத் தடுமாறிக் கம்பியைப் பிடித்துக் கொண்டு அறைக்குள் திரும்பி, 5 ரூபாய் நோட்டை எடுத்து அய்யுபுக்குத் தருகிறாள். சேமியா ஐஸை அய்யுபுக்கும், கிரேப் ஜுஸை ராபியாவுக்கும், இரண்டு ஐஸைத் தனக்குமாக பங்கு பிரித்துக் கொடுத்துவிட்டுத் தன் அறைக்குள் வந்து, இரண்டு ஐஸ்களையும் தின்றபிறகுதான் படபடப்பு அடங்கியது, 70 வயது கம்மாவுக்கு. முதிர்ந்த வயதுப் பாத்திரங்கள் அழகாக உருவாகி இருக்கிறது, நாவலில்.

அய்யுபுவின் அப்பா கரீமும் ஒரு சபராளிதான். அவர் மலேயாவுக்குப் போனார். வரும்போது மகனுக்கு வாட்சும், மொபைல் போனும் வாங் கித் தந்து அசத்தினார். பிள்ளை சந்தோஷமாக இருக்கட்டும் என்று அய்யுபுவின் அம்மாவுக்குச் சொன்னார். அவர் திரும்பிச் சென்ற சில நாட் களுக்குள் அவர் மரணச் செய்தி வருகிறது.

சபருக்கு வந்து, கைக் காசைக் செலவு செய்து, பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் வாங்கி தந்து அவர்கள் மகிழ்வதைப் பார்க்கும்போது, சபரா ளிக்கு வெளிநாட்டில் பட்ட அவமானங் களும், விட்ட கண்ணீரும் உலர்ந்து போகும். சில நாட்கள்தான் திரும் பும்போது குடும்பமே துக்கத்தில் புரளும். விமானம் ஏறி ஒருவனுக்கு அடிமைச் சேவகம் செய்யப் புறப்படும் சபராளியின் மனம் மரத்துப் போகும். வாழ்க்கையின் அர்த்தமின்மை, ஒரு பூதம் போல மருட்டும். நாவல் முழுதும் பல இடங்களில் இம் மனோபாவத்தைப் பதிவு செய்திருக்கிறார் சாரா. ஒரு சபராளி சாவது என்பதன் அர்த்தம், ஒரு குடும்பம் அநாதையானது என்பதாக இருக்கும்.

அப்படித்தான் ஆனான் அய்யுபுவும். வயது 20. ஆண் பிள்ளை. குடும்ப பாரத்தை இழுக்க அந்தல் காளை மண்ணடிக்கு வந்து சேர்கிறது. மண்ணடிக்கு வந்து சேர்வது என்பது வெளிநாட்டுக்குப் போவதன் முன் தயாரிப்பு. மண்ணடியில் ஒரு அறை. அங்கு சுண்டெலி, வெள்ளை எலி. பெருச்சாளி, எலி செத்த நாற்றம் மற்றும் அய்யுபு ஆகியோர் தங்கி இருக்கிறார்கள்.

மண்ணடிவாழ் ஒரு பகுதி மக்கள் பற்றி ஆசிரியர் சாரா செய்யும் சித்தரிப்பு, சரியானதாக இல்லை. கோடி ரூபாய் செலவிட்டு கட்டிய வீட்டின் முன், மரத் துண்டுகளால் ஆன ஒரு பெட்டியை வைத்து, பண்டம் பாத்திரங்களை வைத்துக் குடும்பம் நடத்துகிற மக்கள் பற்றி வெறுப்பான குரலில் பதிவு செய்கிறார் சாரா. கூலி வேலையும், இரவுக் குடியும், பச்சைப் பேச்சும், அவர்களின் சடங்கும்... என்று வர்ணனை போகிறது. அப்படி வாழ அவர்கள் என்ன வரமா வாங்கி வந்தார்கள்? இவர்கள் இப்படி வாழ யார் காரணம்? அதை ஆராய்வது அல்லவா கதை, இலக்கியம் எல்லாம்.

அய்யுபுவுக்கு ஈடுபாடு வருகிறது ரஷ்மி மேல். அவன் என்ன செய்வான் பாவம்! மன்மதன் கைவரிசை. அது நிறைவேறவில்லை.

ஏதோ ஒரு வழியாகத் துபாயில் ஒரு அரபிக்குக் கார் டிரைவராகப் பணியில் அமர்ந்தான். இப்படியாகச் சபர் ஆகிறான் அய்யுபு. பிழைக்கப் போன எல்லா இந்தியருக்கும் நண்பன் ஆகிறான் அவன்.

பணி இடத்தில் அகமது பாயும் மொய்தீன் பாயும் சக ஊழியர்கள். நட்பு ஒரு கொண்டாடப்பட வேண்டிய மனித உன்னதம். அதை அறிந்தவர்கள் அவர் கள். ஒருமுறை அகமது பாய் சபருக்குச் சென்றார். மொய்தீன் பாய் திணறிப் போனார். மனம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். செய்தி அறிந்த அகமது, விடுமுறையை கேன்சல் செய்துவிட்டு ஓடிவந்துவிட்டார். சபருக் குச் சொந்த ஊருக்கு வந்து குடும்பத் தோடு வாழும் பயணிகள், உயிரைக் கொடுப்பார்கள். விடுமுறையை வீணாக்க மாட்டார்கள். பிரிந்த மூன்று ஆண்டுகளை 30 நாட்களில் அவர்கள் வாழ வேண்டி இருக்கிறதே!

சாராவின் நல்ல எழுத்து, பல இடங்களில் பிரகாசிக்கிறது. பைத்தியம் என்று புறக்கணிக்கப்பட்ட பித்தளைப் பூட்டு என்பவரோடு அக்கறை ஏற்பட்டு, அவரின் நண்பனாகிறான் அய்யுபு. இது போன்ற, மனப்பிறழ்வு கொண்ட மனிதருக்கு அன்பின் ருசியே மருந்தாகிறது. கொஞ்ச கொஞ்சமாக அந்த மனிதர் குணத்தின் முதல்படியை மிதிக்கிறார். ஒரு நல்ல நாவலுக்கு இதுபோன்ற, கதைக்கு நேரிடையாகத் தொடர்பு இல்லாத, ஆனால் இருக்க வேண்டிய விஷயங்களை எழுதுவது ஒரு உயர்வு. இதுபோல, அய்யுபுவின் அப்பா கரீமுக்கும், சந்திரன் என்பவருக் கும், நாசுவன் மம்மீதுக்கு மான சிநேகம், மிகுந்த வாசனையுடன் சொல்லப்பட்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது. அது அத்தர் வாசனை பூசிய நட்பு!

அய்யுபு, அவன் அம்மாவின் அண்ணன் மகளை நெஞ்சுக்குள் வைத்திருந்தான். அதுதான் உகந்த இடம் என்று காதலர்கள் நம்புகிறார்கள்! தங்கச்சிகள் திருமணம் முடிந்து, திருமணம் செய்து கொள்ளலாம்தான். ஆனால் காமிலாவின் தந்தை நெருக்குதல் கொடுத்துத் திருமணத்தை ஒப்பேற்றிவிட்டார். அவர் வில்லன் போல் தோற்றம் அளிக்கிறார். ஆனால், மனிதனாகவும் இருக்கிறார். மனிதர்கள் அப்படித்தான்!

அய்யுபுவின் அறை நண்பன் சாதிக். அவன், தன் மகளோடு வெப் கேமில் பேசிக் கொண்டிருக்கிறான். ஹாஜரா, இப்படிக் கேள்வி போடுகிறாள்.

‘‘அத்தா எப்ப வருவீங்க?’’

‘‘சீக்கிரம் வந்துடறேன் செல்லம்.’’

‘‘ஒன், டு, ஃபை, ஃபோர், டென் டேய்ஸ் ஆயிடுச்சி அத்தா’’ என்று கைவிரல்களையும் கால் விரல்களையும் காட்டி அங்கலாய்க்கிறாள்.

‘‘ஹாஜரா பாப்பாவுக்கு பொம்மை கார், டிரெஸ் எல்லாம் வாங்கனுமில்லே செல்லம். அத்தா வாங்கிட்டு ஓடி வந்துடறேன்ம்மா.’’

‘‘வேணாத்தா… நான் எதுவுமே கேக்க மாட்டேன். நீங்க வாங்க அத்தா. நான் மணி சேவ் பண்ணி வெச்சிருக்கேன். உங்களுக்கு பொம்ம கார், டிரெஸ்ஸு எல்லாம் வாங்கித் தர்றேன்’’ என்று சொல்லும்போது கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. சாதிக்கால் அதற்கு மேல் தொடர முடியவில்லை.

வெளிநாட்டுக்குக் கருத்த முடியோடு சென்று வெளுத்த முடியோடு திரும்பும் மனிதர்களின் ஒப்பிட முடியாத சோகத்தை, சில இடங்களில் சாரா பதிவு செய்திருக்கிறார்.

அய்யுபுவுன் வெளிநாட்டு வாழ்க்கை யின் அடர்ந்த துன்பம், தனிமை பதிவு செய்யப்பட்டிருப்பது குறைவே ஆனாலும், நாவலின் நோக்கம் நிறை வேற உதவுகிறது. ஆனால், அவன் மனைவி குழந்தையுடன் வந்து, கவிந்த வறுமையுடன் போராடுகிற பெரும் துயரம் போதுமான கவனத்தைப் பெறாமல்போகிறது. இன்னும் கூடுத லாக இப்பகுதியைச் சாரா சொல்லியிருக் கலாம் என்று தோன்றுகிறது.

நம் சொல்லேர் உழவர்கள் அதிகம் உழாத ஒரு களத்தைச் சாரா தேர்ந் தெடுத்ததும் அதை எழுதியதும் வரவேற்கத்தக்க விஷயம். குடும்பம் என்ற பாரத்தை மனதிலும் உடம்பிலும் சுமந்து, அது குடும்பத்துக்குத் தெரி யாமலும் காப்பாற்றிகொண்டு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊர் திரும்பி, பிறகு நெஞ்சில் ரத்தம் கசிய பயணப்படும் சபராளியின் வாழ்க்கை மிகுந்த துயரம் கொண்டது. ‘இசுலாமிய கிராமங்களின் இளைஞர்கள் பல நூறு பேர்களின் துயரப் பெருமூச்சை, மவுன அழுகைகளைக் கேட்டிருப்பாய் காற்றே…’ என்று வேறு சந்தர்ப்பத்தில் எழுதினார் பாரதி. இன்னும் பொருந்து கிறது, நம் இன்றைய இசுலாமியச் சகோதரர்களுக்கு,

சாராவின் அடுத்த நாவல் இன்னும் அடர்த்தி கூடிய, கலை வெற்றி பெற்ற நாவலாக வெளிவரப் போவதை எதிர்பார்க்கிறேன்.

இந்த நாவலை, ஹெச்.1/ ஹெச்.2-65 ஆர்.எம்.காலனி, திண்டுக் கல்லில் இயங்கும் ‘வலசை’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

- நதி நகரும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x