Published : 08 May 2016 01:24 PM
Last Updated : 08 May 2016 01:24 PM

புனைவு என்னும் பதிர்: சித்திரமாய்த் தீட்டப்பட்ட கதை

தலித் கிறிஸ்தவக் குடும்பத்தைப் பற்றிய கதை ‘நிலை'. ஆனால் தலித் இலக்கியம் என்கிற வில்லை ஒட்டப்படாத கதை. கூர்ந்து படிக்காதவர்களுக்குக் கதையில் தலித் பற்றிய குறிப்பு எங்கே வருகிறது என்கிற வியப்பு தோன்றுமளவுக்குப் பூடகமாகச் சொல்லப்பட்டிருக்கும் கதை. சிகரங்களைத் தொட்ட சிறுகதையாளர்களைப் போலவே பூமணி கதைகளின் தொனியும் பூடகமானது.

ஒரு வாழ்வைச் சித்திரமாகத் தீட்ட முனைகையில் அரை குறையாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கிறுக்கப்பட்ட கோடுகள் அனைத்தும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஓவியமாகிவிடுவதைப் போல வாழ்வின் குறுக்குவெட்டில் முழுமையைக் கொண்டுவந்துவிடுவதில் விற்பன்னர் பூமணி.

கதை, மைய நிகழ்வான சர்ச்சுக்குச் சென்று காணிக்கை கொடுத்துவிட்டுத் திரும்புவதிலிருந்து தொடங்குகிறது. ஆனால் அது அப்படிச் சொல்லப்படவில்லை. மையப் பாத்திரம், சர்ச்சிலிருந்து குடும்பத்துடன் திரும்புவது மட்டுமே சொல்லப்படுகிறது. நினைவின் பின்னோட்டமாகக் காலையில் பாஸ்டர் திடுதிப்பென்று வீட்டுக்கு வந்துவிட்டது கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து சர்ச்சுக்குச் செல்ல நேர்வதுவரை ஒரே கோட்டில் சொல்லப்படுகிறது. இடையிடையில் எண்ண ஓட்டங்களில் கதை மாந்தர்களின் பின்புலம் துல்லியப்படுகிறது. அதன் பின்னர் கதையின் இறுதிப் பகுதியில் ஒரு முரணுடன் இலக்கணச் சுத்தமாக முடிகிறது கதை.

‘நல்ல வேளை பழைய சோற்றை கொஞ்சம் முந்தியே சாப்பிட்டு முடித்திருந்தான்’ என்பது ஒரு தகவலாகவும் அவனது மன ஓட்டமாகவும் தொடக்கத்திலேயே கூறப்படுகிறது.

‘இந்த நாலு வருசமாக பாஸ்டரை இவ்வளவு கிட்டத்தில் பார்த்ததில்லை அவள்’ என்று மனைவியின் பார்வையில் ‘இடைவெளி’ துலக்கம் பெறுகிறது.

இந்தக் கோடுகள் சொற்பொழிவாகச் சொல்லப்படாமல் கரிக்கோட்டுத் தீற்றலாகத்தான் தீட்டப்படுகின்றன.

சர்ச்சுக்குக் காணிக்கை கேட்க வீடு தேடி வரும் பாஸ்டர், அலுவலகம் செல்பவனான ஜேக்கப், நிறைமாத கர்ப்பிணியாக நகரக்கூட சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் அவனுடைய மனைவி, பள்ளிக்குச் சென்றிருக்கும் பையன், வீட்டின் உள் அறையில் தூளியில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தை, கதையின் பிற்பாதியில் சில நொடிகளில் மட்டுமே முகம் காட்டும் எதிர் வீட்டு அல்போன்ஸ் பற்றிய எண்ணங்கள் என்று இவ்வளவுதான் கதைக்குள் நிகழ்பவை. ஆனால் வாசகன் தன் மனத்திரையில் காண்பதோ நுட்பமான விவரிப்புகளுடன் தெரியும் திரைப்படம்.

பாஸ்டரின் காரியார்த்த வருகை, அல்போன்ஸைப் போலவே தானும் மதிக்கப்பட ஏங்கும் ஜேக்கப்பின் மனம், அதற்காகத் தன் சக்தியையும் மீறி அவன் செலுத்தும் காணிக்கை, அதன் காரணமாக பாஸ்டரிடமே கடன் வாங்க நேரும் நெருக்கடி, காணிக்கையாகப் பெற்றுக்கொள்கையில் முகமலர்ந்து ஏற்றவர் அதில் பத்தில் ஒரு பங்கைக் கைமாற்றாகத் திருப்பிக் கொடுக்கையில் கடுமையுடன் கொடுத்து அனுப்பும் அவலம், கையாலாகாக் கோபமாக மனைவியிடம் கொட்டித் தீர்ப்பது ஆகியவை ஏழே பக்கங்களில் புள்ளிவைத்த கோலமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

கதையின் கருவை, அது சொல்லும் செய்தியை, அப்படியே யார் வேண்டுமானாலும் சொல்லிவிடலாம். அதை ரத்தமும் சதையுமான மனித வாழ்க்கையாக சட்டகத்துள் செதுக்கப்பட்ட ஓவியாமாகச் சொல்லவே கலைஞன் தேவைப்படுகிறான்.

நுட்பமான நுணுக்கமான பதிவுகள் ஜேக்கப்பின் நிறை மாத கர்ப்பிணியின் அசைவுகளில், நகர்வுகளில் சொல்லப்படுகின்றன. இதைக்கூடக் கூரிய பார்வையுள்ளவர் எழுதிவிட முடியும்.

‘அவனுக்கு உள்ளூர சந்தோசம். முந்தியெல்லாம் எதிர்த்த வீட்டிற்கு பாஸ்டர் அடிக்கடி வந்தாலும் இந்தப் பக்கம் வருவதேயில்லை.’

‘பாஸ்டருக்கு ஒரு லிம்காவாவது வாங்கிக் கொடுக்கலாமென்றால் கடைகளும் பக்கத்தில் இல்லை.’

‘ஞாயிறுகளில் சில வீடுகளுக்கு மொத்தமாக பிரேயருக்கு சென்றால் என்னமாகச் செய்கிறார்கள்.’

இதுதான் கதையின் மையச் சரடு. எல்லோரையும் போல் தானும் இருக்க வேண்டும் எல்லோரையும்போல் தானும் அவர்களில் ஒருவனாக மதிக்கப்பட வேண்டும் என்கிற ஆதங்கம்.

வாசகனை உணர்ச்சிப் பெருக்கில் திக்குமுக்காட வைக்க எழுத்தாளன் உந்தப்படும் இடம் அடுத்து வருகிறது. பூமணியோ அதை ஆர்ப்பாட்டமற்ற எண்ண ஓட்டமாய் எண்ணி முப்பத்து சொச்சம் சொற்களில் முடித்துக்கொள்கிறார்.

‘எல்லாரையும் ஒருநாள் பிரேயருக்கு அழைக்கலாம். செலவு பெரிசில்லை. வாடகை வீடு போதுமனதாக இராதென்றாலும் ஒரு நாளைக்கு சமாளித்துக்கொள்ளலாம். ஆனால் இதுவரை யாரும் சும்மாகூடக் கேட்டுப் பார்த்ததில்லை. மற்ற வீடுகளுக்கென்றால் பாஸ்டரே புரோகிராம் போட்டுவிடுவார். ஒரு வேளை இனிமேல் சொல்லுவாரோ என்னவோ.’

//ஆனால் இதுவரை யாரும் சும்மா கூடக் கேட்டுப் பார்த்ததில்லை//

// மற்ற வீடுகளுக்கென்றால் பாஸ்டரே புரோகிராம் போட்டு விடுவார்.//

வீட்டுக்கு அழைப்பதில் இருந்த தயக்கம் வெளிப்பார்வைக்கு அகன்றுவிட்டாலும், வீட்டுக்குச் செல்வதில் மற்றவர்களுக்கு இருக்கிற தயக்கமும் இவன் வீட்டுக்கு பிரேயருக்கான புரோகிராம் போட்டு மற்றவர்களை கூட்டுப் பிரார்த்தனைக்கு அழைப்பதில் பாஸ்டருக்கு இருக்கும் தயக்கமும் நீங்கியபாடில்லை.

//ஒருவேளை இனிமேல் சொல்லுவாரோ என்னமோ//

கதையின் இறுதிவரை பாஸ்டர் அதைச் சொல்வதே இல்லை.

‘உங்களைத்தான் கிட்ட அண்டவிட மாட்டங்கிறாங்களே’ என்று கதையின் இறுதிக்குச் சற்று முன்பாக மனைவிகூட இதைக் குத்திக் காட்டுகிறாள்

இந்த செய்நேர்த்தியும் முழுமையும்தாம், தலித் என்கிற அடைப்புக்குள் வைத்து எவ்விதச் சலுகையையும் கோராமல் தமிழின் தலைசிறந்த சிறுகதைக் கலைஞர்களில் ஒருவராக பூமணியை நிலைநிறுத்துகின்றன.

தொடர்புக்கு: madrasdada@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x