Published : 29 May 2016 01:02 PM
Last Updated : 29 May 2016 01:02 PM
சித்திரை மாதம் வட தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானது அக்னி வசந்த விழா. திரௌபதி அம்மன் கோயில்கள் அமைந்துள்ள கிராமங்களில் இந்தத் திருவிழா நடைபெறும். ஊராரின் விருப்பத்தையும் பொருளாதாரத்தையும் பொறுத்துப் பத்து முதல் பதிமூன்று நாட்கள்வரை இவ்விழா நடைபெறும். பகலில் ஊர்ப் பொது இடத்தில் பாரதக் கதை படிக்கப்பட்டு, இரவில் அது கூத்தாக நடத்தப்படும். திரௌபதி அம்மன் திருவிழாவின் சிறப்பம்சம் இரவுகளில் நடைபெறும் கட்டைக் கூத்து எனப்படும் பாரதக் கூத்துதான். கடைசி நாளின் கூத்தான கர்ண மோட்சம் விடிய விடிய நடைபெறும். வானம் வெளுக்கத் தொடங்கும்போதுதான் கர்ணனின் உயிர் பிரியும். இனி மிஞ்சியிருப்பது துரியோதனன் மட்டுமே. அன்றைய பகல் பொழுது துரியோதனன் படுகளமாக விரியும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வாலாஜாபேட்டையை அடுத்த ஒழுகூர் கிராமத்தில் அரங்கேறியது துரியோதனன் படுகளம். சோளிங்கர் ஸ்ரீபாரத மாதா நாடக சபா குழுவினரால் நடத்தப்பட்ட கூத்தைக் காண மொத்தக் கிராமமும் பள்ளி மைதானத்தில் குவிந்திருந்தது. மைதானம் முழுமையையும் அடைத்தபடி துரியோதனனின் பிரம்மாண்ட உருவம் மண்ணால் வடிக்கப்பட்டிருந்தது. உருண்டைக் கண்களும் துருத்திய நாக்கும் துரியனின் வீரத்தைப் பிரதிபலித்தன. துரியோதனன் பாடி அழும்போது, சேர்ந்து அழுவதற்காகப் பெரியவர்கள் காத்திருக்க, இளைஞர்கள் கூட்டம் கைப்பேசியில் படம்பிடித்துக்கொண்டிருந்தது.
குழந்தைகள் ஆர்வத்துடனும் அச்சத்துடனும் வேடிக்கை பார்க்க, சலங்கைகள் குலுங்க ஓடிவருகிறார்கள் துரியோதனும் பீமனும். துரியோதனன் கண்களில் என்றுமில்லாத மிரட்சி. பதினெட்டாம் நாள் போர் முடிந்துவிட்டது. தன்னைச் சுற்றியிருந்தவர்கள் அனைவரும் மாண்டுவிட்டனர். உற்ற துணையாக இருந்த கர்ணனும் மாய்ந்துபோக, தனியொருவனாக யுத்த களத்தில் துரியோதனன். ஓடிவருவது துயரத்தைக் கூட்டுகிறது. பீமன் கதாயுதத்துடன் துரத்த, பழைய நினைவுகளைப் பாடியபடி மக்களிடம் கையேந்துகிறான் துரியோதனன்.
அய்யயோ மாமா
அலையவிட்டாயே என்னை
என்று துரியோதனன் பாட, உயிர் துறக்கப்போகும் அவனுக்காகப் பரிதாபப்படுகிறார்கள் சுற்றியிருப்போர்.
சில்லறைகளும் நோட்டுமாகச் சேர்ந்த பணத்தைத் துணியில் சுற்றியபடியே பாட்டைத் தொடர்கிறான் துரியோதனன்.
கூடை கட்டிய குறவராகிய
குந்தி மக்களுக்கு
மாட மாளிகை
கூட கோபுரத்தை
எப்படித் தருவேன்
ஆவேசமாகத் துரத்துகிற பீமனிடமிருந்து உயிர் பிழைக்கும் வேட்கையுடன் தப்பியோடுகிறான் துரியோதனன்.
தரையில் வடிக்கப்பட்டிருக்கும் துரியோதனன் உருவத்தில், கதாயுதத்தால் அடித்துப் பிளக்கப்பட வேண்டிய தொடைப் பகுதியில் எலுமிச்சையையும் கற்பூரத்தையும் அடையாளமாக வைத்திருக்கிறார்கள்.
மூன்றாவது சுற்று முடியும் தறுவாயில், ஆவேசம் கொண்டு ஓடும் பீமனையும் துரியோதனனையும் வளைத்துப் பிடிக்கும்படி ஊர்ப் பெரியவர் மைக்கில் அறிவிக்க, இளைஞர் கூட்டம் அவர்களைச் சூழ்கிறது. இருவரையும் பிடிக்காமல் விட்டுவிட்டால் கதையால் துரியோதனனை அடித்துவிடுகிற அபாயம் இருக்கிறது என்பதால் இந்த ஏற்பாடு.
துரியோதனன் உருவத்தில் தொடைப் பகுதியைக் கதை யால் பிளக்க, பீறிட்டுத் தெறிக்கிறது செந்நிறத் திரவம். அதை எடுத்து, கோயிலில் தலைவிரிகோலமாக இருக்கிற திரௌபதி அம்மனின் கூந்தலில் பூச, சபதம் முடித்ததை அறிவிக்கக் கோயிலை வலம் வருகிறாள் திரௌபதி.
ஊரில் இருக்கிற இளைஞர்களும் சிறுவர்களும் துரியோதனன் உருவத்தின் மேலேறிச் சிதைக்க, மகன் மாண்ட செய்தி கேட்டு முறத்தோடும் துடைப்பத்தோடும் ஓடிவருகிறாள் காந்தாரி. மகனின் உருவத்தின் மேலேறி நிற்கிறவர்களை அடித்து விரட்டிவிட்டு ஒப்பாரிவைக்கிறாள்.
அப்பா மாண்டாயோ
எப்போ காண்பேனோ…
நெஞ்சில் அறைந்தபடி காந்தாரி பாட, அவளது ஒப்பாரியைக் கேட்பதற்கென்றே பெண்கள் சுற்றி நிற்கின்றனர்.
ஊசிப் பெருங்காயம்
எனக்கு ஒரு சேரு வெங்காயம்
அதை உரிச்சி பொரியல் பண்ணேன்
ஊரில் உள்ள கிராமணி பஞ்சாயத்து…
மூக்கைச் சிந்தியழும் காந்தாரியோடு பெண்களும் அழத் தொடங்குகிறார்கள்.
தேரோடும் வீதியிலே
என் ராசா என் ராசா
தென்னை மரமா தோப்பு உண்டு
அந்தத் தென்னை மரத்தைப் படைச்ச கிளி
இந்தத் தேவி குறை தீரலடி…
மதிய வெயிலின் உக்கிரத்தைவிட அதிகமாகச் சுடுகிறது மகனைப் பறிகொடுத்த அந்தத் தாயின் கதறல். எல்லாம் முடிந்து கூட்டம் கலைந்த பிறகு சிதைந்திருக்கும் துரியோதனனின் பேருருவம் வானத்தை வெறித்தபடி மல்லாந்து கிடக்கிறது, அடுத்த ஆண்டு மீண்டும் நிகழப் போகும் மரணத்தை எதிர்பார்த்து.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT