Last Updated : 22 May, 2016 12:50 PM

 

Published : 22 May 2016 12:50 PM
Last Updated : 22 May 2016 12:50 PM

கவிதை மீதொரு உரையாடல்: சி.மணி - யார் அந்த மனிதன்?

அறிவைப் புறம் தள்ளிய தேடல். கற்றவற்றுக்கு வெளியேயும் பயணிக்கிற மனம். லாவோட்ஸு மீது மோகம். முடிவிலாத பெருவெளியில் அலையும் மன உடல். கற்பிதங்களை ஒதுக்கிய ஞானவெளி இருப்பு. ஜென் துறவியோ என்று எண்ணத் தோன்றும் உரையாடல். ஆழ்மனத் தீண்டலிலிருந்து கவிதையை உருவாக்குதல். மொழியை வசீகரமாகவும் புதிதாகவும் பயன்படுத்துதல். வார்த்தைகள், வரிகள் எல்லாவற்றிலும் புதிய பிறப்பின் ஈரம். தமிழ்க் கவிதையில் புதுவெளி. வாழ்ந்த காலத்தில் அதிகம் அறியப்படாத பொக்கிஷம். இப்படி சி.மணியைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

சி.மணியின் ‘படைப்பு’ என்ற தலைப்பில் உள்ள கவிதை படைப்பின் ரகசிய வெளியைத் திறந்து காட்டுகிறது.

“அருங்கல்லொன்று கிடைத்தபோது / அகத்திலூறிச் சுழல்கின்ற / நிழலைச் / செதுக்க வந்தேன்” என்கிறார். இந்த வார்த்தைகளுக்குப் பொருள் சொல்வது கவிதையைச் சிதைத்துவிடும். நிழலைச் செதுக்க வந்தேன் என்ற வரிகளை வாசிக்கிற யாரும் விரிகிற மனவெளியில் தொலைந்துபோவார்கள். அரூபமும் ரூபமும் ஓடிப்பிடித்து விளையாடுகிற அற்புத இடம் இது. அதே கவிதையின் இறுதி வரிகள் சி மணியைப் பிரபஞ்ச மனிதனாய் அதிரவிடுகின்றன.

சாத்திரக் கோட்பாடுகளை / நெஞ்சில் கரையவிட்டு /

குறித்தபடி கோவில் / எழுப்பவரவில்லை /

நிறைந்த அனலாவியை / விழைந்த கோலமாக்கும் /

விரிந்த பாழ்வெளியில் / பால்வெளியாய்ப் / படைக்க வந்தேன் என்கிறார். ஒவ்வொரு சொல்லும் பெருவெடிப்பாய் உள்ளே இறங்குவதைத் தாங்காத மனம் விளிம்புடையும்.

இன்னொரு கவிதை ‘யார் அது?’

வளர்ந்தாலும் தேய்ந்தாலும்

நிலவு நிலவே. அது போல

மனிதன் மனிதனே.

போட்டாய் ஒரு போடு, மாலி.

அது சரி,

யார் அந்த மனிதன்?

மாலி என்ற பெயரிலும் சி.மணி எழுதுவார். இந்தக் கேள்வி அவர் தன்னிடமே கேட்டுக்கொள்கிற கேள்வி என்பதே இதன் அழகியல்.

சி.மணியின் பல கவிதைகள் வார்த்தைகளால் ஆனவையல்ல. வார்த்தைகள் கூட்டிப் போகிற கண்படாத இடமும் வாசக அக்கறையும் இணைந்து பெறுகிற மனவெளியே இவரது கவிதைகள்.

‘பழக்கம்’ என்னும் தலைப்பில் உள்ள கவிதை...

பழக்கத்திற்கு இவனொரு அடிமை.

பழக்கமற்ற எதையும் இதுவரை / செய்ததில்லை - இனிமேல்

செய்யப்போவதில் பழக்கமற்றது / சாவது ஒன்றுதான்.

சாவதும் / பழக்கமானதோ என்னவோ,

அதுவும் நாள்தோறும்.

வாசித்து முடிக்கும்போது முதல் வரியும் இறுதி வரியும் இணைந்து கவிதைமீது அறியாத வெளியின் வினை வெளிச்சம் படிகிறது. இந்த அனுபவத்தை அவரது எந்தக் கவிதையிலும் காணலாம்.

நவீன வாழ்தலின் சிக்கல்களைச் சந்திக்க வல்ல புதிய பார்வையைத் தேடிக் கவிஞர்கள் அலைந்தபோது கண்படாத மனிதனைக் காட்டி வியக்கவைத்தவர் சி. மணி. நவீன அன்றாடத்தையும் (வரும் போகும்) ஆன்ம வாழ்வையும் (முக்கோணம்) கவிதையில் கொண்டாடியவர். மரபையும் நவீனத்துவத்தையும் ஒரு புள்ளியில் சந்திக்கவைத்து முன் அறிந்திராத கவிதையைக் காட்டி வியக்க வைத்தவர். ‘வரும் போகும்’ கவிதை மொழி அத்தகையது. காதடைக்கும் இரைச்சலுடன் / டவுன் பஸ்கள் வரும் போகும்... என்று தொடங்கும் கவிதை நவீன அன்றாடத்தில் தொடங்கி மனித வெளியின் அன்றாடத்தில் கலக்கும் அற்புதக் கவிதை.

‘இதுவரை’ கவிதைத் தொகுப்பில் முதல் கவிதை ‘முக்கோணம்’. பழைய இலக்கியங்களின் வரிகளை டி.எஸ்.எலியட் போலத் தமது கவிதையில் இவரும் பயன்படுத்துகிறார். சில விளைவுகளுக்காக அப்படிச் செய்வதாக அவரே குறிப்பிடுகிறார்.

‘முக்காலம் தொடர்பில்லா முக்கூடு’ என்பவரும்

‘போனது வராது, வருவது தெரியாது,

நடப்பதைக் கவனி’ என்பவரும் அறிவிலிகள்:

நினைவும் நம்பிக்கையும் உள்ள மட்டும்

போவது எதுவுமில்லை, வருவது ஒன்றுமில்லை,

எல்லாம் இருப்பதுவே, நடப்பதுவே.

இந்தக் கவிதை நமது மனதிலிருக்கும் அறிவை, கற்பிதங்களைத் துடைத்து எறிந்துவிடுகிறது. அறிந்திராத வெளியை நிறைக்கின்றன வினைபடுகிற வார்த்தைகள். சரி இது எப்படிக் கவிதையாகிறது? மொழியைப் பொருள் கொள்வதிலிருந்து விடுவித்து உணர்தல் தளத்துக்கு வாசகனை நகர்த்துவதால் கவிதையாகிறது. அறிந்த உலகிலிருந்து அறியாத வெளியில் மனதைச் சற்றே நிறுத்துகிற மாயம்தான் கவிதையை நிகழ்த்துகிறது. கவிதையின் மற்ற வரிகளை வாசித்தால் சி.மணியின் மன உடல் நமக்கும் வசப்படலாம்.

முற்றிய வித்து / பழமையின் திரட்டு; புதுமையின் பிறப்பிடம்.

மின்னும் விண்மீன் / சென்றதன் தன்னொளி; வருவதன் சின்னம்.

பிறந்த குழந்தை / முன்னோரின் வாரிசு; புது மனிதனின் மூலம்.

முக்கால வினையை ஒரு புள்ளியில் நிறுத்தி முன்னும் பின்னும் அசைத்து கலாபூர்வமானதொரு கூத்தை நிகழ்த்துவது இங்கே கவிதையாகிறது. பழமையின் திரட்டு என்று முற்றிய விதையைச் சொல்லும் அழகு புது வண்ணம். முந்தைய வார்த்தையின் ஓசை அடங்குவதற்குள் சொல்கிறார் புதுமையின் பிறப்பிடம் என்று. மற்றுமான வரிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக ருசிக்கிறது மனம். ஒரு விண்மீனை, பிறந்த குழந்தையை இவரால்தான் இப்படிப் பார்க்க முடியும்.

முக்காலம் மூன்றல்ல / ஒன்று - ஒரே முக்கோணம்;

மனித இனத்தைச் சுற்றி வளைத்திருக்கும் / முக்கோணம்.

இறுதி வரியில் காலத்தை முக்கோணம் ஆக்கி மனித இனத்தைச் சுற்றி வளைக்கும் பார்வை முன் எழுதாத கவிதையை எழுதி முடிக்கிறது. நிகழ் உலகின் காலவினையை முடக்கிவிடுகிறது. கவிதைக்குள் பிறக்கிறது புதிய வெளி. இந்தக் கவிதை 1959-ல் எழுதப்பட்டது. புதிய எழுத்து, புதிய கவிதை என்று கவிஞர்கள் அன்று கொண்டாடிய கவிஞர் சி மணி.

தொடர்புக்கு: kavai.palanisamy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x