Last Updated : 17 May, 2016 10:24 AM

 

Published : 17 May 2016 10:24 AM
Last Updated : 17 May 2016 10:24 AM

கதாநதி 18: சா.தேவதாஸ்- உலக ஞானம் உள்ளங்கையில்...

நாடோடிக் கதைகள், நாட்டுப்புறக் கதைகள், தேவதைக் கதைகள், நாட்டார் கதைகள் எனப் பலப் பல பெயர்களால் வழங்கப்படும் வாய் மொழிக் கதைகள் சிலவற்றைத் தொகுத் துத் தமிழில் மொழிபெயர்த்து, ‘சூதாடியும் தெய்வங்களும்’ எனும் பெயரில் வெளிப் படுத்தியிருக்கிறார் சா.தேவதாஸ்.

தமிழுக்கு, முப்பதுக்கும் மேற்பட்ட மொழி ஆக்க நூல்களைத் தந்தவர். காஃப்கா, கால்வினோ, டாலி முதலிய பெரும் படைப்பாளிகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர். விளிம்பு நிலை மக்கள், பெண் நிலை, நாட்டார் இலக் கியங்களில் ஆய்வுகள் செய்துகொண் டிருப்பவர். மொழிபெயர்ப்பு ஆக்கத்துக் காக 2014-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர். தேவதாஸின் மொழிபெயர்ப்பு ஆக்கங்கள், வெறும் மொழி மாற்றம் இல்லை. மாறாக, பெறு மொழியின் (தமிழின்) பண்பாடு, அரசியல் சமூகத் துறைகளில் வினையாற்றும் நோக்கமும் சக்தியும் கொண்டவை.

‘சூதாடியும் தெய்வங்களும்’ எனும் இத்தொகுதியில் இந்தியக் கதைகள் பர்மியக் கதைகள், இலங்கை, சீனம், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, இத்தாலி என்று பல தேசங்களின் சுமார் 32 கதைகள் உள்ளன.

நாட்டுப்புற வாய்மொழிக் கதைகளின் அடிப்படை பண்பே, இலக்கியம் எனப் படும். எழுத்து இலக்கியத்துக்கு நேர் எதி ரானவை. சா.தேவதாஸ் எழுதியிருக் கும் முக்கியமான முன்னுரையில், வாய் மொழி இலக்கியத்தின் உள்ளார்ந்த கலகத் தன்மையைக் குறிப்பிட்டிருக் கிறார். ‘எழுத்திலக்கியத்தில் ராமன் கொண்டாடப்படும் நாயகன் என்றால், நாட்டார் இலக்கியத்தில் சீதை.

பத்து தலை ராவணனை ராமன் வீழ்த்தினான் என்றால் ஆயிரம் தலை ராவணனைச் சீதை வீழ்த்துவாள். நாட்டார் கதைகள், அரசு மற்றும் நிறுவனங் களுக்கு எதிரானவை. பாதிக்கப்படும் மக்கள் பக்கம் நிற்பவை. பெண்கள் அறிவை ஒப்புக்கொள்பவை. தெய்வங் களைப் பரிகாசம் செய்பவை. பெண், ஆண் உறவுகளில் போலீஸ் வேலை மற்றும் நீதிபதி வேலைகளைச் செய்யாதவை.

உலகம் முழுவதுமான வாய் மொழிக் கதைகள் திருடன், பேய், பாம்பு முதலானவை பற்றி அதிகம் பேசுகின்றன. குறிப்பாக திருடன். திருட்டை அவை வியந்து பாராட்டு கின்றன. ஒரு இலங்கைக் கதையைப் பார்ப்போம்:

ஒரு

நகரத்தில் ஹராந்தகன் என்று ஒரு திருடன் இருந்தான். அவன் தன் தந்தையுடன் சேர்ந்துதான் திருடுவான். நீண்ட காலமாக திருடிவரும் அவனை யாராலும் பிடிக்க முடியவில்லை. ஒரு இரவு அரசனின் கருவூலத்தில் கொள்ளை அடிக்கத் திட்டமிட்டு, இருவரும் அரண் மனைக்குள் நுழைந்தார்கள். சமையல் அறை ஜன்னல் வழியாக உள்ளே இறங்குகிறான். மன்னனுக்காகச் சமைக் கப்பட்ட விருந்தைத் தாராளமாக உண்டு, கருவூலத்தையும் கொள்ளை அடித்து வந்து, அவற்றை ஜன்னல் வழியாக மகனிடம் கொடுத்தான். வெளியேறக் கழுத்தை ஜன்னலில் நுழைத்த தந்தை யால் வெளியேற முடியவில்லை. அரண்மனை விருந்தால் ஆள் கொழுத்து விட்டான். வேறு வழியில்லை. ஆள் யார் என்பது தெரியக்கூடாதே. ஆகவே மகன், அப்பாவின் கழுத்தை வெட்டித் தலையோடும் கருவூலச் செல்வத்தோடும் வீடு வந்து சேர்ந்தான்.

அம்மாவிடம் சொன்னான். ‘‘ஜன்னல் வழித் தப்பிக்க அப்பாவால் முடிய வில்லை. ஆள் தெரியக் கூடாது என்ப தால் தலையைக் கொண்டுவந்துவிட் டேன். நாளை மன்னனின் ஆட்கள் முண்டத்தைத் தெருவில் இழுத்து வருவார்கள். நீ அழவோ, அரற்றவோ கூடாது.’’

மன்னனின் ஆட்கள் அந்த முண்டத் தைத் தெருவில் இழுத்து வந்தார்கள். யார் உரிமை கொண்டாடுகிறார்கள் என்று மன்னனின் ஆட்கள் பார்த்தபடியே வந்தார்கள். திருடனின் மகன் ஒரு மரத்தின் மேல் ஏறிப் பதுங்கி இருந்தான். தெருவில் நின்றிருந்த மனைவி, கணவனின் உடம்பைப் பார்த்தவுடன் அலறிவிட்டாள்.

மகன் அருமையான காரியம் செய் தான். சட்டென்று மரத்தில் இருந்து குதித்து, இறந்தவன் போலக் கிடந்தான். அந்தப் பெண் ஏன் அழுதாள் என்று ஒரு படைவீரன் கேட்டான். ‘‘அதுவா… பையன் மரத்தில் இருந்து விழுந்தான் அல்லவா, அதான்’’ என்று மற்றொரு வீரன் பதில் சொன்னான். சடலத்தைக் கண்டு மனைவி அழுதாள் என்பது இல்லாமலாகி, ஹராந்தகன் என்ற அந்தத் திருடனும் தப்பித்தான். எனவேதான் திருடனிடம் இருக்கும் சாதுர்யங்கள் விநாயகரிடம் கூட இருக்காது என்று சொல்வார்கள். இப்படிக் கதை முடிகிறது.

தமிழகம் உள்ளிட்ட இந்தியக் கதைகள் பலவற்றிலும் திருடர்கள் மன்னர்களின் கருவூலத்தைக் கொள்ளையடித்து வெற்றியுடன் திரும்புகிறார்கள். மன்னர்கள் திகைத்துப் போவார்கள். திருடர்களின் அதிசாமார்த்தியத்தை மெச்சி, தம் பெண்ணையும் கொடுத்து பாதி ராஜ்ஜியத்தையும் கொடுத்துத் திருடர்களை ஆட்சியாளராக்கு கிறார்கள். (பல ஆட்சியாளர்களின் பூர்விகம் புரிகிறது)

சரி. கருவூலத்தையே திருடர்கள் குறிவைக்கிறார்களே, ஏன்? வேறென்ன, கருவூலம் என்பதே மக்களிடம் இருந்து மன்னர்கள் திருடியதுதானே. மன்னர்கள் திருட்டை திருடர்கள் நேர் செய்கிறார்கள். திருடர்கள் நீதிமான்கள்!

ஒழுக்கம் அதாவது ஆண், பெண் ஒழுக்கம் குறித்தப் பொய்மைகள் வாய்மொழிக் கதைக்காரர்களிடம் இல்லை. பெண், ஆண் கதையைப் போல, பெண் பெண் காதலையும் இயல்பாகப் பார்க்கும் நேர்மை அந்தக் கலைஞர்களுக்கு இருக்கிறது. பட்டப் பகலில் கடைத் தெருவில் வைத்துக் காதலனை வெட்டும் ஆணவம், அவர்களால் புரிந்துகொள்ள முடியாதது.

ராஜஸ்தான் சூழலில் சொல்லப்பட்ட கதை. இரண்டு வட்டிக் கடைக்காரர்கள் நண்பர்கள், அவர்கள், தங்கள் மகன் அல்லது மகளை, மற்றவருக்கு மருமகனாக, மருமகளாகத் திருமணம் செய்து வைத்து, சம்பந்திகளாவது என்று முடிவெடுக்கிறார்கள். துரதிருஷ்ட வசமாக, இரண்டு பேருக்கும் பெண் குழந்தைகளே பிறந்தன. ஒருத்தர், தனக்குப் பெண் பிறந்ததை மறைத்து, ஆண் மாதிரியே தன் பெண்ணை வளர்க்கிறார். பெண்ணும் தான் ஆண் என்பது தெரியாமல் வளர்கிறாள். திருமணம் நடந்துவிடுகிறது. ஆண் என்று சொல்லிப் பெண்ணைக் கொடுத் தவர் ஏராளமான வரதட்சணை பெற்று நகர்ந்துவிடுகிறார்.

சிக்கல் அதன் பிறகு தொடர்கிறது. முதலில் அசல் பெண், தான் ஏமாற்றப்பட்டது அறிந்து திகைக்கிறாள். உண்மையில் தானும் ஏமாற்றப்பட்டோம் என்பதை ஆணாக இருந்த பெண்ணும் அறிகிறாள்.

காலம் எந்தப் புண்ணையும் ஆற்றும் போலும். காதலும் அன்பும் எப்போது எந்த உருவில் தோன்றும் என்பதை யார்தான் அறிய முடியும்? இரண்டு பெண்களும் காதல் கொள்கிறார்கள். உலகம் அவர்களுக்கு முன் நீண்டு செல்கிறது.

இந்தக் கதையைச் சொல்கிறவர், அச்சில் வந்திருக்கிற பதிவு இரண்டை யும் வாசிக்கும்போதும் கவனிக்கும் போதும் ஒன்று தெரிகிறது. ஒரு பெண் ஆண் காதலைச் சொல்லும் பரவசம், இயல்பு, யதார்த்தமே கதையின் மேல் வருகிறது. அவர்களுக்கு அது சந்தோஷம் என்றால் அதை விமர்சிக்கும் உரிமை யாருக்கு இருக்கிறது என்பது கதைசொல்லியின் தொனியாக இருக் கிறது.

மற்றுமொரு டென்மார்க் நாட்டு ஆண்டர்சன் சொன்ன, எழுதிய கதை.

கோடை காலத்தின் இனிய பொழுது. வாத்து குஞ்சு பொரிக்கிறது. குஞ்சு களும் முட்டை உடைந்து வெளிப் படுகின்றன. ஒரு பெரிய முட்டை நீண்ட நேரம் சென்று உடைகிறது. பெரிதான, அவலட்சணமான குஞ்சு. தாய் அதை உற்று நோக்கியது. அது வான்கோழியோ என்று அஞ்சியது. அதைத் தண்ணீரில்விட்டது. குஞ்சு நீந்தியது. மற்ற வாத்துக் குஞ்சுகள் அதைக் கொத்தி விரட்டுகின்றன. கோழிகள்கூட அந்த அருவருப்பான குஞ்சைத் தீண்டின. மனம் வருந்திய வாத்துக் குஞ்சு பல இடங்களிலும் அலை கிறது. பூனையும் அதை விரட்டுகிறது. மண்ணை விட்டு நீரில் குதித்தது. நீரின் அடி ஆழத்தில் நீந்தியது. அப்போது அன்னக் கூட்டம் அங்கு வந்து சேர்ந்தது. அன்னங்களின் அழகில் ஈடுபட்டது குஞ்சு. நீரின் அடியில் வாத்துக் குஞ்சு முதன்முதலாக தன் பிம்பத்தைப் பார்த்தது. அப்போதுதான் தெரிகிறது, தான் ஒரு அன்னக் குஞ்சு என்று. பெரிய அன்னங்கள் வந்து அதை தடவிக் கொடுக்கின்றன. சில அன்னங்கள் அதை வரவேற்று வணங்கின. சிறுவர் கள் ரொட்டித் துண்டுகளையும் பருப்பு களையும் எறிந்தனர். அன்னக் குஞ்சைக் கண்டு கைதட்டி ஆரவாரம் செய்தனர். அழகான பறவைகளில் அதுவே மிக அழ கானது என்று உலகம் கூறுகிறது.

ஸ்பானிய ஆட்சியின்போது, டென் மார்க் பட்ட மனிதச் சிறுமையைச் சொல்லும் கதை இது.

பெரும் படைப்பாளிகள், கற்றுக் கொள்ள ஏராளம் வாய்மொழிக் கதைகளில் இருக்கின்றன. அவை, முதுகை யாருக்கும் வளைப்பதில்லை. செங்கோலை விளையாட்டுக் குச்சியா என்று கேட்கின்றன. மனிதர்களை, மனிதர்களாக ஒப்பனையின்றிக் காட்டு கின்றன. அவை பொய் பேசுவதே இல்லை. இவை, கற்றவர்கள் என்று தம்மைக் கருதிக்கொள்ளும், கற்க வேண்டியவர்க்குக் கற்றுத் தர ஏராளமான விஷயங்களைத் தமக்குள் வைத்துள்ளன. முக்கியமாக வாசிப்ப வருக்குச் சிறகுகள் தரத் தயாராக இருக்கின்றன. கண்களில் கனவுகளைப் பூசவும் விரும்புகின்றன. மிக எளிமை யான தம்மிடத்தில் சூடான தேநீர்க் கோப்பையுடன் மாலை நேரத்தில் நம் வருகைக்காகக் காத்திருக் கின்றன.

அருமையான இக்கதைகளைத் தமிழுக்குத் தந்த சா.தேவதாஸ், தமிழர்களுக்குப் பெரும் தொண்டு செய்திருக்கிறார்.

‘பன்முகம்’ பதிப்பகம் அழகாக இந்த ‘சூதாடியும் தெய்வங்களும்’ நூலைப் பதிப்பித்துள்ளது.

- நதி நகரும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x