Published : 24 May 2016 11:16 AM
Last Updated : 24 May 2016 11:16 AM
கடந்த 15 ஆண்டுகளில் எழுதப் பட்டிருக்கும் மிகச் சிறந்த தமிழ்க் கதைகளில் தமிழ்நதியின் கதைகளும் அடங்கும். தமிழ்நதிக்கு வாய்த்திருக்கும் மொழி அபூர்வமானது. அவர் சொற்கள், நிலைபெற்ற அர்த்தத்தோடு, யோசித்துப் பெறத்தக்க ஆழப் பொருள்களைக் கொண்டதாக இருக்கும். ஆடம்பரம் அற்ற, அடக்கமான தொனியுடன் கூடிய அவர் கதைகள், பாத்திரங்களின் செயற்பாடுகளை மேற் கட்டுமானமாகவும், அச்செயற்பாடு களின் மன ஊக்கிகளை அடிகட்டு மானமாகவும் கொண்டிருக்கும். நாளின் நிகழ்வுகளைப் பட்டியலிடும் யதார்த்தக் கதைகள் அல்ல, தமிழ் நதியுடையது. நிகழ்வுகளின் மனக் காரணிகளைச் சித்தரிக்கும் ஆழ் யதார்த்தக் கதைகள் அவருடையவை.
ஈழத்தின் திரிகோணமலை நதி மூலம். யுத்தம், அவரைக் கனடாவுக்குப் புலம்பெயர்த்தியது. சென்னை வேடந் தாங்கல். அவர் நீராலானவர். ஒரு பேட்டியில் அவர் சொன்னபடி நதி பிடிக்கும் என்பதால் தமிழ் நதி ஆனார், கலைவாணி. ‘நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது’ எனும் பெயரில் சிறுகதைத் தொகுப்பும், ‘கானல் வரி’ குறுநாவல், யுத்த வரலாற்றைச் சொல்லும் அரிய படைப்பான ‘பார்த்தீனியம்’ என்ற அண்மை நாவலும், தற்போது தமிழக, உலகப் பத்திரிகைகளில் வெளியான நான்கு ஆகச் சிறந்த சிறுகதைகளும் என்முன் இருக்கின்றன.
காற்று, மரங்களை அசைக்கும். இலைகள் பெயர்ந்து காற்றில் மிதக்கும். தான் செல்லும் திசையை இலை தீர்மானிப்பதில்லை. தமிழ் நதி, இந்த இடப்பெயர்வில் தன் வேரோடும் பெயர்ந்து கொண்டிருக்கிறார். இந்த அலைவை அவர் கதைகளாக்கி இருக் கிறார். மூன்று அம்சங்களை அவர் கதைகளில் பார்க்க முடிகிறது. தன்பால், இனத்தின் மேல் கவிந்திருக்கும் சமூக மரபு, பண்பாட்டின் பெயரால் ஒடுக்கப்படும், சகல வன்முறைக்கும் எதிராக மனித அறத்தை அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். எல்லாக் காலத்துக்கும் பொதுவான அன்பை முன்னிறுத்தும் மானுட அறத்தை அடர்த்தியாகப் பேசுகிறார் தமிழ்நதி.
இரண்டாம் அம்சம், யுத்த கால ஈழம். அதற்கும் முந்தைய, பிந்தைய வாழ்நிலை ஆகிய தற்கால வரலாற்றை, நியாயங்களை முன்வைத்த சீற்றத்தோடு, வல்லாயுதக்காரர்கள் மற்றும் ஆமிக் காரர்களின் உச்சபட்சக் கொடுங் கோன்மை, தான் தளும்பாது வாசகர் கள் பதைபதைக்கச் சொல்லும் வன்மை கொண்டவை. நல்ல கலைஞர்கள் வரலாற்றுக்கு துரோகம் செய்யாதவர் கள். பக்கத்து தேசத்துத் தமிழ்ச் சகோதரர்களின் ரத்தத்தை, கலகலக்கும் நாணயங்களாக மாற்றிய தமிழகத்தின் சில அரசியல்வாதிகள் பற்றிய தமிழ் நதியின் மதிப்பீடுகள் முக்கியமான பதிவுகள்.
மூன்றாவது அம்சம், அவர் நீராலான மனோபாவம். அவர் யுத்த பூமியில் புல் முளைப்பது மட்டுமில்லை; பூவும் பூக்கும். வடிவமைக்கும் காதல் புலங்களில், வசந்தமும் பனியுமன்றி வேறு பருவங்கள் இல்லை. வாசலில் வழியும் மழையில் கைநீட்டிக் களிக்கும் குழந்தைமை, கதைகளை நனைக்கும். கதைகள், கையில் அமுத சுரபியை ஏந்தி பசித்தோர்க்கு அளித்துக் கொண்டு நகரும் மணிமேகலைகள்.
தமிழ் நதி, அண்மையில் எழுதிய சிறுகதை, மாயக் குதிரை. சுருக்கமாக அதை வாசிக்கலாம்.
கனவுக்கும் நனவுக்கும் இடை யிலான அந்தர நிலையில் இருந்தாள் அவள். தன்னைக் குறித்த அயர்ச்சியும் சூதாட்டத்தின் மீதான கிளர்ச்சியும் அவளைச் சூழ்ந்தன. அம்மாவிடம் சென்று ‘‘காசிருந்தால் தாங்கோ’’ என் றாள். ‘‘ஏன்…?’’ என்றாள் அம்மா ‘‘சிநே கிதப் பிள்ளைகளோடு நயாகராவுக்குப் போறன்’’ என்றாள். ‘‘அதை எத்தன தரம் தான் பாக்கிறது?’’ என்றாள் அம்மா. அவள் பேசாமல் நின்றாள். செல்லப் பிள்ளை. அதோடு ஒற்றைப் பிள்ளை. நயாகரா அவளுக்குப் பிடிக்கும். அதைவிட காசினோவுக்குச் சூதாடப் போவது அதிகம் பிடிக்கும். அம்மா போதுமான பணம் தந்தாள். உறவினர் கள் ஒழுக்க வரையறையான வீடு, வேலை, புத்தகங்கள், இசை, மாலை நடை, சில நண்பர்கள், ஒரே ஒரு காதலன் இவைகளோடு அடங்கிய அவளைச் சூதாட்டம் மாற்றிப் போட் டது. காசினோ ஞாபகம் வந்ததும் முற்றிலும் மாறிப் போய்விடுகிறாள் அவள். வங்கிக் கணக்கில் இருப்பது, கடன் அட்டை, அம்மா கொடுத்தது எல்லாம் சேர, செலவுக்குப் போக 550 டாலர்கள் தேறின. புறப்பட்டுவிட்டாள் அவள். ஸ்லொட் இயந்திரத்தில் விளையாடுவது எப்படி என்பதை அவள் நண்பன் சுதன்தான் கற்றுத் தந்தான். பின்னாளில் அதற்காக அவன் வருந்தியிருக்கிறான்.
பயணப் பைக்குள் ஒரு நாளைக்குத் தேவையான ஆடைகளோடு புறப்பட் டாள். பிரம்மாண்டமான அந்தச் சூதாட்டக் கட்டிடம் பல வண்ணங்களில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அதில் நுழைவது, கொடிய மிருகங்கள் நிறைந்த குகைக் குள் நுழையும் பதைப்பு வரத்தான் செய்தது. ஆனாலும் சூதாடும் கிளர்ச்சி அதனினும் பெரிதாக இருந்தது. முன்பு ஒரு முறை ஜாக்பாட் அடித்த இயந்திரம் முன் போய் அமர நினைத்தாள். ஆனால், அதில் யாரோ இருந்தார்கள். ஒரு சத இயந்திரம் முன் போய் அமர்ந்தாள். சட்டென்று 160 டாலர்களை இழந்திருந் தாள். இதோ இதோ வெல்லப் போகிறாய் என்று சத்தம் போட்டபடி அந்த இயந்திரம் சுழன்றது. ஆனால், அவள் தோற்றுக்கொண்டே இருந்தாள். வேறொரு இயந்திரத்தை நாடிப் போனாள். வழியில் இரண்டு 20 டாலர்களை இழந்தாள். ஏராளமான மனிதர்கள் குடித்துக்கொண்டும், சிலர் மது அருந்திக்கொண்டும் இருந்தார்கள். திடுமென எல்லோரும் அவனுக்கு மறைந்து போனார்கள்.
கடவுளே கடவுளே என்று அவள் அரற்றிக்கொண்டிருந்தாள். விழப் போகிறது. ‘இதோ… வெற்றி’ என்று படபடப்புடன் காத்திருந்தாள். 100 டாலர்கள் ஜெயித்தாள். உடன் அதை யும், கூட அறுபதையும் இழந்தாள். ‘‘நாசமாய்ப் போனவள்’’ என்று தன் னையே திட்டிக் கொண்டாள். பையைத் திறந்து பணத்தை எண்ணிப் பார்த்தாள். இருந்தது வெறும் 200 டாலர்கள். அவளுக்குத் தலை சுற்றியது.
இதோ ஒரு நொடியில் எல்லாம் மாறிவிடப் போகிறது. அவள் நம்பி னாள். அதோ அந்த மாய நொடி வரப் போகிறது. பணம் குவியப் போகிறது. எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் விடுதி திரும்புவாள். இப்போது இரவு பதி னொன்றரை. யாரோ ‘ஜாக்பாட்’ அடித்திருந்தார்கள். மீண்டும் முயற்சிக் கலாம் என்று தோன்றியது. வயிற்றில பசி எரிந்தது.
தோற்றாள். கையில் வெறும் 20 டாலர் இருந்தது. அறைக்கு ‘அட்வான்ஸ்’ பணம் நூறு, அறையைக் காலி செய்யும்போது கிடைக்கும். இந்த 20 சாப்பிடப் போதும். அவளுக்கு அழுகை வந்தது. வங்கிக் கணக்கில் 80 டாலர்கள் இருந்தன. அதையும் பரிசோதிக்கலாம். அது நம்மைக் காப்பாற்றும். ஆடினாள். தோற்றாள். முகம் சரிந்து அமர்ந்திருந்தாள்.
அறைக்குத் திரும்பினாள். அம்மா பலமுறை அழைத்தது செல்லில் தெரிந்தது. சுதன் ஆறு முறைக்கு மேல் அழைத்திருந்தான். அவள் மீண்டும் அழைத்தான். எடுத்தவுடன் எவ்வளவு தோற்றாய் என்றான். நான் தருகிறேன் என்றான். அவன் குரலில் இருந்த அக்கறை உண்மை.
‘‘இனிமே இங்கே வர மாட்டன். அப்படி வந்தா என்னை விட்டுடுங்க’’ அவள் இதைச் சொன்னபோது, உண்மையாகத்தான் சொன்னாள்.
கதை இப்படி முடிகிறது:
‘நன்றாக உறங்கிவிட்டிருந்தாள். காலையில் கண் விழித்ததும் முதல் நாளின் ஞாபகங்கள் நெருஞ்சியாய் நெருடின. தன்னிரக்கம் மிகுந்து கண்கள் பனித்தன. அதனை நினைக்கும்தோறும் நெஞ்சம் காதலில் விம்மியது. அறையைக் காலி செய்தாள். முன்பணமாகக் கொடுத்திருந்த 100 டாலர்கள் வந்தது. விடுதியை விட்டு வெளியே வந்ததும் அந்த 100 டாலர்களையும் வெளியில் எடுத்தாள். அதில் பேருந்து கட்டணத்துக்கு என 25 டாலர்களை எண்ணித் தனியாக வைத்தாள். பிறகு, காசினோவை நோக்கி வெகுவேகமாக நடக்கத் தொடங்கினாள்.’
தமிழ்நதியின் சில சொற்பிரயோகங் கள் இவை:
…அதில் விழுந்து செத்துப் போய்விடத் தூண்டும் அழகோடும் நயாகரா கொட்டிக் கொண்டிருந்தது.
…முதலிரவில் உனக்கு என்னவெல் லாம் பிடிக்கும் என்று கணவனானவன் கேட்டபோது, ஒரு நொடியும் தாமதிக்காமல் ‘புத்தகங்கள்’ என்றாள். அரை இருளில் அவன் முகம் புலப்படவில்லை. எனினும் அந்தப் பதிலால் அவன் திருப்தியடையவில்லை என்பதைத் தொடுதலில் உணர்ந்தாள்.
அவனோடு நிறையக் கதைக்க விரும்பினாள். அவனோ வார்த்தையைக் காட்டிலும் செயலையே விரும்பினான். தன்னைத் தின்னக் கொடுத்து முகட்டைப் பார்த்துக்கொண்டு அவள் படுத்திருந்தாள். முகட்டைப் பிரித்துக் கொண்டு தன் குதிரையோடு ராஜகுமாரன் வெளியேறிப் போனான். வருத்தமாக இருந்தது.
- நதி நகரும்…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT