Published : 07 Jun 2014 11:00 AM
Last Updated : 07 Jun 2014 11:00 AM

கவிஞன் ஒரு குடிகாரன்

கவிதை என்பது கவிஞனின் ஆத்ம உணர்ச்சிகளின் மொழிபெயர்ப்பு என்று கருதுகிறோம். அதே கவிதை கவிஞனுக்குக் கவலையை மறக்கும் கஞ்சாவாக, மயக்க மருந்தாகவும் உபயோகப்படுகிறது.

மேற்கூறிய கருத்து அனைத்தையும் தூல வடிவிலே புரிந்துகொள்ள நமது கவி பாரதியாரையே உதாரணம் காட்டலாம். பாரதியாரின் பல கவிதைகள் அவருக்குக் கவலையை மறக்கச் செய்யும் போதைப் பொருளாகவே பயன்பட்டிருக்கின்றன. பாரதி கவிஞரானாலும், அவரும் உப்புக்கும் புளிக்கும் கவலைப்படக்கூடிய மனிதர்தானே!

வாழ்க்கையில் சுகத்தை விரும்பி ஏங்கியவர் அவர். அந்தச் சுகத்தை அடைய முடியாத ஆசைகளின் எதிரொலிகளாகத் தான் அவருடைய பல கவிதைகளும் எழுந்தன. இயற்கையை மாயை என்று அஞ்சிய கூட்டத்தைச் சேர்ந்தவரல்லர் பாரதி. “ ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல” என்று வரட்டு வேதாந்தம் கற்றவரல்லர் பாரதி. ‘செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்’ என்று சொல்பவருக்கு ஈமச்சங்கு எடுத்து ஊதியவர்.

மக்களும் மனைவியும் ஒண்டவந்த பிடாரிகளல்ல, அவனுக்கு ஊக்கமளிக்கும் தெய்வச் சிற்பங்கள் என்று உணர்ந்தவர். சிலை போல நிற்கும் மனைவியும் பிள்ளைக் கனியமுதாக விளங்கும் குழந்தைகளும் அவருக்கு மாயைத் தோற்றமாகவோ, கானல் நீராகவோ தோன்றவில்லை. அவர்களெல்லாம் ‘பொய்’யின் உருவெளித் தோற்றங்களாகவே, அவருக்குப் படவில்லை. தேள் கொட்டினால் கடுக்கும் என்று நன்கு உணர்ந்தவர். உலகம் அவருக்குத் துன்பமயமாகக் காட்சியளிக்கவில்லை.

“ஒன்று பரம்பொருள்; நாமதன் மக்கள்

உலகு இன்பக் கேணி”

என்று கூறியவர்.

“தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்

தீமை யெலாம் அழிந்து போகும்”

என்று அடித்துப் பேசினவர்.

வாழ்க்கை அவருக்கு இன்பத்தின் குறியீடாகத் தோன்றியது. உலகத்தை அவர் மதுவாகக் கருத. உலகத்து இன்பத்தில் மூழ்கித் திளைத்து, கவலையை மறக்க நினைத்தார்.

வாழ்க்கை அவருக்கு இன்பத்தின் குறியீடாகத் தோன்றியது. உலகத்தை அவர் மதுவாகக் கருதினார். உலகத்து இன்பத்தில் மூழ்கித் திளைத்து கவலையை மறக்க நினைத்தார்.

“மாதரோடு மயங்கிக் களித்தும்

மதுர நல்லிசை பாடிக் குதித்தும்

காதல் செய்தும் பெறும் பல இன்பம்

கள்ளில் இன்பம் கலைகளின் இன்பம்

பூத லத்தினை ஆள்வதில் இன்பம்

பொய்மை யல்ல- இவ்வின்பங்கள் எல்லாம்”

என்று பாடினார்.

உலகத்தின் இன்பச் சரக்குகளில் தெய்வ உணர்ச்சி அவருக்குத் தென்பட்டது.

“மது நமக்கு, மது நமக்கு

மதுநமக்கு விண்ணெலாம்

மது நமக்கோர் தோல்வி வெற்றி,

மதுநமக்கு வினையெலாம்”

என்றெல்லாம் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் வளைந்து கொடுத்து, வாழ்க்கை இன்பத்தைப் பருகத் துடித்தவர் கவிஞர் பாரதி.

( தொ.மு.சி. ரகுநாதனின் ‘இலக்கிய விமர்சனம்’ நூலிலிருந்து)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x