Last Updated : 08 May, 2016 01:30 PM

 

Published : 08 May 2016 01:30 PM
Last Updated : 08 May 2016 01:30 PM

நாவல் பகுதி: பூதங்களின் புதைமேட்டில் வாழும் மனிதர்கள்

மறுநாள் வழுக்குப் பனிபெய்யும் அபாயம் இருப்பதாக அன்றிரவு எச்சரிக்கை அறிவிப்பு தொலைக்காட்சியில் விட்டு விட்டு ஓடிக்கொண்டிருந்தது. தொடர்ந்து மேற்கு ரொறன்ரோ பகுதியில் அன்று மாலை ஏற்பட்ட ரொர்நாடோ எனப்படும் உறிஞ்சும் சுழற்காற்றின் உக்கிரம் குறித்த காட்சியும் விரிவான தகவலும் ஒளிபரப்பாயின. சுபத்திரா அப்போது கீழே இருந்துகொண்டிருந்தாள். உறிஞ்சு சுழற்காற்று பற்றிய செய்தி கண்டதும் திடுமென எழுந்து ஒரு விநாடி அப்படியே உறைந்து நின்றாள். மறுகணம் தும்தும்மெனப் படிகளதிர மேலே ஓடினாள்.

மையம் கொண்ட இடத்தில் அகப்பட்ட யாவற்றையுமே ஒரு பூதம்போல் உள்ளுறிஞ்சிக்கொண்டிருந்தது அது. கார்கள் மோதுண்டன, ஒன்றின் மேலொன்று எற்றுண்டன, சிலது பாலங்களுக்குள் கவிழ்ந்து விழுந்தன. அந்தச் சுழிக்குள் அகப்படாத தூரத்தில் காரிலிருந்து இறங்கியவர்கள் உறைந்தவர்களாய் அந்தக் காட்சியைக் கண்டுகொண்டிருந்தார்கள்.

அது யாருடைய கவனத்திலிருந்தும் தவறியிருக்க முடியாது. மாலினி, சிவகுமாரன், ஆனந்தி, அனந்தி, கனகராசனென எல்லோரும்தான் கண்டிருந்தார்கள். அவ்வகைக் காலநிலைச் சீர்கேடுகளும், இயற்கை அனர்த்தங்களும் சாதாரணமானவை. அவ்வறிவிப்புகளைக் கண்டு யாரும் வேலைகளுக்கோ, வேறு அவசர காரியங்களுக்கோ போகாது விட்டுவிடுவதில்லை; எச்சரிக்கையோடு போய்வருவார்கள். உறிஞ்சு சுழற்காற்றின் பயங்கரங்களும் எப்போதாவது நடப்பதுதான். யாரும் அதை அவ்வளவு கடுமையாக எடுத்துக்கொண்டு பேசுவதுமில்லை, நினைப்பதுமில்லை. ஆனால் சுபத்திராவுக்கு மட்டும் அத்தகைய காட்சிகளும் அறிவிப்புகளும் பேரார்வத்தைத் தந்துகொண்டிருந்தன. ஒரு சனலிலிருந்து இன்னொரு சனலுக்கு, தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு, கனடியச் செய்தியிலிருந்து ஐக்கிய அமெரிக்கச் செய்திகளுக்கு என மாற்றிமாற்றி நாளெல்லாம் தொலைக்காட்சியில் அதையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருப்பாள். அதை அவளே ஒரு பூதமென ஒருநாள் குறிப்பிட்டிருந்தாள். அப்போது அவளது முகம் அச்சத்தில் கருகிப்போயிருந்தது.

கனடா தமிழ்ச் சமூகத்தில் ஒரு பழைய கதை மிகுந்த பேச்சாயிருந்தது ஒருகாலத்தில். வீரகத்தி ஆச்சியென்ற ஒரு மனுசி சொன்ன ஆயிரம் பூதங்கள் ஸ்கார்பரோ பகுதி மண்ணுக்குள் அமுங்கியிருப்பதான கதைதான் அது. அதுபற்றி முதன்முதலாகக் கேட்ட நாள்முதலே அந்தக் கதையைச் சொல்லும்படி மாலினியை நச்சரிக்கத் தொடங்கிவிட்டாள் சுபத்திரா.

மாலினி அந்தக் கதையை அறிந்தது சுபத்திரா கனடா வருவதற்கும் நான்கு வருஷங்கள் முன்பாக. அவளே திரும்ப நினைத்துப் பார்க்கவும் விரும்பாத கதையாக இருந்தது. சுபத்திராவின் விருப்பத்திலும்கூட அக்கதை பற்றி சுபத்திரா அறிய முயல்கிற ஒவ்வொரு சமயமும் மாலினி அநாயாசமாக விலக்கியே வந்திருந்தாள்.

வனமும் நதியும் புல்வெளியும் நிறைந்த இந்த மண்ணின் வரலாறு தோலாடை நாகரிகத்துடன் தொடங்குகிறது. பருந்தும் கழுகும் காகமும் எங்கெங்கும் நிறைந்து அப்போது தென்பட்டன. காட்டெருமையும் மானும் - மயிர் சடைத்த பீவரும் ஒரு அபரிமிதத்தில் கானகமெங்கும் திரிந்தன. அந்த மண்ணுள் கரியும் காரீயமும் வைரமும் பொன்னும் நிறைந்திருப்பதான ஒரு கதை பரவும்வரை, தோலுடைக் கலாச்சாரமே மண்ணில் நின்றிருந்தது. அது மாற ஆரம்பித்த முதல் தருணம்தான் ஆவிகள் வெகுத்துத் திரிந்த காலமென எப்போதும் ஒரு பூர்வ குடியினன் கதை சொல்லிக்கொண்டேயிருக்கிறான்.

வீரகத்தி ஆச்சி சொன்னது, அந்தப் பதினேழாம் நூற்றாண்டுக் கதையல்ல. ஆனாலும் அக்கதைகளிடையே ஓர் அபூர்வமான தொடர்ச்சியிருந்தது. மக்கள் செறிவடையாத ஸ்கார்பரோ பகுதியில் ஒரு பூர்வ குடியின் மயானமும், அதையொட்டியிருந்த நீர்நிலையும் மண்ணாலும் கல்லாலும் பிற பிரதேசங்களின் திடக்கழிவுகளாலும் மூடப்பட்டுக் கட்டிடங்களால் நகர்மயப்படுத்தப் படுகையில் மயானத்துள்ளிருந்த ஆயிரம் பூதங்கள் அப்படியே அமுங்கிப்போன கதையது. பூர்வ குடியின் சவக்காலையில் அமுங்கிப்போன ஆயிரம் ஆவிகளும் முனங்குவதும் அனுங்குவதும் குழறுவதும் கூப்பாடிடுவதாயும் இருந்தன. குடியிருப்பாளரின் கனவுகளிலே தோன்றி தம் நிலைமையைக் கூறிக் கெஞ்சின, மன்றாடின. நாளாக ஆக எச்சரிக்கவும் அச்சுறுத்தவும்கூடச் செய்தன. இது இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தில் நடந்தது.

இலங்கையின் பருத்தித்துறைப் பகுதியிலிருந்து வின்சென்ற் வீரகத்தி, மனைவி ராசம்மாவுடன் கனடாவின் ஒட்டோவாவுக்கு வேலைநிமித்தம் வந்துசேர்ந்த காலம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதுகளின் முற்பகுதி. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தாறு இனக்கலவரத்துக்குப் பின்னால் இலங்கை திரும்புகிற எண்ணத்தைக் கைவிட்ட வீரகத்தி, மேலும் சிலகாலப் பணியின் பின் நிரந்தர வதிவிட அனுமதி பெற்று தொடர்ந்து அங்கேயே தங்கிவிட்டார். கனடாவை இலங்கைத் தமிழனின் அகதித் தளமாக்கிய முதல் மனிதனாகக்கூட வீரகத்தி இருக்கலாம். வீரகத்தியின் மரணம் எண்பதில் நிகழ, மனைவி ராசம்மா, வீரகத்தி ஆச்சியாகி ஒன்ராறியோவில் திருமணமாகியிருந்த மகளைக் காண ஒட்டோவாவிலிருந்து வந்துபோன காலத்தில்தான் ஆயிரம் பூதங்கள் மண்ணுள் அமுங்கியிருந்த கதை வெளியானது. ஒட்டோவாவில் பயங்கரமான குளிர்காலத்தில் பஸ்ஸுக்காய் காத்திருக்க நேர்ந்த வீரகத்தியாச்சிக்கு, நகர ஓரத்தில் ஒரு பார்க்கின் எதிரே வாழிடம் கொண்டிருந்த பூர்வகுடிப் பெண்ணோடு ஏற்பட்ட அறிமுகத்தினால் அந்த ஆயிரம் பூதங்களின் கதை அவளுக்குத் தெரியவந்திருந்ததாம்.

அதை வீரகத்தியாச்சி முதலில் தன் பேத்திக்கோ பேரனுக்கோ சொல்லியிருக்கக்கூடும். அது பின்னர் ஊராரிடம் பரவியிருக்கும். அவர்களிலிருந்து அது பற்றிப் படர்ந்து பிற எல்லைகளையும் சேர்ந்திருக்கிறது. மனிதனுக்குத் தொழில்நுட்பத்துடன் ஏற்பட்ட நெருக்கம் காலத்தை மாற்றியதெனினும் கதையை மாற்றவில்லை.

அது உரமேறி உலாவரக் கிளம்பிய காலத்தில் மாலினி அந்தப் பகுதியில் வீடொன்றை வாங்கியிருந்தாள். அவளே வீரகத்தி ஆச்சியைக் கண்டிராதபோதும், கதையைக் கேட்டாள்; கதையைக் கேட்டிருந்த வேறுவேறு இதயங்களிலிருந்து. அது அவர்களது வார்த்தைகளில் பிரமாண்டம் கொண்டிருக்க முடியும். கேட்ட அவளுக்கு நெஞ்சு நொறுங்கிப்போனது. இனி செய்வதற்கு எதுவும் சாத்தியமில்லையென்ற நிலையில் அவளே அந்தக் கதையை மண்ணுள் போட்டு மூடினாள். ஆயிரம் பூதங்களின் புதைமேட்டில் நானூறு குடும்பங்கள் குடியிருந்தன. நானூறு குடும்பங்களில் குடும்பத்துக்கு சராசரி நான்கெனப் பார்த்தாலும் ஆயிரத்து அறுநூறு மனித ஜீவன்கள். ஆயிரம் பூதங்கள் அமுங்கிக் கிடக்கும் மேட்டின்மேல் நிமிர்ந்திருக்கிற வீடுகளில்தான் தாம் குடியிருக்கிறோம் என்ற கதையை யாரும் நம்பிவிடத் தயாராயிருக்கவில்லை. மாலினியும் நம்பவில்லை. நினைக்கவும் விரும்பாத கதையை அவள் சொல்லிவிடவும் முடியாது. அது சுபத்திராவுக்குக் குறையாகவே இருந்து கொண்டிருந்தது நீண்டகாலமாய். பின்னர் அவளே அதுபற்றி மறதியாகிப்போனாள்.

அன்று காலையில் சுபத்திரா எழும்பி மேலே வந்த நேரத்துக்கு மாலினி வேலைக்குப் போயிருந்தாள். ஆனந்தியும் அனந்தியும் பள்ளி செல்லத் தயாராகத் தந்தையைக் காத்துக்கொண்டிருந்தனர்.

ஒன்பது மணிக்குத் தொலைக்காட்சி நிறுத்தப்பட்டது. வீட்டுக் கதவு வெளியே சாத்திப் பூட்டப்பட்டது. பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு சிவகுமாரனின் கார் புறப்பட்டது. அவள் பெரும்பாலும் விரும்பும், சிலபோது வெறுக்கும் அந்தத் தனிமை இறுதியாக வீட்டில்வந்து கவிந்தது.

(தேவகாந்தனின் ‘கந்தில் பாவை’ நாவலின் தேர்ந்தெடுக்கப் பட்ட ஓர் அத்தியாயம் இது. சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி இந்நாவல் வெளிவருகிறது.)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x