Published : 08 Apr 2016 11:05 AM
Last Updated : 08 Apr 2016 11:05 AM
ஒரு காலத்தில் ஸ்டண்ட் படம் என்று ஒரு தனிப் பிரிவு இருந்தது. ஸ்டண்ட் படம் என்றால் ஒரு படி கீழே. (இன்று எல்லாப் படங்களுமே ஸ்டண்ட் படங்கள்.) ஸ்டண்ட் நடிகர்களுக்கு சாதாரண நடிகர்களுக்கு உள்ள மரியாதை, அந்தஸ்து கிடையாது. முதலில் நடிகர்களுக்கே அந்தஸ்து கிடையாது. ஸ்டண்ட் நடிகர் என்றால் ஏதோ புழு பூச்சி போல. ஸ்டண்ட் படங்களுக்குப் போகிறவர்கள் ரகசியமாகப் போவார்கள்.
‘மின்னல் கொடி’ என்ற படத்தில் நடித்த னிவாச ராவ் ஒரு பட்டதாரி. நல்ல பஜன் பாடகரும் கூட. அவர் முன்பு நாங்கள் இருந்த தெருவிலேயே வகுப்புகள் எடுத்து வந்தார். மாணவர்களுக்குத் தகுந்தபடி பாட்டின் ஒவ்வொரு வரியையும் எளிதாக்கிச் சொல்லிக் கொடுப்பார்.
‘மின்னல் கொடி’ படம் ஓரளவு நன்றாகவே இருக்கும். நகரில் மின்னல் கொடி என்ற பெயரில் ஒரு கொள்ளைக்காரன் பலரை பயமுறுத்தி வைத்திருக்கிறான். உண்மையில் ஆதி மின்னல் கொடி இறந்துவிட்டான். ஆனால் பலரால் பணம், சொத்து மோசம் செய்யப்பட்ட ஒரு பெண் அந்த வேடத்தை அணிந்து கொண்டு பழிக்குப் பழி வாங்குகிறாள். முந்தைய மின்னல் கொடி கொலை புரியத் தயங்க மாட்டான். புது மின்னல் கொடியின் ஒரே ஒரு பலவீனம் கொலை செய்ய முடியாது. ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இதுவே ஒரு தடயமாகத் தோன்றுகிறது. புது மின்னல் கொடியின் ஒளிவிடத்தைக் கண்டுபிடித்து விடுகிறார். அவள் மீது காதல் கொள்கிறார். மேலதிகாரியிடம் விண்ணப்பித்து அப்பெண்ணுக்குக் குறைந்த தண்டனையே தருவதற்கு ஏற்பாடு செய்கிறார். அவள் விடுதலையான பிறகு அவளை மணக்கிறார்.
மின்னல் கொடியாக கே.டி.ருக்மணி என்ற நடிகை. இன்ஸ்பெக்டர் தான் னிவாச ராவ். படத்தில் அவர் பெயரை னிவாச ராவ், பி.ஏ.. என்று போடுவார்கள். ஒரு முக்கிய தகவல். நான் பார்த்த முதல் படம் இதுதான். மின்னல் கொடி வரும்போதெல்லாம் கொட்டகையில் பெஞ்ச் மீது ஏறி நின்று ரகளை செய்துவிட்டேன். என்னை அழைத்துப் போன என் அம்மா, அக்காக்களுக்கு ரொம்ப சங்கடமாகப் போய்விட்டது. பின் வரிசைகளில் இருந்தவர்கள் “உக்காரு! உக்காரு!’’ என்று கத்துகிறார்கள். அது என் காதில் விழவே இல்லை. எனக்கு வயது நான்கு. படம் தவிர வேறேதுவும் என் கவனத்தில்படவில்லை.
எனக்குத் தெரிந்த இன்னொரு ஸ்டண்ட் நடிகர் நான் பணிபுரிந்த ஸ்டுடியோவைச் சேர்ந்தவர். அவர் வெள்ளாளத் தேனாம்பேட்டையில் வசித்து வந்தார். போய்க் கொண்டிருப்பவர் திடீரென்று எம்பி ஒரு குட்டிக்கரணம் போட்டுவிட்டு நடப்பார். எனக்கு மிகவும் கவலையாக இருக்கும். அவருக்கு வயது நாற்பது இருக்கும். இரு மனைவிகள். இருவருக்கும் குழந்தைகள் உண்டு. அவர் சினிமா நடனமும் ஆடுவார்.
‘ராஜி என் கண்மணி’ என்றொரு படத்தை எங்கள் ஸ்டுடியோ தயாரித்தது. ‘ஆன் தி டவுன்’ என்றொரு ஹாலிவுட் படத்தில் மூன்று மாலுமிகள் நியூயார்க் நகரத்தைச் சுற்றிப் பார்ப்பது போல ஒரு நடனக் காட்சி. ‘ராஜி’ படத்திலும் அதே போல ஒரு நடனம் வேண்டும் என்று டைரக்டர் விரும்பினார். மூன்று மாலுமிகள் சென்னை நகரத்தைச் சுற்றிப் பார்ப்பது போலக் காட்சி. எங்கள் ஸ்டண்ட் நடிகருக்கு பெரிய வாய்ப்பு. இதை அமைத்துக் கொடுத்தவர் சிற்பி டி.பி.ராய் சௌத்ரியின் புதல்வர். பாஸ்கர் ராய் சௌத்ரி என்று பெயர். நடனம் எல்லாம் நன்றாகவே இருந்தது. இசை, நடிப்பு எல்லாமே நன்றாகவே இருந்தன. ஆனால் படம் ஓடவில்லை. ஸ்டண்ட் நடிகருக்கு மிகுந்த ஏமாற்றம். ஆனால் பாஸ்கர் ராய் சௌத்ரி அமெரிக்கா சென்று அங்கே தங்கிவிட்டார்.
ஸ்டண்ட் நடிகருக்கு அப்புறம் பெரிய வாய்ப்புக் கிடைக்கவில்லை. திடீரென்று ஒருநாள் இறந்துவிட்டார். வீட்டில் சாப்பாட்டுக்கே வழியில்லை. சாவை எப்படிச் சமாளிப்பது? நல்லவேளையாக ஜெமினி கணேசன் ஊரில் இருந்தார். அவர் ஓடி வந்து ஸ்டண்ட் நடிகரின் இறுதிக் காரியங்களுக்கு ஏற்பாடு செய்தார். ஸ்டண்ட் நடிகர்களுக்கு அப்போது சங்கம் இருந்ததா என்று தெரியாது. இருந்தாலும் சமயத்துக்கு உதவி கிடைக்குமா என்று உறுதி கூற முடியாது.
முன்பு ஏதோ ஒரு படம்தான் ஸ்டண்ட் படம். இப்போது எல்லா முன்னணி நடிகர்களும், சிலவேளைகளில் பெண்களும் ஸ்டண்ட் செய்கிறார்கள். அதாவது, பின்னணியில் தொழில் முறை ஸ்டண்ட்காரர்கள் அவர்கள் உடைகளை அணிந்து கொண்டு அந்தப் பத்துப் பதினைந்து நிமிடங்கள் கதாநாயகர்களாக இருப்பார்கள். இன்று உலகமெங்கும் படங்களெல்லாம் ஸ்டண்ட் படங்கள். சீனப் படங்களில் ஆகாயத்தில் பறப்பார்கள். அப்படங்களுக்கு ஆஸ்கர் விருது கூடக் கிடைத்து விடும். அமெரிக்கப் படங்களில் மோட்டார் கார்கள் ஸ்டண்ட் செய்யும். அப்படங்களில் கார்கள் போகட்டும், பல ஆண்டுகள் திட்டமிட்டுப் பல ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள், பாலங்கள் ஸ்டண்ட்டுக்காகத் தவிடு பொடியாக்கப்படும்.
நான் ‘டெர்மினேட்டர் 2’ என்றொரு படத்தைச் சில நிமிடங்கள் பார்த்தேன். அதில் அழிவே இல்லாத ஒருவன் இன்னொரு அழிவே இல்லாதவனைத் துரத்துகிறான். எதற்காக? அவன் ஒரு மானுடச் சிறுவனைக் காப்பாற்றுகிறான். இந்தத் துரத்தலில் எவ்வளவு பாலங்கள், இதர வாகனங்கள் சுக்குநூறாகின்றன! நான் அதை மேற்கொண்டு பார்க்கவில்லை. இதில் ஆளுக்கு ஒரு துப்பாக்கி. சாதாரண துப்பாக்கி அல்ல; ஒரு முறை சுட்டால் ஒரு கட்டிடமே தூள் தூளாகும் பீரங்கி போன்ற வலுக் கொண்டவை. நானறிந்து பீரங்கி என்றால் அதற்குரிய தோட்டா அல்லது குண்டைப் பொருத்த வேண்டும். இன்றும் தரை பீரங்கிகளுக்கு ஒவ்வொரு முறையும் குண்டை பீரங்கி உள்ளே போட்டுத்தான் வெடிக்க வேண்டும். ஆனால் ‘டெர்மினேட்டர் 2’ என்ற படத்தின் துப்பாக்கி சர்வவல்லமை கொண்டது. சுட்டுக் கொண்டே இருக்கலாம். இதற்கு ‘மின்னல் கொடி’ எவ்வளவோ மேல்.
என்னால் சகித்துக் கொள்ளமுடியாதது, கதாநாயகன் மேலே எம்பி ஒரு ரவுடியை மார்பில் உதைப்பது. இந்தக் காட்சியை எடுக்க ஒருவன் நிஜமாகவே இன்னொருவன் மார்பில் உதைக்க வேண்டும். இந்த மாதிரிக் காட்சிகளை எடுக்கும்போது எவ்வளவு பேர் இறக்கிறார்களோ? எவ்வளவு பேர் ஆயுள் பரியந்தம் ஊனமுறுகிறார்களோ?
ஆசியாவின் மிகப் பெரிய படப்பிடிப்பு நிலையம் என்று அறியப் பட்ட விஜயா - வாஹினி ஸ்டுடியோவின் உரிமையாளர் நாகிரெட்டி யாரை, எங்கள் குடும்பத்தில் ஒரு சிறுவனுக்கு பிளஸ்-2 வகுப்புக்கு அவர் சம்பந்தப்பட்ட ஒரு பள்ளியில் இடம் கிடைப்பதற்காக சிபாரி சுக் கடிதம் கேட்கப் பார்க்க வேண்டியிருந்தது. அப்போது அவர் திரைப்படங்களில் வன்முறை கட்டுக்கடங்காமல் போய்விட்டது என்று வருத்தப்பட்டார். அதற்கு முந்தைய தினம்தான் ‘காளி’ என்ற படத்தில் தீப்பிடிக்கும் காட்சி. குதிரை வீரன் தீயில் பாய்ந்து தப்ப வேண்டும். அதற்கு பெட்ரோல் பயன்படுத்தியிருக்கிறார்கள். அது கட்டுக்கடங்காமல் எரிந்து ஒரு குதிரை செத்துப் போய்விட்டது.
ஒன்று கூறி விட வேண்டும். அவருடைய சில படங்கள், ‘கல்யாணம் பண்ணிப் பார்,’ ‘மிஸ்ஸியம்மா,’ ‘மாயா பஜார்,’ ‘ராம் அவுர் ஷியாம்.’
- புன்னகை படரும்…
ஓவியங்கள்: மனோகர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT