Published : 09 Apr 2022 07:28 AM
Last Updated : 09 Apr 2022 07:28 AM

அடுத்த தலைமுறைக்கு நம் சித்த மருத்துவம்

ஆ.தமிழ்மணி

வணிக நோக்கத்தாலும் பிரித்தாளும் தந்திரத்தாலும் தடைவிதிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட நமது தமிழ் மரபுவழி சித்த மருத்துவத்தை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நமக்கு இரா.முத்துநாகு தொகுத்துள்ள ‘குப்பமுனி அனுபவ வைத்திய முறை’ நூல் மிக முக்கியமானதாகிறது.

ஒவ்வொரு மொழியும் இசை, கட்டிடக் கலை எனப் பல அறிவியல் துறைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்திய மொழிகளில் தனித்துவமிக்க மருத்துவ அறிவியலைக் கொண்ட மொழி தமிழ். தமிழ் இலக்கியங்களில் காதலையும், வீரத்தையும் விஞ்சிய வியப்பான செய்திகளாக இருப்பது மருத்துவச் செய்திகள்தான். தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் மருத்துவக் கூறுகளின் புதையலாகவே இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மரபுவழியாகக் கடத்தப்பட்ட பல மருத்துவ அறிவுத் துறைகள், கவிதைகளாகவும் புரிந்துகொள்ள முடியாத உரைநடையாகவும் இப்போதும் புதைந்து கிடக்கின்றன.

தமிழ் மரபுவழி மருத்துவத்தை மக்கள்மயப்படுத்தியதில் குப்புசாமி அய்யர், பா.மு.அப்துல்லா சாயபு, இப்ராஹிம் ராவுத்தர், கண்ணுச்சாமிப் பிள்ளை, மதுரை குருசாமி கோனார், தஞ்சை தம்பையா போன்றவர்கள் எழுதிய அனுபவ வைத்திய நூல்கள் முதன்மையானவை. 1964-க்குப் பிறகு, தமிழில் அனுபவ வைத்திய முறை நூல்கள் பெரிதாகக் கவனப்படவில்லை.

பழைய நூல்கள் மறுபதிப்பும் இல்லை. ஒட்டுமொத்த மனித குலமும் பன்னாட்டு மருத்துவ வணிகக் குழுக்களிடம் சிக்கிக்கொண்டதில், தமிழ்ச் சமூகம் மட்டும் விதிவிலக்கல்ல. மண்ணும் மரபும் சார்ந்த நமது பாரம்பரிய அறிவை முற்றாகத் தொலைத்துவிட்டால், எத்தகைய ஆபத்தில் சிக்கிக்கொள்வோம் என்பதைக் காலம் நமக்கு செவிட்டில் அறைந்து உணர்த்தியிருக்கிறது. கபம், வாதம், பித்தம் எனக் காய்ச்சலை 36 வகையாகப் பிரித்து, ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் உடல்வாகுக்கு ஏற்றாற்போல் மருந்துகளைச் சுத்திசெய்து கொடுக்கும் அறிவு நம்மிடம் இருந்திருக்கிறது. அதை ஏன் நாம் கைவிட்டோம் என்ற கேள்வியை இந்தப் பெருந்தொற்றுக் காலம் எழுப்பியிருக்கிறது.

டெங்கு காய்ச்சலை நிலவேம்பால் எதிர்கொள்ள முடிந்ததையும், கரோனா முதல் அலையைக் கபசுரக் குடிநீரால் எதிர்கொள்ள முடிந்ததையும் நினைவுகூரலாம். மனிதரை மனிதர் தீண்டவும் நோக்கவும் மறுக்கும் கொடுங்காலத்தில் வாழ்கிறோம். இந்தக் கொடுங்காலத்தில் நம்பிக்கையாகவும் ஆறுதலாகவும் நிற்பவர்கள் மரபுவழி மருத்துவர்கள். தமிழ் மரபுவழி மருத்துவம் நமக்குப் புதிய நம்பிக்கையையும் புதிய வெளிச்சத்தையும் கொடுத்துள்ளது. அரிசி அளவு அல்ல, அரிசி எடையே ரசத்தின் அளவு என்பதும், ஒரே மருந்து, அதனுடன் சேரும் அனுபானத்தினால் பல நோய்களைக் குணப்படுத்தும் என்பதும் தமிழ் மருத்துவத்தின் நுட்பத்தைக் காட்டுகிறது.

மருத்துவர் செ.தெய்வநாயகத்துக்குப் பிறகு அலோபதி மருத்துவத்தையும் சித்த மருத்துவத்தையும் ஒருங்கிணைத்து சிகிச்சை அளிக்கும் முறையை யாரும் முன்னெடுக்கவில்லை. ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத பல நோய்களுக்கு அலோபதி மருத்துவத்துடன் சித்த மருத்துவத்தையும் இணைத்துச் சிகிச்சை அளிப்பதன் மூலம் மனித குலத்துக்குப் புதிய விடியலைத் தர முடியும் என்ற நம்பிக்கையை இரா.முத்துநாகு உருவாக்கியிருக்கிறார். சித்த மருத்துவத்துக்கான பல்வேறு தடைகளை நீக்குவதுடன், அலோபதி மருத்துவத்துக்கு இணையான கவனத்தைச் சித்த மருத்துவத்தின் மீதும் தமிழ்நாடு அரசு காட்டினால், எதிர்காலத்தில் உலக மக்களை ஈர்க்கும் மரபுவழி மருத்துவச் சுற்றுலா மையமாகத் தமிழகம் விளங்கும்.

இருட்டடிப்புச் செய்யப்பட்ட வரலாற்றை மீட்கும் வகையில், தொல்லியல் துறையில் முனைப்புக் காட்டும் தமிழக அரசு, தொன்மையான வாழ்க்கை முறை அறிவியலைச் சுமந்துகொண்டிருக்கும் பாரம்பரிய சித்த மருத்துவர்களின் மருத்துவ அறிவையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
481 மருத்துவக் குறிப்புகளுடன் மூன்று தலைமுறைகளாகக் கட்டிக்காத்த பெரும் சொத்தை ரகசியம் காக்காமல் திறந்த மனதோடு நம் தலைமுறைக்குப் பந்தியிட்டிருக்கிறார் நூலாசிரியர் இரா.முத்துநாகு.

- ஆ.தமிழ்மணி, ‘உறங்கும் மனசாட்சி’ என்ற நூலின் ஆசிரியர். தொடர்புக்கு: advocatetamilmani@gmail.com

குப்பமுனி அனுபவ வைத்திய முறை
தொகுப்பாசிரியர்:
இரா.முத்துநாகு
உயிர் பதிப்பகம்,
சென்னை-19, விலை: ரூ.200
தொடர்புக்கு: 98403 64783

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x