Published : 06 Mar 2022 11:37 AM
Last Updated : 06 Mar 2022 11:37 AM
சமகால அபுனைவு எழுத்தாளர்களில் மருதன் குறிப்பிடத்தக்கவர். 15 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் இவர் அரசியல், வரலாறு, வாழ்க்கை வரலாறு போன்றவற்றை மையப்படுத்திப் பல நூல்களை எழுதியுள்ளார். சிறாருக்கு இவர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வெளியாகியுள்ளன. ‘ரொமிலா தாப்பர்: ஓர் அறிமுகம்’, ‘அசோகர், ‘இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை’ ஆகியவை இவரது சமீபத்திய நூல்கள்.
குழந்தைகளுக்கு எழுதுவது எளிதா, பெரியவர்களுக்கு எழுதுவது எளிதா?
பெரியவர்களுக்கென ஒன்றை எழுதும்போது அது அவர்களுக்குப் புரியுமா என்பதற்காகப் பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை. ஆனால், குழந்தைகளுக்கு எழுதும்போது அது அவர்களுக்குச் சரியானதாக இருக்குமா, எளிதில் புரியுமா, எந்த முன்முடிவும் இல்லாமல் எழுதுகிறோமா, பாகுபாடின்றியும் நுண்ணுணர்வோடும் எழுதுகிறோமா, எளிய நடையில் எழுதுகிறோமா என்பதெல்லாம் முக்கியம்.
ஏன் சிறார் எழுத்தாளர்கள் அதிக அளவில் உருவாகவில்லை?
தமிழில் நேரடியான சிறார் படைப்புகள் இன்னும் அதிகம் தேவை. நம்மிடையே ஏராளமான லாவணிக் கதைகள், பழமொழிகள், விடுகதைகள் என்று எவ்வளவோ இருக்கின்றன. அவற்றையெல்லாம் படைப்பாக்கலாம். தவிர, தமிழில் சிறார் படைப்புகள் வருமானம் ஈட்டக்கூடியவையாக இல்லாததும் இதற்கு ஒரு காரணம். பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குப் புத்தகங்களை வாங்கித் தருவதில்லை. வாசிக்கிற குழந்தைகளும் ஆங்கிலத்தில் காட்டும் ஆர்வத்தைத் தமிழ்ப் புத்தகங்கள் மீது காட்டுவதில்லை. சென்னை புத்தகக்காட்சியில் நான்கு குழந்தைகளைச் சந்தித்தேன். அவர்களில் ஒருவர்கூட தமிழ்ப் புத்தகங்களை வாங்கவில்லை. நன்றாக இருக்கும் என்று பரிந்துரைத்தும் அவற்றைப் பிரித்துக்கூடப் பார்க்கவில்லை.
சுவாரசியமான நடையில் வரலாற்றை எழுத முடியாதா?
வரலாறு எப்போதும் சிக்கலானதுதான். இதுதான், இப்படித்தான், இது சரி, இது தவறு என்று எதையுமே எளிதில் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இந்தப் பன்முகத்தன்மைதான் வரலாற்று நூல்களின் தீவிரத்துக்குக் காரணம். வரலாற்றின் உண்மைத்தன்மை சிலரைச் சோர்வடையச் செய்துவிடும். வரலாறு குறித்த தேடலும் வரலாற்று அறிவும் இருக்கிறவர்களால் மட்டுமே சிலவற்றைப் புரிந்துகொள்ள முடியும். வரலாற்றை எளிமைப்படுத்த முடியாது. ஆனால், எளிமையாகச் சொல்ல முடியும்.
நீங்கள் அதிகமாகத் தகவல் தேடி அலைந்து எழுதிய நூல் எது?
அசோகர் நூலுக்கு அதிகம் உழைத்தேன். நமக்கு அசோகரைப் பற்றி எந்த அளவுக்குத் தெரியும்? அசோகர் எப்போது பிறந்தார், எப்போது பதவிக்கு வந்தார், எந்த ஆண்டு இறந்தார், கலிங்கப் போருக்குப் பிறகுதான் புத்த மதத்துக்கு மாறினாரா, அதற்கு முன்பு புத்த மதம் அவருக்கு அறிமுகமாகவில்லையா என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள எவ்வளவோ உண்டு. அதற்கு வரலாற்று ஆய்வாளர்களின் பணி நமக்கு உதவும். நயன்ஜோத் லாஹிரி, ரொமிலா தாப்பர் போன்றோரின் பண்டைய இந்தியா குறித்த நூல்களில் நமக்கான குறிப்புகள் இருக்கும். வரலாற்றில் பின்னோக்கிப் போகப் போகத்தான் சிக்கல் அதிகமாகும். எதுவுமே தெளிவாக இல்லாத நிலையில் பண்டைய வரலாற்றைத் தெரிந்துகொள்வது சவாலானது. கல்வெட்டுகளை மட்டும் வைத்து வரலாற்றை எழுதிவிட முடியாது. இலக்கியங்கள், வாய்மொழிக் கதைகள், கோயில்கள், சிற்பங்கள் என்று வரலாற்றைத் தாங்கி நிற்கும் எதையுமே நாம் புறக்கணித்துவிட முடியாது. அனைத்தையும் சேகரித்து அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து எழுத வேண்டும்.
நாம் ஏன் வரலாற்றை வாசிக்க வேண்டும்?
இன்று நாம் பேசுகிற அரசியல் எல்லாமே வரலாற்றின் எச்சம்தானே. இந்த உலகில் எந்த இனமும் மதமும் குழுவும் கலப்பில்லாததல்ல. டோனி ஜோசப் போன்ற வரலாற்று ஆய்வாளர்களைக் கேட்டால், நாம் அனைவரும் ஆப்பிரிக்காவிலிருந்து வந்ததாகச் சொல்வார். வரலாறு இப்படி இருக்க, நாம் இன்று தூய்மைவாதத்தைப் பேசி, அதை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கிறோம். இப்போது பலர் தங்கள் கருத்துடன் உடன்படாததை எல்லாம் எரித்துவிட வேண்டும் என்கிறார்கள். உண்மையில், வரலாற்று ஆய்வாளர்கள் புராணம், இதிகாசம் என எதையுமே புறந்தள்ள மாட்டார்கள். அவை எழுதப்பட்ட காலம், எழுதியவர் போன்றவற்றை வைத்து அந்தக் காலத்தில் நிலவிய பண்பாட்டை, வாழ்க்கை முறையை அறிந்துகொள்ளலாமே.
- பிருந்தா சீனிவாசன், தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT