Published : 05 Mar 2022 07:10 AM
Last Updated : 05 Mar 2022 07:10 AM

சென்னை வந்தது பொருநையின் தொன்மை!

பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மைக்கும் மொழி வளத்துக்கும் அறிவியல் முன்னெடுப்புகளுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சென்னை புத்தகக்காட்சியில் 5,000 சதுர அடியில் ‘பொருநை ஆற்றங்கரை தொல்பொருள் காட்சி அரங்கு’ அமைக்கப்பட்டுள்ளது. புத்தகக்காட்சிக்குள் நுழைவதற்கு முன்பாகவே, இந்த அரங்கில் தொல்லியல் சின்னங்களுக்குள் காலப்பயணம் மேற்கொண்டு திரும்பலாம்.

தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அரங்கு, ஒரு தற்காலிகத் தொல்லியல் அருங்காட்சியகமாகவே மாற்றப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் கிடைத்த பொருட்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. உண்மையான தொல்லியல் அகழாய்வுத் தளத்தைப் போலவே தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முப்பரிமாண மெய்நிகர் அனுபவத்தையும் இங்கே பெறலாம். 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய நெல்மணிகள் கிடைத்த தளத்தின் மாதிரி, முதுமக்கள் தாழி, அகழாய்வுக் குழியில் புதைந்த நிலையில் உள்ள ஈமத்தாழிகள், சுடுமண் உருவங்கள்-பொம்மைகள், அணிகலன்கள், ஒன்பது அடுக்கு கொண்ட சுடுமண் குழாய்கள், கறுப்பு-சிவப்பு நிற மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், வட்டச்சில்லுகள், நுண்கற்கருவிகள் உள்ளிட்ட அகழாய்வுப் பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் நமது தொன்மை வரலாற்றின் ஆதாரங்களை உணர்த்தும்விதமாக ‘பொருநை ஆற்றங்கரை நாகரிகம்’, ‘கீழடி சங்க கால நகர நாகரிகம்’ எனும் இரண்டு நூல்களைத் தமிழ்நாடு தொல்லியல் துறை தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிட்டிருக்கிறது.

இளைஞர்களும் குழந்தைகளும் இவற்றை நேரில் காண்பது நம்முடைய தொன்மையான வரலாறு, பண்பாட்டின் சிறப்பு, அறிவுத் தொடர்ச்சி ஆகியவற்றின் மீது அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும் பிடிப்பையும் உணர்த்துகிறது. இதுபோன்ற அரங்குகள் மாநிலத்தின் பல இடங்களில் அமைக்கப்பட்டு, நமது தொன்மை தமிழ் நிலமெங்கும் உணர்த்தப்பட வேண்டும்.

- ஹுசைன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x