Published : 28 Feb 2022 01:50 PM
Last Updated : 28 Feb 2022 01:50 PM
ஷஹிதாவின் மொழிபெயர்ப்பில் ஜே.எம்.கூட்ஸியின் ‘டிஸ்கிரேஸ்’ நாவல் தமிழில் ‘மானக்கேடு’ (எதிர் வெளியீடு) என்ற தலைப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ளது. நிச்சயம், தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புகளில் ஒன்றாக ஷஹிதாவின் இம்மொழிபெயர்ப்பைக் கூற முடியும். அந்த அளவுக்கு கூட்ஸியின் இசைமையையும் ஆழத்தையும் கச்சிதத்தையும் தமிழில் கொண்டுவந்துள்ளார் ஷஹிதா. ஏற்கெனவே, ஆலிஸ் வாக்கரின் ‘தி கலர் பர்ப்பிள்’ நாவலை ‘அன்புள்ள ஏவாளுக்கு’ என்ற தலைப்பிலும், காலித் ஹுசைனியின் ‘எ தெளசண்ட் ஸ்ப்ளெண்டிட் சன்ஸ்’ நாவலை ‘ஆயிரம் சூரியப் பேரொளி’ என்ற தலைப்பிலும் மொழிபெயர்த்துள்ளார். ஷஹிதாவுடன் உரையாடியதிலிருந்து…
‘மானக்கேடு’ மொழிபெயர்ப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?
2018, நவம்பர் மாதம் கஜா புயல் புதுக்கோட்டையைத் துவம்சம் செய்திருந்ததில், தொடர்ந்து மூன்று நாட்கள் மின்சாரம் இல்லாமல் போயிருந்த, அன்றாடத்தின் ஒழுங்கு முற்றாகக் குலைந்திருந்த நாட்களில்தான் ‘டிஸ்கிரேஸ்’ நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். அகல்விளக்கு வெளிச்சத்தில் மூன்று நாட்களில் அந்த நாவலை முடித்தபோது, அது என்னை முழுமையாக ஆட்கொண்டிருந்தது. இதற்கு முன் நான் வாசித்தறியாத கதைக்களனிலும் அர்த்தப்பாட்டுத் தளத்திலும் மிகவும் ஆழமான நாவல் அது. அந்நாவல் எழுப்பிய கேள்விகளால் ஸ்தம்பித்துப் போயிருந்தேன். இந்த நாவலை மொழிபெயர்ப்பதன் வழியாக மட்டுமே அது உண்டாக்கிய பாதிப்பிலிருந்து முன்னகர்ந்து செல்ல முடியும் என்று தோன்றியது. அவ்வாறாகவே, ‘மானக்கேடு’ மொழிபெயர்ப்புப் பயணம் தொடங்கியது. என் வாழ்வின் கடுந்துயரமான காலகட்டத்தில் இந்த நாவலை மொழிபெயர்க்கும் பணியைத் தொடங்கியிருந்தேன். என்னுடைய தந்தை கரோனா தொற்றால் மரணமடைந்திருந்த நேரம் அது. பெரிய நிலைகுலைவுக்கு ஆளாகியிருந்த அந்தத் தருணத்தில், இந்த நாவல் மொழிபெயர்ப்பு எனக்கேயான ஒரு தனி உலகமாக விரிந்து, என்னை ஆற்றுப்படுத்தவும் செய்தது.
உங்கள் மொழிபெயர்ப்புப் பயணம் எப்படித் தொடங்கியது?
நினைவு தெரிந்தது முதலே என்னைச் சுற்றி மொழிபெயர்ப்புப் புத்தகங்கள்தான் இருந்தன. அப்பா கம்யூனிஸத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதால், ரஷ்ய இலக்கிய நூல்களின் மொழிபெயர்ப்புகள் எங்கள் வீட்டில் அதிகம் இருந்தன. அவற்றினூடாகவே நான் வளர்ந்துவந்தேன். ஏன் மொழிபெயர்ப்பில் ஈடுபடுகிறேன் என்று கேட்டால், ஏனைய எவற்றையும்விட மொழிபெயர்ப்பில் ஈடுபடுவது எனக்குப் பெரும் உற்சாகத்தை அளிக்கிறது. மொழிபெயர்க்கும் பிரதிகள் என் முன் வைக்கும் சவால்களைத் தாண்டி, ஆக்கத்தை முடிக்கும் சமயம் கிடைக்கும் கிளர்ச்சி விலைமதிப்பற்றது.
எதன் அடிப்படையில் ஒரு புத்தகத்தை மொழிபெயர்க்கத் தேர்வுசெய்கிறீர்கள்?
என்னுடைய முதல் மொழிபெயர்ப்பான ‘அன்புள்ள ஏவாளுக்கு’ நாவலை மொழிபெயர்ப்பதற்கு ‘எதிர் வெளியீடு’ என்னை அணுகினார்கள். அதற்குப் பிறகு நான் மொழிபெயர்ப்பதற்கான பிரதிகளை நானே தேர்வுசெய்கிறேன். இப்போது மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும் மார்க்கரெட் அட்வுட்டின் ‘தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்’ மற்றும் ‘தி டெஸ்டமென்ட்’ ஆகிய நாவல்களும் என்னை மிகவும் பாதித்த நாவல்கள். நான் தேர்வு செய்யும் நாவல்கள் அனைத்தும் பெண்களை மையப்படுத்தியவை. பெண்களின் வாழ்க்கையை, அதன் துயரங்களைப் பேசும் நூல்களே என்னுடைய தேர்வாக இருக்கின்றன.
நீங்கள் மொழிபெயர்க்க விரும்பும் புத்தகங்கள்?
விளாடிமிர் நபக்கோவின் ‘லோலிதா’, குந்தர் கிராஸின் ‘தி டின் ட்ரம்’, மிலன் குந்தேராவின் ‘தி அன்பியரபிள் லைட்னஸ் ஆஃப் பீயிங்.'
மொழிபெயர்ப்பில் ஈடுபடும் தருணம் உங்களுக்கு எப்படியானது?
அந்தரங்கமான ஒரு பயணம் அது. ஒரு புனைவை மொழிபெயர்க்கும்போது அதன் அனைத்துத் தளங்களும் துல்லியமாக நம் கண் முன் விரியும். வாசிக்கும்போது பெரிய அளவில் தாக்கம் செலுத்தாத பகுதிகள் மொழிபெயர்க்கும்போது இன்னும் ஆழமாக நம்முள் இறங்கிவிடுவதுண்டு. ‘ஆயிரம் சூரியப் பேரொளி’ நாவலை மொழிபெயர்க்கும்போது, பல இடங்களில் உடைந்து அழுதிருக்கிறேன். ‘மானக்கேடு’ நாவல், அப்பா - மகள் இடையிலான உறவையை மையமாகக்கொண்டது. அதில் பல இடங்களில் மொழிபெயர்க்கும்போது மறக்கவே இயலாத பெருந்தருணங்களை அனுபவித்தேன். நான் மொழியாக்கிக்கொண்டிருக்கும் பிரதியுடன் தினந்தோறும் உறவாடுவது என்பது என்னுடைய பிரத்யேகமான உலகத்தில் சஞ்சரிப்பதற்கு ஒப்பானது. தியானத்தில் ஆழ்வதுபோல அதனுள் மூழ்கிப்போகும் சமயங்களில் பிரபஞ்சத்துடன் ஒன்றிணையும் ஆன்மிக அனுபவமாகவும் அது விரிவது உண்டு.
- முகம்மது ரியாஸ், தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT