Published : 27 Feb 2022 11:45 AM
Last Updated : 27 Feb 2022 11:45 AM
தமிழ் சினிமாவிலும் தமிழ்நாட்டு அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் வாழ்வு, ஆய்வாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் அள்ளஅள்ளக் குறையாத சுவாரசியங்கள் நிறைந்தவை. அவரைப் பற்றி பல்வேறு கோணங்களில் பல நூறு நூல்கள் எழுதப்பட்டிருந்தாலும் தற்போது சென்னைப் புத்தகக்காட்சியை ஒட்டி வெளியாகியிருக்கும் மூன்று நூல்கள் கவனம் ஈர்க்கின்றன.
எம்ஜிஆரின் பேரனும் அவருடைய மருமகனின் மகனுமான குமார் ராஜேந்திரன்
‘எம்ஜிஆர்’ என்னும் தலைப்பில் ஏராளமான தகவல்களையும் அரிய ஒளிப்படங்களையும் உள்ளடக்கிய தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
கெட்டி அட்டை, வழவழப்பான வண்ணக் காகிதத்துடன் பெரிய அளவில் வெளியிடப்பட்டிருக்கிறது இந்தத் தொகுப்பு. ‘எங்க வாத்தியார்’ என்னும் நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. எம்ஜிஆருடன் பணியாற்றிய நடிகைகள், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், கலை இயக்குநர்கள், உடையலங்கார, சிகை அலங்காரக் கலைஞர்கள், சண்டைப் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அதிக கவனம் பெறாத கலைஞர்கள் உட்பட திரைத்துறையினர் எம்ஜிஆர் குறித்து நூலாசிரியர் கொற்றவனுக்கு அளித்த பேட்டிகளும் பகிர்ந்துகொண்ட நினைவுகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த ‘புதிய பூமி’ திரைப்படத்தின் கதாசிரியராக தமிழ்த் திரைப்படத் துறையில் நுழைந்த வி.சி.குகநாதன் இந்த இருவர் குறித்தும் எழுதிய கட்டுரைகள் ‘என் முதல் பட நாயகனும் நாயகியும்’ என்னும் தலைப்பில் நூலாகத் தொகுக்கப்பட்டு வசந்தா பிரசுரம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
எம்ஜிஆர்
தொகுப்பாசிரியர் - குமார் ராஜேந்திரன்
வெளியீடு - தாய்,
மெரினா புக்ஸ்
விலை: ரூ.1,800
எங்க வாத்தியார்
கொற்றவன்
வானதி பதிப்பகம்
விலை: ரூ.500
என் முதல்பட நாயகனும் நாயகியும்
வி.சி.குகநாதன்
வசந்தா பிரசுரம்
விலை: ரூ.110
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT