Published : 26 Feb 2022 11:37 AM
Last Updated : 26 Feb 2022 11:37 AM
சிற்றிதழ் ஆசிரியர், பதிப்பாளர், தொல்லியல் ஆர்வலர், கவிஞர் என்று பல பரிமாணங்களைக் கொண்டவர் ‘புது எழுத்து’ மனோன்மணி எனும் சுகவன முருகன். இவர் நடத்திய ‘புது எழுத்து’ சிற்றிதழ் மூலம் காத்திரமான பங்களிப்புகளைச் செய்தவர். தற்போது தொல்லியல் தொடர்பாக ‘சாசனம்’ என்ற இதழை நடத்திவருகிறார். கணித ஆசிரியரான மனோன்மணியிடம் உரையாடியதிலிருந்து…
‘புது எழுத்து’ இதழ் மறுபடியும் வரவிருக்கும் சூழலில், அந்த இதழின் கடந்த காலத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழ்ச் சிறுபத்திரிகைகள் பற்றிப் பட்டியலிடுபவர்கள் செளகரியமாக ‘புது எழுத்’தைத் தவிர்த்துவிடுவார்கள். ‘புது எழுத்து’ யாருக்கும் சவாலாக இருந்தது இல்லை. அதன் சோதனை முயற்சிகள், நகுலனின் ‘அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டி’ குறுநாவல், பா.வெங்கடேசனின் நீள்கதைகள், ஜோஸ் அன்றாயன் கதைகள், ஸ்ரீநேசன், கண்டராதித்தன், சபரிநாதன், மனோமோகன் கவிதைகள், மொழிபெயர்ப்பு இணைப்பிதழ்கள், குறிப்பாக காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் ‘முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்’, சரமாகோவின் ‘அறியப்படாத தீவின் கதை’ போன்றவற்றின் மொழிபெயர்ப்புகள் முழுமையாக வெளிவந்தன. மார்க்கேஸின் ‘ஒரு நூற்றாண்டு காலத் தனிமை’ தொடராக வந்தது என நினைக்கவே நிறைவைத் தருகிறது. ‘புது எழுத்து – நவீனத்துவத்தின் முகம்’ என்று கவிஞர் ராணி திலக் கூறியது ஓரளவு சரியானதுதான் என்பதை ‘புது எழுத்து’ இதழின் கடந்த காலம் காட்டுகிறது.
தொல்லியல் சார்ந்து உருவாகியிருக்கும் புதிய ஆர்வம் என்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டுவரும் என்று நினைக்கிறீர்கள்?
தொல்லியல் ஆர்வம் புதிய தேடல்களையும் கண்டுபிடிப்புகளையும் கணிசமாகக் கொண்டுவந்திருக்கிறது என்பதும் தமிழ்நாட்டைத் தாண்டி, இந்திய அளவில் குறிப்பாக தென்னகக் கலை-சிற்ப-படிம வரலாறு ஆகியவற்றில் காட்டப்படும் ஈடுபாடு, உலக அளவில் சிறந்த நாகரிகங்கள் பற்றி அறிதல், அதனைத் தமிழ்நாட்டின் வரலாற்றோடு ஒப்புநோக்கும் பார்வை போன்றவை சிந்தனை விரிவுக்கு இட்டுச்செல்வதைப் பார்க்க முடிகிறது. குறுகிய நோக்கு தளர்வது முக்கியமான ஒன்று. இந்த ஆர்வத்தை முறையாக நெறிப்படுத்தினால் காத்திரமான ஆய்வுகள் இதன் மூலம் வெளிவரும் வாய்ப்புகள் உள்ளன.
புத்தக விநியோகக் கட்டமைப்பு பலவீனமாக இருக்கும் சூழலில் பதிப்பாளராக நீங்கள் நிறைய கவிதைத் தொகுப்புகளைப் பதிப்பித்திருக்கிறீர்கள். நிறைய இளம் கவிஞர்களும் அதில் அடக்கம். கவிதை மேல் இவ்வளவு காதல் ஏன்?
கல்லூரிக் காலத்தில் ‘ழ’ வெளியீடாக வந்த ஆனந்த் – தேவதச்சனின் ‘அவரவர் கை மணல்’போல என் கவிதைகளையும் சக கவிஞர்களின் கவிதைகளையும் சேர்த்துத் தொகுப்பாகக் கொண்டுவர ஒரு முயற்சி நடந்தது. எனது பங்குத் தொகையை என்னால் தர முடியாத நிலையில், நண்பரின் தொகுப்பு மட்டும் வந்தது. 15 ஆண்டுகள் கழித்து நான் வேலைக்கு வந்த பின் ‘கலவரம்’ என்ற என் தொகுப்பை நானே என் செலவில் கொண்டுவந்தேன். அந்தக் காயம் இன்னும் பச்சையாக இருக்கிறது. கவிதை கைவசப்படல் அதன் மீதான மோகத்தை இன்னும் அதிகமாக்குகிறது. பெருந்தொற்றுக் காலத்தில் எழுதிய ‘ஷாயென்ஷா’ அநாமிகா ரிஷியால் ஆங்கிலத்திலும், வரதனால் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. இன்னும் ஒரு தொகுப்பு போடும் அளவுக்குக் கவிதைகள் இருக்கின்றன.
‘புது எழுத்து’ இதழ்களை டிஜிட்டல்மயப்படுத்தியது பற்றிச் சொல்லுங்களேன்...
அமேஸான் கிண்டிலில் கிடைக்கும் தமிழ்ச் சிறுபத்திரிகைகளின் மீள்பதிப்பும் ஒரு காரணம். ஃபிளாப்பி, சி.டி. டி.வி.டி. எனத் தொழில்நுட்பப் படிநிலை வளர்ச்சியும் இணையத்தின் பிரம்மாண்டமும் என்னை யோசிக்க வைத்தன. என்னிடமே ‘புது எழுத்து’ இதழ்கள் 1-லிருந்து 12 வரை இல்லை. ‘புது எழுத்து’ இதழின் பழைய படிகளைக் கேட்பவர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் வருந்தியிருக்கிறேன்.
அதே சமயம், டிஜிட்டல்மயப்படுத்தினாலும் சந்தைப்படுத்த வேண்டாம் என்று தீர்மானித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். பலரும் உதவ முன்வந்தனர். டிஜிட்டல் இதழ்கள் எல்லோராலும் எல்லா வகையிலும் இலவசமாகத் தரவிறக்கம் செய்யும்படியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். சென்னையிலுள்ள ‘ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்’ இந்த இதழ்களை முழுமையாக டிஜிட்டலாக்கும் பணியை முன்வந்து செய்துகொண்டிருக்கிறது. பொதுமைப்படுத்தப்பட்ட ‘புது எழுத்து’ இதழ்களை உலகில் எங்கிருந்தாலும் இலவசமாகத் தரவிறக்கம் செய்து படிக்க முடியும். இது ஒருவகையில் சாகாதிருக்கும் முயற்சிதான்.
‘புது எழுத்து’ இதழின் புதிய பரிணாமம் என்னவாக இருக்கும்?
இடைநிலை பத்திரிகைகளால் பறிபோன விமர்சன மரபுக்குப் புத்துயிர் ஊட்டுவதும் சோதனை முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதும் புதிய படைப்புகளின் சாத்தியப்பாடுகளை விரிவாக்குவதும் ‘புது எழுத்து’ இதழின் புதிய பரிணாமமாக இருக்கும்.
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT