Published : 09 Apr 2016 11:03 AM
Last Updated : 09 Apr 2016 11:03 AM

அஸிமோவுடன் ஓர் அறிவியல் சவாரி!

அமெரிக்க எழுத்தாளரான ஐசக் அஸிமோவின் (1920-1994) எழுத்துலகம் மிகவும் பிரம்மாண்டமானது. அவர் எழுதிய, தொகுத்த புத்தகங்களின் எண்ணிக்கை மட்டும் ஐநூறைத் தாண்டும். அறிவியல் புனைகதை, புதிர்க் கதைகள், அறிவியல் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், பைபிள் குறித்த நூல்கள் என்று பல்வேறு வகைகளில் எழுதியிருக்கிறார்.

அஸிமோவின் சாதனைகளில் மிகவும் முக்கியமானது அறிவியலை மக்களிடம் எளிதில் கொண்டுபோய்ச் சேர்த்ததுதான். உயிர்வேதியியல் பேராசிரியராக இருந்தாலும் ஐசக் அஸிமோவின் எழுத்து பாமரர்களுக்கு நெருக்கமானது.

வெவ்வேறு தலைப்பில் அமைந்த அஸிமோவின் அறிவியல் கட்டுரைகள் ‘அறிவியல் அறிவோம்’ என்ற தலைப்பில் பல்வேறு மொழிபெயர்ப்பாளர்களால் 16 சிறு புத்தகங்களாக மொழிபெயர்க்கப்பட்டு, மலிவு விலையில் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. அணு, அண்டம், உயிர்களின் தோற்றம், பரிணாமம், மின்சாரம், சூரிய ஆற்றல், ரத்தம், ஆழ்கடல், வைட்டமின்கள் என்று அபாரமான அறிவியல் சவாரி செய்திருக்கிறார் அஸிமோவ்.

ஒவ்வொரு பொருளுக்கும், விஷயத்துக்கும் உள்ள ஆதிவரலாற்றிலிருந்தே அஸிமோவ் தொடங்குகிறார். அறிவியலைப் பொறுத்தவரை தொடங்கும் இடம் வேறாகவும் வந்துசேரும் இடம் வேறாகவும் இருந்தாலும் தொடக்கம் என்பது முக்கியமல்லவா! அணுவைப் பற்றி கி.மு. 450-ல் லெசிப்பஸ் என்ற கிரேக்க ஞானி சொன்னதும் இன்றைய இயற்பியல் சொல்வதற்கும் எவ்வளவு வேறுபாடுகள்! ஆனாலும், அணு என்ற ஒன்றையே யாரும் ஏற்றுக்கொள்ளாமல் இருந்த காலத்தில் அப்படி ஒன்று இருக்கக்கூடும் என்று லெசிப்பஸ் முன்வைத்த ஊகம் இன்று அணுவை நாம் புரிந்துவைத்திருப்பதற்கு அடித்தளம் இல்லையா? அறிவின் தற்போதைய நிலை மட்டுமல்ல அறிவின் வரலாறும் சேர்ந்ததே முழுமையான அறிவு. ஆதிகால நம்பிக்கைகளுக்கும் தற்கால அறிவியல் ஊகங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் கற்பனைத்திறன் மனித அறிவு வளர்ச்சியில் எவ்வளவு இன்றியமையாதது என்பது அஸிமோவைப் படிக்கும்போது நமக்குப் புரிபடுகிறது.

எளிமையும் சுவாரசியமும் அளவும் இந்தச் சிறு நூல்களின் பலம். எனினும் பல பிரச்சினைகள் இந்த நூல்களின் தரத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. மூல மொழிக் கட்டுரைகளில் இடம்பெற்ற கலைச்சொற்களை முதலில் வரிசைப்படுத்தி, அவற்றுக்கு இன்று தமிழில் வழங்கப்படும் எளிதான கலைச்சொற்களைக் கண்டறிந்திருக்க வேண்டும். அனைத்துச் சிறுநூல்களிலும் ஒரே விதத்தில் அந்தக் கலைச்சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை.

அண்டம், காலக்ஸி, பிரபஞ்சம் என்ற சொற்களெல்லாம் ஒன்றுக்கொன்று பின்னிக்கொள்கின்றன. ‘பிக் பேங்’ (Big Bang) என்பதற்கு ‘பெருவெடிப்பு’ என்ற சொல் தமிழில் வந்து, நிலைபெற்றுப் பல காலமாக ஆகிவிட்டது. ஆனால், இங்கே ‘பெருமோதல்’ என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிரபஞ்சம் மோதலில் உருவாகவில்லை, வெடிப்பில்தான் உருவானது. ஹீமோகுரோம் (hemochrome) என்பதற்கு மொழிபெயர்ப்பாளர் தரும் சொல் நம்மை அதிரவைக்கிறது: ‘நிறக்கிருமி’. (ரத்த நிறமி என்ற சொல்தான் சரி). முதல் வரியில் ‘மூலக்கூறு’ என்றும் அடுத்த வரியில் ‘மாலிக்யூல்’ என்றும் வருகிறது.

கூடவே, தெளிவற்ற தமிழ் நடை, இலக்கணக் குழப்பங்கள் ஆங்காங்கே தலைகாட்டுகின்றன. சில உதாரணங்கள்: ‘எனினும் சில பதிப்பகங்கள் அவரின் இறப்புக்குப் பின் கிடைக்கப்பட்டன’, ‘இந்த விகிதத்தில் இரத்தத்தை உபயோகப்படுத்தப்பட்டுப் பின் உருவாக்கப்படுவது கடினம்.’

முதன்முறையாக ஐசக் அஸிமோவின் எழுத்துக்களை இவ்வளவு பெரிய அளவில் தமிழில் கொண்டுவந்ததற்கு நாம் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்ளலாம். ஆனால், இவ்வளவு முக்கியமான பணிக்கு உரிய பொறுப்புணர்வு இந்தப் புத்தகங்களில் அதிகம் தென்படவில்லை என்பது வருத்தத் தக்க விஷயம்!

அறிவியல் அறிவோம்
(‘அணுவைப் பற்றி எப்படி அறிந்தாய்?’ முதல் ‘ஒளிச்சேர்க்கை’ வரை 16 சிறு புத்தகங்கள்)
ஐசக் அஸிமோவ்
(பத்துக்கும் மேற்பட்டோரின் மொழியாக்கத்தில்)
எல்லா நூல்களும் சேர்த்து விலை: ரூ. 410
வெளியீடு: யுரேகா புக்ஸ், சென்னை-14.

தொலைபேசி: 044 - 2860 1278
மின்னஞ்சல்: folk.lokesh@gmail.com



- ஆசை,
தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x