Published : 17 Apr 2016 09:28 AM
Last Updated : 17 Apr 2016 09:28 AM
அசோகமித்திரன் கதைகளில் ‘கதை’ என்று ஒன்று இல்லை. ஒரு அல்லது சில சம்பவங்கள், அவற்றின் நுட்ப விவரிப்புகள், இடையிடையில் கதை மாந்தர்களின் இயல்பான எண்ண ஓட்டங்கள், அவர்களின் ஆதங்கங்கள், விரக்தி கலந்த மெல்லிய நகைச்சுவை இவற்றை வைத்து எதுவுமே செய்யாததைப்போல ஒரு உலகையே நிர்மாணித்துக் காட்டிவிடுவார்.
சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்லும் ஒரு பள்ளிச் சிறுவன் விரிந்த வயல்வெளிகளுக்கப்பால் ஒரு ரயில் செல்வதை வேடிக்கை பார்க்கப் போய் தன்னையுமறியாது ரயிலுடன் போட்டியிடுவதுதான் கதை.
இதில் என்ன பெரிய கதை இருக்கிறது என்கிறீர்களா. கதையின் முற்பகுதியில் போகிற போக்கில் சொல்லிச் செல்லும் ஒரு தகவலை இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். மாணிக்கம் என்கிற அந்தப் பையன் தேர்வில் பெயிலாகி இருக்கிறான். ராட்சத சக்தி படைத்த ரயிலுடன் போட்டியிடும் அளவுக்கு உத்வேகமும் திறமையையும் அவனுள் இருப்பதை அவனே தற்செயலாய்க் கண்டடைகிறான். வாழ்வின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது ஒற்றை விஷயம் மட்டுமே இல்லை என்கிற ‘செய்தி’யைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறார்.
ரயிலுடன் சைக்கிள் போட்டியிடுவதை மிக விரிவாக விவரித்துக்கொண்டு போவார் அசோகமித்திரன். ஒரு கட்டத்தில் சைக்கிள் ரயிலை வென்றுவிடும். ஆனால் ரயில் வேகமெடுத்து சைக்கிளைப் பின்தங்க வைத்துவிடும். கூர்ந்து வாசித்திருந்தால், இது முன்னால் எங்கோ கோடி காட்டப்பட்டிருந்ததுபோல் இருக்கிறதே என்பது புரியும்.
“மண்ணெண்ணெய் பட்டுத் துடைக்கப்பட்ட இடங்கள் பளிச்சென்று தோற்றம் கொண்டன. ஓரிரு நிமிடங்களில் அந்த மினுமினுப்பு மங்கிப் போய் மீண்டும் பழைய நிலை திரும்பியது.”
என்பதையும் ரயிலை சைக்கிளால் வெல்ல முடியுமா என்பதில் தொடங்கும் அவனது எண்ண அலை எதிர் அலைகளை உண்டாக்குவதையும் இணைத்து,
“முடியுமோ என்னவோ? சைக்கிள் இன்னும் புதிதாக இருந்தால் முடியலாம். இன்னும் நிறைய மண்ணெண்ணெய் கொண்டு சுத்தம் செய்திருந்தால் முடியலாம்.”
இதனுடன் கோர்த்துப் படித்தால் வேறு தளத்தில் அர்த்தப்படும்.
அசோகமித்திரனின் கதைபாணி புள்ளி புள்ளியாக வைத்துக் கோலம் வரைந்துகொண்டே செல்வதுதான் அசோகமித்திரன் பாணி. சைக்கிள் துடைக்க மண்ணெண்ணெயை வீணாக்குகிறான் என்கிற அம்மாவின் விரட்டலில் தொடங்குகிற கதையில், ஏன் மண்ணெண்ணெய்க்குத் தட்டுப்பாடு என்கிற தகவல், கதையின் நடுப் பகுதியில் நாளேட்டின் போர்ச் செய்தியாக வெளியாகும். என்னாது என்னாது எனக் கேட்கும் ஒற்றை வரியில் காது கேட்காத பாட்டி இருப்பதைக் காட்டிவிடுவார். சைக்கிளைத் துடைத்தவன் கைகழுவக் கிணற்றடிக்குச் செல்வது இயல்பு. கூடவே கழுத்தில் கட்டி வந்து கஷ்டப்படும் மாடு இருக்கும் தொழுவமுள்ள வீட்டின் சித்திரம் துலக்கப்பட்டுவிடும். பக்கத்தில் தென்திசை நோக்கிக் குலை தள்ளா வாழை மரங்களின் விவரணையுடன் கூடவே தங்கை இறந்த தகவல். வீட்டின் பின்பக்கமாக வெளியில் வந்தால் அக்கிரகாரத்தின் முதல் வீட்டை நாகப்பட்டினம் சாயபு வாங்கி, அதை இப்போதைக்குக் கிடங்குபோலப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் 71-ம் வருடத்து வரலாற்றுப் பதிவு. ஒற்றை வரித் தகவலில் ஒரு கதவையே விரியத் திறந்துவிடுவது அசோகமித்திரனின் தனிப்பெரும் சாதனை.
செட்டியார் கடை சங்கக் கொடிகள் வெவ்வேறு கொடிக்கரர்கள் வாக்குவாதம் செய்கையில் செட்டியார் தம் கடையைப் பாதி மூடிவிடுவார் என்று இடையிலொரு மெல்லிய முறுவல். கடை பெஞ்சு, பேப்பர் படிப்பு, போர் செய்திகள். அதன் காரணமாய் மண்ணெண்ணெய்த் தட்டுப்பாடு.
மனிதவாழ்வின் இயக்கம்
செட்டியார் பையன் வீட்டில் மாட்டப்பட்டிருக்கும் சோவியத் காலண்டரில் இருக்கும் விரிந்த வயல்வெளிப் படமே, அவன் அடுத்து மேற்கொள்ளப் போகும் சைக்கிள் பயணத்துக்கான உந்துதல். ஆனால் அது வார்த்தைகளில் சொல்லப்படுவதே இல்லை. எண்ணங்களும் அவற்றின் தொடர்ச்சியாய் செயல்களும் துல்லியமாகாமலே ஒன்றைத் தொட்டு ஒன்றாய்க் கிளைப்பதுதானே மனித வாழ்வின் இயக்கம்.
மரத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் இருக்கும் வளையங்கள் போல தகவல்கள் விவரிப்புகள் கதை மையத்தின் விரிவுகளாய் வளையம் வளையமாய்த் தொடர்பில் இருந்துகொண்டே இருப்பதும் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பதும்தான் அவரது பாணி.
உணர்ச்சிகளை வெளிப்படையாய் நாடகீயமாய்க் காட்டாத மிதமான நடை. அதீத வார்த்தைப் பிரயோகங்கள் இல்லை என்பதால் அழகியலுக்கும் பஞ்சமில்லை. ஆங்காங்கே கவித்துவம் இயல்பாய் எட்டிப் பார்க்கும்.
“வெளிச்சம் நிறைய இருந்தும் நிழல் லேசாகத்தான் தரையில் விழுந்தது. ஆகாயத்தில் வெண்மையான மேகங்கள் சூரிய ஒளியை மிருதுவாக மாற்றியனுப்பிக் கொண்டிருந்தன.”
அசோகமித்திரன் கதைகளில் எந்த வார்த்தையும் எந்தப் பயனுமின்றி எழுதப்பட்டதன்று. நண்பனின் வீட்டில் காலண்டர் படத்தைப் பார்த்துக் கிளர்ச்சியுற்ற மனம், மிதமான வெயிலில் அடுத்த ஊர் தாண்டிய விரிந்த வயல்வெளிகளைப் பார்ப்பதற்கான நீண்ட சைக்கிள் பயணத்துக்கு உள்ளூரத் தயாராவதற்கான வெப்பமற்ற சூழல் இங்கே விதைக்கப்படுகிறது.
சைக்கிளை எடுத்துக்கொண்டு செல்கையில் ஆற்றைக் கடந்து அடுத்த பெரிய ஊரை அடைகிறான். அங்கே இருக்கிறது அவன் பள்ளி. தேர்வில் தோல்வி அடைந்ததன் மன அழுத்தம். அதை அவன் கடந்த பின்னர் வருகிறது வயல்வெளிக் காட்சி. காலண்டரில் கண்ட வயல்வெளிக் காட்சியின் நினைவு. நாளிதழில் படித்த போர் டாங்கிகள் பற்றிய எண்ண ஓட்டம். போரில் வயல்கள் நாசப்படும் கற்பனைக் காட்சி ஓட்டம். தொலைவில் ரயில் கூவல்.
இப்போது சொல்லுங்கள். மாணிக்கம் என்கிற, தேர்வில் தோல்வியுற்ற அந்தப் பள்ளிச் சிறுவன், தன் துருப்பிடித்த சைக்கிளை வைத்துக்கொண்டு, நீராவி இன்ஜினின் அதீத சக்தியில் ஓடும் ரயிலுடன் போட்டியிடுவதைப் பற்றி மட்டுமே சொல்கிற கதையா இது?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT