Published : 19 Feb 2022 12:50 PM
Last Updated : 19 Feb 2022 12:50 PM

புத்தகத் திருவிழா 2022 | வ.உ.சி. 150: மீண்டெழும் வரலாறு

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தன்னை முற்றிலும் அழித்துக்கொண்ட பேராளுமையாளர் வ.உ.சிதம்பரனார். வழக்கறிஞர், மொழிபெயர்ப்பாளர், தொழிற்சங்கவாதி, உரையாசிரியர், பதிப்பாசிரியர், பெண்ணிய முற்போக்குச் சிந்தனையாளர், சமூகச் சீர்திருத்தவாதி, கவிராயர் இப்படியாகப் பன்முகத்தன்மை வாய்ந்த ஆளுமையாளரை வெறுமனே ‘கப்பலோட்டிய தமிழர்’, ‘செக்கிழுத்த செம்மல்’ என்ற இரு அடைமொழிகளுக்குள் சுருக்கி, நீண்ட காலமாகத் தமிழகம் அவரை மறந்துவிட்டது.

தமிழகத்தில் தற்போது வ.உ.சி. 150-ம் பிறந்த ஆண்டையொட்டியே சமூக ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் வழியாகப் பரவலாகப் பேசுபொருளாக மாறியுள்ளார் வ.உ.சி. பொதுவெளியிலும் அரசு முயற்சியாலும் வ.உ.சி. 150 மீள் கொண்டாட்டத்துக்கு உள்ளானது போற்றுதலுக்குரியது. மூத்த, இளம் ஆய்வாளர்கள் பலரின் முயற்சியால் குறிப்பிடத்தக்க நூல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.

பேராசிரியர் வீ.அரசுவைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, வ.உ.சி. எழுத்துகளைத் தேடித் தொகுத்து உருவாக்கப்பட்ட ‘வ.உ.சி. பன்னூல் திரட்டு’ நூல், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலமாக வெளியாகியுள்ளது. இது வ.உ.சி. எழுதிய, பதிப்பித்த, மொழிபெயர்த்த நூல்களை உள்ளடக்கியது. தற்சரிதம், மெய்யறிவு, மெய்யறம், பாடல் திரட்டு, மணக்குடவர் உரை, சிவஞானபோத உரை, இன்னிலை, சேலம் மாநாடு, எனது பெருஞ்சொல், ஜேம்ஸ் ஆலன் நூல்கள், சில கட்டுரைகளை உள்ளடக்கியது. வ.உ.சி.யின் முழுப் பரிமாணத்தையும் புரிந்துகொள்ள வழிகாட்டும் நூலாக இது வந்துள்ளது.

மறைந்த பேரா.இரா.குமரவேலன் பதிப்பித்த ‘வ.உ.சி.யின் திருக்குறள் உரை’யில், 11-ம் நூற்றாண்டில் எழுந்த அவைதிக உரையான மணக்குடவர் உரையிலிருந்தும் 13-ம் நூற்றாண்டில் எழுந்த வைதிக பரிமேலழகர் உரையிலிருந்தும் மாறுபட்ட இடங்களையும், முன் ஆசிரியர்களின் உரையிலிருந்தும் வேறுபட்ட இடங்களைப் பொருத்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

காலச்சுவடு பதிப்பகம் வழியாகப் பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதியின் உழைப்பில் வ.உ.சி. தொடர்பாக மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன. ‘வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா’ நூல் வ.உ.சி.க்கும் காந்திக்குமான கடிதத் தொடர்பு, தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் பின்புலம், வ.உ.சி.யின் மனைவி மீனாட்சி அம்மாளின் தனித்தன்மையான ஆளுமை ஆகியவற்றை விவரிக்கிறது. ‘வ.உ.சி.யின் சிவஞான போத உரை’ நூலில் வ.உ.சி.க்கும் சைவ இயக்கத்திற்கும் நிலவிய தொடர்பு, சைவ சித்தாந்த மரபில் வ.உ.சி.யின் உரை பெறும் இடத்தை விளக்கியுள்ள சி.சு.மணியின் ஆய்வுரை போன்றவை இடம்பெற்றுள்ளன. வ.உ.சி., தமது அரசியல் குருவான திலகரைப் பற்றி இலங்கை ‘வீரகேசரி’ இதழில் 1933-34-ல் தொடராக எழுதியதைத் தொகுத்து, ஆ.இரா.வேங்கடாசலபதி, ‘திலக மகரிஷி’ எனும் நூலாக வெளியிட்டுள்ளார். இதில் வ.உ.சி.க்கும் திலகருக்குமான உறவை இந்திய விடுதலைப் போரின் பின்னணியில் பல தரவுகளுடன் விரிவானதொரு முன்னுரையை எழுதியுள்ளார். குருசாமி மயில்வாகனன் எழுதி, நீந்தும் மீன்கள் வெளியீட்டகம் வெளியிட்டுள்ள ‘கப்பலோட்டிய கதை’ நூலில் வ.உ.சி. தொடங்கிய சுதேசி நாவாய் சங்க உருவாக்கம், சங்கத்தின் வளர்ச்சி, பங்காளிகள் செய்த துரோகம், வ.உ.சி. சிறை செல்லுதல், நாவாய் சங்கத்தை முடக்குதல், நாவாய் சங்கத்தைக் காப்பாற்ற பாரதியார் பட்ட பாடு போன்ற செய்திகள் கதைபோலவும், கூடுதலாக அதற்கான ஆவணங்களோடும் வந்துள்ளது.

ஆ.அறிவழகன் தொகுத்து, தமிழ்நாடு வ.உ.சி. ஆய்வு வட்டம் சார்பாக வெளிவந்துள்ள ‘ஆராலும் என்னை அமட்ட ஒண்ணாது’ நூலில், வ.உ.சி.யின் சுதந்திரப் போராட்ட வீரம், சுதேசியக் கொள்கை, தொழிலாளர் பேராட்டம், சமூக-பெண்ணிய முற்போக்குச் சிந்தனைகள் குறித்த 12 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

பரிசல் வெளியீடாக வந்துள்ள, ஆ.அறிவழகனின் ‘தமிழ்ப் பெரியார் வ.உ.சி.’ நூலில் நாவலர் சோமசுந்தர பாரதியார் முதல் வ.உ.சி. சுப்பிரமணியன் ஈறாக 26 ஆளுமைகள் 26 கோணங்களில் வ.உ.சி. குறித்துப் பன்முகப் பார்வையாக எழுதியுள்ளவை தொகுக்கப்பட்டுள்ளன.

1927-ல் சேலம் மாநாட்டில் வ.உ.சி. பேசிய உரையின் முழுத் தொகுப்பை ‘அரசியல் பெருஞ்சொல்’ எனும் தலைப்பில் ‘யாப்பு வெளியீடு’ நூலாகக் கொணர்ந்துள்ளது. இதில் சுய அரசாட்சி, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், பிராமணர்-பிராமணரல்லாதார், சித்த மருத்துவத்தின் அவசியம் குறித்து வ.உ.சி. பேசியுள்ளவை முழுமையாக உள்ளன. கதிர்நம்பியின் ‘சிதம்பர வேங்கை’ என்ற நூலில் தமிழ்த் தேசியச் சிந்தனை ஊடாக இந்திய தேசியத்தைக் கட்டமைக்கும் வ.உ.சி.யின் அரசியல் செயல்பாடுகளை ஆசிரியர் விரித்துரைக்கிறார். இதுவும் ‘யாப்பு வெளியீடு’.

1908-ல் தமிழ்-ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எம்.கிருஷ்ணசாமி வெளியிட்ட ‘வி.ஓ.சிதம்பரம்பிள்ளை ஜீவிய சரித சுருக்கம்’ 113 ஆண்டுகளுக்குப் பிறகு ரெங்கையா முருகன், சக்ரா ராஜசேகர் ஆகியோரால் மீள்பதிப்பாக ‘வ.உ.சி. வரலாற்றுச் சுருக்கம்’ எனும் நூலாகக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. சக்ரா அறக்கட்டளை-விதை வெளியீடாக வந்துள்ள இந்நூல், சுதேச முயற்சிக்காக தன்னையே களப்பலி ஆக்கிக்கொண்ட வ.உ.சி.யின் வாழ்க்கையையும், கப்பல் வாங்கும் பகீரத முயற்சிகள், கோரல் மில் வேலை நிறுத்தம், பின்ஹே தீர்ப்பு, இராஜ நிந்தனை வழக்கு விவரங்கள் போன்ற பல செய்திகளையும் உள்ளடக்கியிருக்கிறது.

வ.உ.சி. அகவற்பாவால் சிறையில் இருந்தபோது எழுதிய சுயசரிதையை ‘வ.உ.சி.யின் சுயசரிதை’ எனும் நூலாக முல்லைப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அனிதா கிருஷ்ணமூர்த்தி சூரியன் பதிப்பகம் மூலமாக அண்மையில் வெளியிட்டுள்ள, ‘வ.உ.சிதம்பரனாரும் பாரதியாரும்’, ‘திருவள்ளுவர் வழியில் வ.உ.சிதம்பரனார்’, ‘வ.உ.சி. அரசியல் சிந்தனைகள்’ போன்ற நூல்களும் வ.உ.சி. 150-ல் குறிப்பிடத்தக்க வரவுகளாகும்.

வ.உ.சி. 150-ஐ ஒட்டி மூத்த வ.உ.சி. ஆய்வாளர்கள், புது ஆய்வாளர்கள் பலரின் நூல்கள் இன்னும் வரக் காத்திருக்கின்றன.

- ரெங்கையா முருகன், வ.உ.சி. ஆய்வாளர், தொடர்புக்கு: murugan72kani@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x