Published : 19 Feb 2022 12:09 PM
Last Updated : 19 Feb 2022 12:09 PM
பழந்தமிழ் இலக்கியங்கள் சிலவற்றுள் அறிவியலும் தொழில்நுட்பமும் ஒன்றிணைத்து எழுதப்பட்டிருக்கிறது. காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் வந்து நிற்கும் கப்பல்களின் தொழில்நுட்பம் பற்றி, பட்டினப்பாலையில் அறிவியல்ரீதியாக விரிவாக விளக்கப்பட்டுள்ளதாக அறிவியல் எழுத்தாளர் ஆயிஷா நடராசன் குறிப்பிடுகிறார். நவீன காலத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அறிவியல் பலகை போன்ற அமைப்புகள் அறிவியலை மக்களிடம் கொண்டுசேர்ப்பது மகிழ்ச்சி தரக்கூடியது. இருப்பினும் காலத்துக்கேற்ப அறிவியல் எழுத்துகள் தமிழில் சென்றடைய வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.
நவீன அறிவியல் எழுத்து
அறிவியல் எழுத்து என்பது சிறார்களுக்காக, பெரியவர்களுக்காக என்று இரண்டாகப் பார்க்கப்படுகிறது. தமிழில் சிறார்களுக்கு எழுதப்படுபவை பெரும்பாலும் பாடப்புத்தகத்தில் வரும் ஒரு விஷயத்தை எளிமையாகச் சொல்லுவதாகவே இருக்கின்றன. யூடியூப் காணொளிகள் வாயிலாக ஒவ்வொரு கருப்பொருளையும் படங்களுடனும், அசைபடங்களுடனும் (animation) விளக்கும் காலத்தில், ‘அது எப்டின்னா...’ என்னும் பாணியிலேயே எழுதிக்கொண்டிருப்பது அவசியமற்றதாகிப்போகிறது.
சிறார் அறிவியல் கதைகளிலும்கூட, ஒருவர் கேள்வி கேட்க மற்றொருவர் பதில் சொல்லும் கதைகளையே அதிகம் காண முடிகிறது. தற்போதைய சூழலில் இணையத்தில் தகவல்கள் கொட்டிக்கிடக்கும்போது, விளக்கம் தரும் எழுத்துகளின் அவசியம் குறைந்துவிட்டது. முன்பு சிறார்களுக்காக எழுதப்படும் கதைகளின் முடிவில், ‘இந்தக் கதை சொல்லும் நீதி என்னவென்றால்...’ என்றே முடியும்.
அப்படி நீதிக்கதைகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை, குழந்தைகளை வேறொரு உலகத்துக்குக் இட்டுச்சென்று சிந்திக்க, மகிழ்ந்திருக்க வைத்தாலே போதும் என்னும் கருத்து கவனம் பெற்றுவருகிறது. அதேபோல, அறிவியல் கதைகளிலும் ஒரு விஷயத்தை விளக்கியே தீருவேன் என்னும் பிடிவாதத்தை எழுத்தாளர்கள் கைவிட வேண்டியுள்ளது. உதாரணமாக, சைக்கிள் ஓட்டுவது எல்லாக் குழந்தைகளுக்கும் பிடிக்கும். சைக்கிள் எப்படிச் செயல்படுகிறது என்றால் என்று தொடங்குவதற்குப் பதிலாக, சைக்கிள் கண்டுபிடிக்கப்படாத உலகத்தைப் படைத்து, அதில் உருண்டு செல்லும் சக்கரங்களைக் கண்டுபிடிப்பதற்கு மக்கள் யோசித்ததைச் சொல்லலாம்.
இங்கே முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது, தகவல்களைத் திரட்டிக் கொடுக்கும் களஞ்சியங்களாக அறிவியல் தளங்கள் இருக்கின்றன. தகவல்கள் மட்டுமே அறிவியல் ஆகிவிடாது. சிந்திக்க வைப்பதற்காகவும் வாழ்க்கையில் அறிவியல் முறைகளை வாசகர்கள் பின்பற்றுவதற்குத் தூண்டுவதாகவும் எழுத்து இருக்க வேண்டும்.
பெரியவர்களுக்கான அறிவியல் எழுத்து என்பது கதைகள், கட்டுரைகள், துணுக்குகள் என்ற அளவிலேயே கையாளப்படுகிறது. அவர்களிடம் அறிவியல் எழுத்தைக் கொண்டுசேர்ப்பதன் மூலம் மனித வளத்தையும், பொருளாதாரத்தையும் மீட்டெடுக்கும் வழிமுறைகளுக்கு வித்திடலாம். அறிவியல் எழுத்து என்பது அன்றாடம் நடக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளை, அறிவியல் தொடர்பான அரசியல் நடவடிக்கைகளை மக்களுக்கு எடுத்துச்செல்லத் தேவைப்படுகிறது.
உதாரணமாக, விண்வெளி சார்ந்த ஆய்வுகள் மக்களிடம் கவனம் பெறுகின்றன. கரோனா பெருந்தொற்றுக் காரணமாக நுண்ணுயிர் சார்ந்த ஆய்வுகள் எவ்வளவு முக்கியம் என்று மக்களுக்குப் புரிந்திருக்கிறது. இப்படிப் பல துறைகளில் சிறந்த கண்டுபிடிப்புகள், அவற்றைத் தொடர்ந்த அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இவற்றை மக்களிடம் கொண்டுசெல்லும்போது, விழிப்புணர்வுடன் இவை நின்றுவிடுவதில்லை.
விண்வெளித் துறையில் மட்டுமே ஆய்வுகள் நிகழ்வதில்லை; நோபல் பரிசு பெறும் தகுதியுடைய ஆய்வுகள் மட்டுமே முக்கியமானவையில்லை என்பதை உணர வைக்க வேண்டும். கடல் சார்ந்து, பூச்சிகள், மலைகள், வேதிவினைகள், வாகனங்கள் என்று நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் ஆய்வுகள் நடைபெறுகின்றன. இதைக் கவனப்படுத்தும்போது எந்தத் துறை பிடித்திருந்தாலும் தன்னாலும் ஓர் ஆய்வாளர் ஆக முடியும் என்று வளரிளம் பருவத்துக் குழந்தைகள் நினைப்பார்கள். இவற்றை வாசிக்கும் பெற்றோரும் கல்வியாளர்களும் குறிப்பிட்ட துறைகளுக்கு மட்டும் முன்னுரிமை தரும் தவறை இழைக்க மாட்டார்கள்.
சிக்கல்கள்
அறிவியலை எல்லோருக்கும் கொண்டுசெல்வதில் உள்ள முக்கியமான சிக்கல், எழுதுவதற்கான தகுதிகொண்டவர்கள் கிடைக்காமல் போவது. ஆய்வாளர்கள் எழுத முன்வராததற்குக் காரணம், வெகுமக்கள் அறிவியல் எழுத்து நேர விரயம் என்று ஆய்வு நிறுவனங்கள் கருதுவதுதான். அறிவியல் ஆய்வுகளைப் பரவலாக எடுத்துச்செல்வதற்கான திட்டங்களைத் துறை சார்ந்த நிறுவனங்களிடம் ஆய்வாளர்கள் பேசிச் சரிசெய்துகொள்ள வேண்டும். இன்றைய தொழில்நுட்பத் துறை வல்லுநர்களுக்கு, தமிழ் எழுத்தின்மீது ஈடுபாடு இல்லாமல் இருப்பதும் கவலைக்குரியது.
அறிவியலை எழுதுபவர்கள் இலக்கிய வாசிப்பிலிருந்து விலகி நிற்பதைக் காண முடிகிறது. இது நல்ல புனைகதைகள் உருவாவதைத் தடுக்கிறது. தற்போது இலக்கியம் எழுதிவருபவர்கள் பலரும் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களாக இருப்பதால், அறிவியல் புனைவு சார்ந்து அவர்கள் முயன்றுபார்க்க வேண்டும். இதனால், உணர்வுபூர்வமான அறிவியல் கதைகள் கிடைக்கும். அறிவியலும் வாழ்வும் தனித்தனியல்ல என்னும் எண்ணத்தை இதுபோன்ற கதைகள் மக்களிடம் விதைக்கும்.
அறிவியல் எழுத்தின் நோக்கம்
கரோனா பேரிடர்க் காலத்தில் மக்களிடம் நிலவும் அச்சத்தை நீக்குவதற்காகவும், மதவாதம் தலைதூக்கத் தொடங்கியிருக்கும்போது ‘அறிவியல் பார்வையில் எல்லா மனிதர்களும் சமம்தான்’ என்று சொல்வதற்காகவும் அறிவியல் எழுத்து அவசியம் தேவைப்படுகிறது.
அறிவியலை சாதாரண மக்களுக்கு எடுத்துச்செல்லும் நல்ல எழுத்துகள் வாய்த்தால், பிறரின் கண்டுபிடிப்புகளுக்குக் கலைச்சொற்கள் கண்டுபிடிக்கும் சமூகமாக நாம் இல்லாமல், அறிவியல் படைப்புகளை நிகழ்த்தும் சமூகமாக நாம் மாறுவோம்!
- இ.ஹேமபிரபா, இஸ்ரேல் டெக்னியான் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர். தொடர்புக்கு: hemazephyrs@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT