Published : 12 Feb 2022 11:32 AM
Last Updated : 12 Feb 2022 11:32 AM
அறிவியல் தொழில்நுட்பத்தை மட்டுமே கொண்டு முன்னேற்றம் அடைந்துவிட்டோம் என்று தட்டையாகக் கூறாமல், வளர்ச்சித் திட்டங்களின் பின்புலமாக விளங்கிய சமூகநீதி அரசியல் குறித்தும் டில்லிபாபு விவரிக்கிறார்!
இந்தியா விடுதலை பெற்றபோது உலகில் மிக அதிகமான கால்நடைகளைக் கொண்ட நாடாக இருந்தது. எனினும், முரணாகக் கடும் பால் தட்டுப்பாடு நிலவிவந்தது. 1950-51-களில் மொத்த பால் உற்பத்தி வெறும் 170 லட்சம் டன்தான்; அதாவது, அன்றைக்கு இருந்த மக்கள்தொகையோடு ஒப்பிட்டால், தலைக்கு நாளொன்றுக்கு வெறும் 130 கிராம் பால் என்ற அளவில்தான் உற்பத்தி இருந்தது. குழந்தைகளுக்குப் பால் பவுடர் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டிய அவல நிலை இருந்தது. அன்றைக்கு இந்திய மக்கள்தொகை வெறும் 35.9 கோடி இன்று 140 கோடி. அதாவது, சுமார் மூன்றரை மடங்கு அதிகம். ஆயினும், இன்று மொத்த பால் உற்பத்தி 1980 லட்சம் டன்; தலைக்கு நாளொன்றுக்கு 427 கிராம். இந்தப் புரட்சி எப்படிச் சாத்தியம் ஆனது?
பசியால் பதறிய திருஞானசம்பந்தருக்கு பார்வதி வந்து பால் கொடுத்ததுபோல ஊட்டச்சத்தின்றி வாடிய இந்தியக் குழந்தைகளுக்குப் பாலும் பால் பவுடரும் அளித்து ஊட்டச்சத்து நிலைமையை மேம்படுத்தியது இந்திய அறிவியலர்களின் தொழில்நுட்ப ஆய்வு உதவிதான் என ‘பொறியியல் புரட்சி’ என்ற தனது நூலில் அறிவியலர் டில்லிபாபு சுட்டிக்காட்டுகிறார். அழுத பிள்ளைக்குப் பால் இல்லை என்ற உற்பத்தி நிலை மாறி, இன்று உலகில் அதிக அளவில் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது. வெண்மைப் புரட்சி எப்படி இந்தியாவின் உணவு ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதிசெய்துள்ளது என்று இந்த நூல் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
விடுதலை பெற்று 75 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கிறோம். இன்னமும் வறுமை, வேலையின்மை, உற்பத்திப் பெருக்கத்தில் தேக்கம், சூழலியல் நெருக்கடி எனப் பல சவால்கள் நம் முன் இருந்தாலும், விடுதலை பெறும்போது நமது நிலையோடு ஒப்பிட்டால் பெருமளவு முன்னேறியுள்ளோம். எடுத்துக்காட்டாக, 1950-ல் சராசரி ஆயுள் வெறும் 35.2 ஆண்டுகள்தான். ஆனால், 2021-ல் இது 70.1 ஆண்டுகள். அன்று இளமை மரணம் கூடுதல். விடுதலை பெற்ற சமயத்தில் பிறந்த ஆயிரம் குழந்தைகளில் 145.6 குழந்தைகள் பிறந்த ஒரு வருடத்துக்குள் மரணம் அடைந்தனர்.
அதேபோல, அன்று 1,00,000 கர்ப்பிணிப் பெண்களில் 1,000 பேர் இறப்பு என்று இருந்தது. இன்று, குழந்தைகள் இறப்பு விகிதம் 29.8 எனவும், கர்ப்பிணிகள் இறப்பு விகிதம் 99 எனவும் குறைந்துள்ளது. சமூகரீதியாக வளர்ச்சி அடைந்த மாநிலமான தமிழ்நாட்டில் குழந்தைகள் இறப்பு விகிதம் 15; கேரளத்தில் வெறும் 6. எனினும், சமூக வளர்ச்சியில் பின்தங்கிய உத்தர பிரதேசம் (50.4), பிஹார் (47), சத்தீஸ்கர் (44), மத்திய பிரதேசம் (41), குஜராத் (31.2) போன்ற மாநிலங்களில் நிலைமை மோசமாகத்தான் நீடித்துவருகிறது. சமூகநீதியோடு சமச்சீரான வளர்ச்சியை நோக்கிய நடையை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன? குறிப்பாக, பரந்துபட்ட அளவில் சமூகப் பயன் தரும் தொழில்நுட்பச் சாதனைகள் என்ன என்று இந்த நூலில் டில்லிபாபு அற்புதமாக விவரிக்கிறார். வெண்மைப் புரட்சி, பசுமைப் புரட்சி, தொலைத்தொடர்புப் புரட்சி, பொதுப் போக்குவரத்துப் புரட்சி, பாதுகாப்புத் துறைப் புரட்சி போன்ற முக்கியத் தொழில்நுட்ப புரட்சிகளின் உதவியோடுதான் எல்லா அவலங்களையும் ஓரளவேனும் ஒழிக்க முடிந்துள்ளது என இந்த நூலில் விவரிக்கிறார். வெறும் அறிவியல் தொழில்நுட்பத்தை மட்டுமே கொண்டு முன்னேற்றம் அடைந்துவிட்டோம் என்று தட்டையாகக் கூறாமல் வளர்ச்சித் திட்டங்களின் பின்புலமாக விளங்கிய சமூகநீதி சார்ந்த அரசியல் உறுதி குறித்தும் ‘அரசியல்-அறிவியல் புரட்சிகள்’ எனும் முதல் இயலில் விவரிக்கிறார். இந்தப் புரட்சிகளில் இந்திய அறிவியலர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரின் பங்களிப்பு குறித்தும் விவரித்துத் தற்சார்புக் கொள்கை எப்படி நம்மை இதுவரை வழிநடத்தியது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.
வாசிக்கத் தூண்டும் நடை இந்த நூலின் தனிச்சிறப்பு. பொதுவாக, அறிவியல் நூல்கள் என்றாலே பாடப் புத்தகம்போல இருக்கும் என்ற கருத்தை உடைத்து, சிறுகதைகளைப் படிப்பதுபோன்ற உணர்வை இந்த நூல் தருகிறது. ‘வந்தேண்டா பால்காரன்...’, ‘உணவதிகாரம்' போன்ற தலைப்புகள் ஈர்க்கின்றன.
‘பிறந்து வளரும்போது திறந்தவெளிக் கழிப்பிடங்களைப் பயன்படுத்திய நான்… இரண்டு அரசுப் பள்ளிகளில் உயிரிக் கழிப்பறைகளை அமைத்திருக்கிறேன் என்பதில் மனநிறைவடைகிறேன்’ என்று கூறும் அறிவியலர் டில்லிபாபுவின் சமூகப் பார்வைதான் இந்த நூலின் அடிநாதம். நாம் கடந்து வந்த பாதையைக் காட்டுவதோடு, நமது எதிர்காலக் கவனம் சமூகப் பயன் நோக்கி இருக்க வேண்டும் என்பதையும் இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது.
சுதந்திர இந்தியாவின்
பொறியியல் புரட்சிகள்
வி.டில்லிபாபு
திசையெட்டு, சென்னை-39. விலை: ரூ.120
தொடர்புக்கு: 8015637894
- த.வி.வெங்கடேஸ்வரன், முதுநிலை விஞ்ஞானி விக்யான் பிரச்சார், புதுடெல்லி. தொடர்புக்கு: tvv123@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT