Published : 05 Feb 2022 07:13 AM
Last Updated : 05 Feb 2022 07:13 AM

நூல் வெளி: கார்த்திக் பாலசுப்ரமணியன் - தொழில்நுட்ப உதிரிகளின் கதைசொல்லி

தமிழகத்தில் பொருளியல் அடுக்குகளில் பெரும் மாற்றங்களை நிகழ்த்திய துறைகளில் ஒன்றென தகவல் தொழில்நுட்பத் துறையைக் குறிப்பிடலாம். இளைஞர்களைப் பெருமளவு ஈர்த்த துறை அது. அத்துறையின் உள்ளிருந்து ஒலிக்கும் குரல்களை அண்மைக் காலமாகத்தான் நம்மால் கேட்க முடிகிறது. அவ்வகையில் கார்த்திக் பாலசுப்ரமணியனின் படைப்புலகம் முக்கியத்துவம் வாய்ந்தது.

ராஜபாளையத்தைப் பூர்விகமாகக் கொண்ட மென்பொருள் பொறியாளர் கார்த்திக் பாலசுப்ரமணியன் தனது சிறுகதைகளிலும் நாவலிலும் அவர் பணிபுரியும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்து பொதுவாக நமக்கிருக்கும் கற்பிதங்களை விசாரணைக்கு உட்படுத்துகிறார். இந்த ஆண்டுக்கான சாகித்திய அகாதமி ‘யுவபுரஸ்கார் விருது’ அவரது ‘நட்சத்திரவாசிகள்’ எனும் நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘லட்சம் பேருக்கும் மேல் வேலை பார்த்தாலும் இங்கு எல்லோரும் தனியானவர்கள். உதிரிகள். எதிர்த்துப் பேசவோ ஏனென்று கேட்கவோ திராணியற்ற உதிரிகள்’ என நாவலில் எழுதுகிறார். ஒருவகையில் ‘நட்சத்திரவாசிகள்’ இத்தகைய உதிரிகளின் கதைதான். பொதுச் சமூகத்தின் பார்வையில் மினுங்கும் ‘நட்சத்திரவாசிகளாக’ தென்படுபவர்கள் உணரும் வெம்மையையும் புழுக்கத்தையும் தனிமையையும் நாவல் பேசுகிறது.

ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்குள் என்னென்ன சிக்கல்கள் இருக்க முடியும்? அதிகாரப் போட்டி, சார்பு, வாடிக்கையாளருடனான சிக்கல், அடையாளமிழப்பு சார்ந்த கவலைகள்/ கேள்விகள், மனஅழுத்தம், வாழ்க்கைமுறைச் சிக்கல்கள், உறவுப் பிணக்குகள் என ஒரு பட்டியலிடலாம். இவை அனைத்தும் இந்நாவலில் விவாதிக்கப்படுகின்றன. பொதுவாக, மனஅழுத்தம் அதிகம் எனச் சொன்னால் ‘ஆம்! அழுத்தம் அதிகம்’ எனும் குரலை பார்க்கவியின் பாத்திரம் வழியாக உணர்கிறோம் எனில், அது தனிப்பட்ட ஆளுமையின் சிக்கலே அன்றி துறையின் சிக்கல் அல்ல எனும் குரலையும் நாவலின் வேறொரு பாத்திரம் வெளிப்படுத்துகிறது.

பாதுகாப்பின்மையும் நிச்சயமற்றதன்மையும் கொண்ட அதே சூழல் ஸ்டீபனுக்கு ஆக்கபூர்வ சவாலாகவும் சாஜு வேணு போன்றோருக்கு இக்கட்டாகவும் தென்படுகிறது. நாவலைத் தொழில்நுட்பப் பொறியாளர்களிடமிருந்து தொடங்காமல் அவ்வலுவலகத்தின் கடைநிலையில் உள்ள பாதுகாவலர், கேப் ஓட்டுநர், தூய்மைப் பணியாளர் என்று தகவல் தொழில்நுட்பத் துறையின் வெளிவட்டத்தினரிலிருந்தே தொடங்குகிறார் கார்த்திக். சிறிய கிராமத்திலிருந்து அமெரிக்கா சென்று வந்த விவேக் அவ்வூருக்கே அடையாளமாக ஆகிறான்.

‘இது நம்ம காலம்டா’ என விவேக்கின் தாயார் பெருமிதம் பொங்கும் விதத்தில் சொல்கிறார். குடும்பம் தலைநிமிர்கிறது. இது ஒரு சித்திரம் என்றால், தேநீர்க் கடைப் பையனிடம் கடன்வாங்கிக் காப்பீட்டுத் தொகையைச் செலுத்துகிறார் சாஜு. இரண்டுமே இரண்டு விதமான யதார்த்தங்கள். இவ்வகையிலான யதார்த்தங்களுக்கு இடையேயான உரையாடல் வெளியாகவே நாவல் உருக்கொள்கிறது.

‘நட்சத்திரவாசிகள்’ உட்பட அவரது பெரும்பாலான கதைகளில் கதையின் மையப் பாத்திரம் சிறு நகரத்திலிருந்து பணிக்காக நகரத்துக்கும் வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்த புத்தாயிரத் தலைமுறை இளைஞர். கிட்டத்தட்ட நிலப்பிரபுத்துவ விழுமியங்களால் கட்டப்பட்ட இளமைக் காலத்தை உடையவர். அத்தகையவர் பெருநகரத்து, உயர் மத்தியவர்க்கத்து, முதலாளித்துவ, நவீன நாகரிகத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுப்பதில் உள்ள சவால்களும் தயக்கங்களும், அவருக்குள் எழும் விழுமிய மோதல்களும்தான் கார்த்திக்கின் கதைகளில் நாம் காணும் முக்கியமான மையச் சரடு.

அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘டொரினா’வின் கதைகள் கடந்துபோன வாழ்க்கையையும், இழந்த விழுமியங்களின் மீது நின்று நவீன வாழ்க்கையை விசாரிக்கும், விமர்சிக்கும் குரலையும் கொண்டிருந்தன. அதற்குப் பிந்தைய சிறுகதைகளிலும் ‘நட்சத்திரவாசிகள்’ நாவலிலும் இப்பார்வை நகர்ந்து, வலுவான இரண்டு தரப்புகளுக்கு இடையேயான உரையாடலாக உருமாறியுள்ளது. ‘நட்சத்திரவாசிக’ளின் நித்திலனும் விவேக்கும் ஒருவகையிலான வார்ப்புகள் என்றால், மீராவும் அர்ச்சனாவும் இதன் மறுதரப்பு.

நாவலில், மீராவுக்கும் நித்திலனுக்கும் இடையேயான உறவைத் தனிப்பட்ட இரு தனிமனிதர்களுக்கு இடையேயான உறவுச் சிக்கலாகச் சுருக்காமல் இரண்டு காலகட்டத்து விழுமியங்களின் மோதல்களாகக் கட்டமைத்தது, இந்நாவலின் வலுவான பகுதிகளில் ஒன்று. மனைவிக்காகக் கடையில் சென்று நாப்கின் வாங்குவதற்குச் சங்கடப்பட்டுக்கொண்டு மறுப்பவன் நித்திலன். நண்பனாக இருந்து காதலைச் சொன்னவனின் நட்பு உடைந்துவிடக் கூடாது என்று அவன் அளிக்கும் இரவு உணவு விருந்துக்குக் கணவனுடன் செல்லும் மீரா அவனுக்கு மறு எல்லை.

ஆண் - பெண் உறவுச் சிக்கலை நவீன காலகட்டத்தின் புற மாற்றத்தின் பகுதியாகக் காணும் பார்வை சிறப்பாக வெளிப்பட்ட கதை என அவரது ‘சாத்தானின் ஒளிரும் பச்சைக் கண்கள்’ கதையைச் சொல்லலாம். இல்லங்களில் பணியாற்றும் சூழலை கரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குடும்பங்களில் ஏற்படுத்தும் அழுத்தத்தையும், குடும்ப அமைப்புக்குள் நவீனத் தொழில்நுட்பமும் வாழ்க்கைமுறையும் செலுத்தும் ஊடுருவல்களை நுணுக்கமாக விவாதிக்கிறது.

‘நட்சத்திரவாசிகள்’ நாவலுக்கு முன்னோடியாக உள்ள சில கதைகளை அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘டொரினாவில்’ கண்டுகொள்ள முடியும். அந்தத் தொகுப்பில் வரும் லிண்டா தாமஸ் இந்த நாவலில் வரும் டெய்சியை நினைவுபடுத்துவார். அத்தொகுப்பில் இடம்பெற்ற ‘ஐபோன் எக்ஸ்’ எனும் கதை இதே வகையான விழுமிய முரண்களைச் சித்தரித்த முக்கியமான கதை. இரு முனைகளிலிருந்து கதை சொல்லப்படுகிறது. ப்ரவீன், தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியன். அவன் மனைவியும் அதே துறைதான்.

திருமண நாளுக்கு அவள் அளித்த விலை உயர்ந்த பரிசுதான் ஐபோன் எக்ஸ். மறுமுனையில் ஜார்க்கண்டில் பழங்குடிச் சமூக வட்டத்தில், ஆங்கிலத்தில் தன் பெயரை எழுதத் தெரிந்த ஒரே ஆளான ராஜீவ் காரியா, சென்னைக்குப் பிழைக்க வருபவன். பாதுகாவலனாக ஒவ்வொரு நிலையாக முன்னேறி, இறுதியில் செல்போன்களுக்கு டோக்கன் போடுபவனாக ஆகிறான். இரு வாழ்க்கையும் இணையாகச் சொல்லப்படுகின்றன. ப்ரவீன் தனது ஐபோனைத் தன்னிடம் இருக்கும் காரின் பெறுமதி, வீட்டுக் கடனின் இ.எம்.ஐ., மனைவியின் சம்பளம் என இவற்றைக் கொண்டு வகுத்துக்கொள்கிறான். ராஜீவ் லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐபோன் உட்பட எல்லாவற்றையும் ஐந்து ரூபாய் ரொட்டியைக் கொண்டே மதிப்பிடுபவன். இவ்விரு மனிதர்களும் சங்கமிக்கும் புள்ளியில் கதை நிகழ்கிறது.

அகத்துக்கும் புறத்துக்குமான உறவென்பது, தமிழ் இலக்கியத்தில் தொன்றுதொட்டு வரும் பேசுபொருள். திணைகளாக இல்லையென்றாலும்கூட அகம், புறத்தைப் பாதிப்பதும் புறம், அகத்தின்மீது ஆளுகை செலுத்துவதும் தொடர்ந்து நவீன இலக்கியத்தில் பேசுபொருளாக உள்ளது. நாவலில் மீரா- நித்திலனுக்கும் இடையேயான உறவுச் சிக்கலின் காரணத்தைச் சுட்டிக்காட்டி மீரா எழுதும் கடிதத்தில் “அலுவலகத்தில் வைக்கப்படும் அடிநெருப்புக்கு விசிலாக எம்பிக் குதிப்பதற்கு வீடொன்று தேவைப்படுகிறது. அலுவலக எலிகளெல்லாம் வீட்டில் புலிகளாவது அப்படித்தானே’’ என எழுதுகிறாள். கார்த்திக் பாலசுப்ரமணியனின் ‘நட்சத்திரவாசிகள்’ தகவல் தொழில்நுட்பம் எனும் புறம் சமகால மானுட அகத்தின் மீது செலுத்தியிருக்கும் தாக்கத்தை ஆராய்கிறது. கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு வாழ்த்துகள்.

- சுனில் கிருஷ்ணன், ‘அம்புப் படுக்கை’ சிறுகதைத் தொகுப்புக்காக 2018-ல் ‘யுவபுரஸ்கார்’ விருது பெற்றவர். தொடர்புக்கு: drsuneelkrishnan@gmail.com

நட்சத்திரவாசிகள்

கார்த்திக் பாலசுப்ரமணியன்

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்,

நாகர்கோவில்- 629 001

விலை: ரூ.290, தொடர்புக்கு: 96779 16696

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x