Published : 29 Jan 2022 06:31 AM
Last Updated : 29 Jan 2022 06:31 AM
புறவயமாகத் தமிழ்ப் பண்பாட்டைப் பேசும் வரலாற்று நூல்கள் தமிழில் அதிகளவில் எழுதப்பட்டுள்ளன. அகவயமாகத் தமிழரின் தொல் பண்பாட்டை ஆராயும் நூல்கள் மிக மிகக் குறைவாகவே எழுதப்படுகின்றன. அதில் ஒன்றுதான் தொ.பரமசிவனின் ‘நீராட்டும் ஆறாட்டும்.’ தமிழரின் புழங்குபொருள் சார்ந்தும் சடங்குகள் சார்ந்தும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல்.
தொல் தமிழரின் பண்பாட்டு எச்சங்கள் இன்றும் நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றப்படுகின்றன. சில சிதைந்தும் மருவியும் தொடர்கின்றன. நாம் செய்யும் ஒவ்வொரு சடங்குக்குப் பின்னாலும் ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கிறது. அச்சடங்குகளின் மீது நூற்றாண்டுகளின் விழுமியம் படிந்திருக்கிறது. பல சடங்குகளின் தோற்றப் பின்புலம் தெரியாமலேயே அவற்றைத் தொடர்ந்துகொண்டிருக்கிறோம். தமிழர் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்துள்ள இனக் குழுப் பண்பாட்டின் இத்தகைய தொடர்ச்சியைத் தகுந்த சான்றுகளுடன் தொ.ப. இக்கட்டுரைகளின் மூலம் நிறுவ முயன்றிருக்கிறார்.
தொ.ப. இந்நூலில் நிறைய சொல்லாராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளார். விறலி மஞ்சளின் தோற்றப் பின்புலம் குறித்து ‘மஞ்சள் மகிமை’ என்றொரு மிகச் சிறிய கட்டுரை எழுதியுள்ளார். ‘விறல் என்றால் முகம்; விறலி என்றால் முகபாவங்கள் காட்டி நடிக்கின்ற நடனமாடுகின்ற பெண்ணைக் குறிக்கும்’ என எழுதியிருக்கிறார்.
முகபாவங்கள் விளக்கொளியில் தெளிவாகத் தெரிவதற்காக அவர்கள் பூசிய மஞ்சளே இன்று பெண்கள் பூசும் விறலி மஞ்சள் என்கிறார். சங்க இலக்கியத்தில் ‘விறல்’ என்ற சொல்லுக்கு இந்தப் பொருள் இல்லை. தொல்காப்பியமும் ‘விறல்’ என்பதற்கு ‘முகம்’ என்று பொருளுரைக்கவில்லை. ஆனால், தொ.ப.வின் விளக்கமும் புறந்தள்ள முடியாதது; சுவாரசியமானது.
‘தாலியின் சரித்திரம்’ என்றொரு கட்டுரையும் குறிப்பிடத்தக்கது. தமிழரின் திருமணச் சடங்கில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பது தாலி. கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் தாலி கட்டும் வழக்கம் இல்லை; ஆனால், ‘தாலி’ என்கிற சொல் ‘தால்’ (தொங்கவிடப்படும் அணி) சொல்லிலிருந்து உருவானதாக தொ.ப. குறிப்பிடுகிறார். ‘தாலி’ என்கிற சொல் சங்க இலக்கியத்தில் ஐந்து இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஐந்து பொருட்களைப் பிள்ளைகளின் அரைஞாண் கயிற்றில் கட்டுவதை ‘ஐம்படைத் தாலி’ என்றும் புலியின் பல்லை வீரத்தின் சின்னமாக ஆண்கள் கழுத்தில் அணிந்திருந்ததைப் ‘புலிப்பல் தாலி’ என்றும் அழைத்தனர். ‘புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி’ என்று அகநானூறு (7, 18) குறிப்பிடுகிறது. தொல் பண்பாட்டில் தாலி கட்டும் சடங்கு இல்லை; இடைக்காலத்தில் நுழைந்தது. எப்போது திருமணச் சடங்குகளில் தாலி ஊடுருவியது என்பதற்கு வலுவான சான்றுகளைத் திரட்ட முடியவில்லை. ஆனால், இனக் குழுப் பண்பாட்டில் தாலி கட்டும் சடங்கு இல்லை என்பதை ஆய்வாளர்கள் பலரும் உறுதிசெய்துள்ளனர். பெண்களுக்குரிய மங்கலப் பொருட்களான மஞ்சளும் குங்குமமும்கூட தமிழ்ப் பண்பாட்டில் இடையில் சேர்ந்துகொண்டவை என்கிறார் தொ.ப.
கோலம், மாலை, நீராட்டு, உணவுப் பொருட்கள், திருவிழாக்கள் போன்ற அனைத்துக்குப் பின்னும் ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சி இருக்கிறது. இறைவனை நிலைநிறுத்த இடப்பட்ட கோலம், இன்று அழகுக்கான ஒன்றாக மாறிப்போனது. கோலம் பெண்களுடன் தொடர்புடையதாக இருப்பதற்கும் தொ.ப. காரணம் கூறுகிறார்.
தொ.ப. பல சொற்களுக்கு நேரடியான பொருளைக் கூறவில்லை. அவற்றின் பயன்பாட்டைப் பண்பாட்டுடன் இணைத்துப் பொருள் கூறுகிறார். வாழ்க்கையில் நாம் செய்யும் எளிய சடங்குகள் ஒவ்வொன்றுக்குப் பின்பும் வரலாற்றுடன் தொடர்பு இருப்பதையும் சில சடங்குகள் வைதீகச் சமயங்களின் வருகையால் அவற்றின் அசல் தன்மையை இழந்திருப்பதையும் தொ.ப. குறிப்பிட்டிருக்கிறார். தொல் தமிழரின் தொடர்ச்சியாக நாம் இருப்பதை இந்நூல் தகுந்த தரவுகளுடன் நினைவூட்டுகிறது.
- சுப்பிரமணி இரமேஷ், ‘தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: ramesh5480@gmail.com
நீராட்டும் ஆறாட்டும்
தொ.பரமசிவன்
காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் - 629 001
விலை: ரூ.75
தொடர்புக்கு: 96779 16696
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT