Published : 24 Apr 2016 12:35 PM
Last Updated : 24 Apr 2016 12:35 PM
சந்தின் பக்கத்தில் ஒருவன் அம்மாளுவின் மேல் ரொம்ப நாளாக ‘கண்’ வைத்திருந்தான். இருவரும் இருளில் மறைகிறார்கள். அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்து விட்டாள். ஆம், புருஷனுக்கு பால் கஞ்சி வார்க்கத்தான். என்னவோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே இதுதான் ஐயா பொன்னகரம்’ என்னும் வரிகள், அந்தக் கதை எழுதப்பட்ட காலம் கடந்தும் ஒருவிதமான அதிர்வை உண்டாக்கவே செய்தது; செய்கிறது. ‘பொன்னகரம்’ கதை இரண்டரைப் பக்கங்களில் முடிந்துவிடுகிறது. அம்மாளுவை அவர் இரண்டாவது பக்கத்தின் இறுதியில் அறிமுகப்படுத்துகிறார். அடுத்த பத்தியில் கதை முடிந்துவிடுகிறது. கதாபாத்திரங்களுக்கிடையில் எவ்வித உரையாடலுமில்லை. பெரிய விவரணைகளும் கிடையாது. ஆனால் நான்கே வரிகளில் நெஞ்சில் தைக்கிற மாதிரி ஒரு உண்மையை உணர்த்த அவரால் இயன்றிருக்கிறது.
பொன்னகரம் மட்டுமல்ல; கவந்தனும் காமனும், இது மிஷின் யுகம், தெருவிளக்கு உள்ளிட்ட சில கதைகளை புதுமைப்பித்தன் சொற்பமான இரண்டு மூன்று பக்கங்களில் எழுதி முடித்திருக்கிறார். சில கதைகளில் பிரதானக் கதாபாத்திரத்துக்குப் பெயரில்லை. ஒன்றரைப் பக்கக் கதையான ‘இது மிஷின் யுகம்’ என்னும் கதை, சில உதிரியான உரையாடல்களுடன் நிறைவடைகிறது. அளவில் சிறியதான இந்தக் கதைகளில் புதுமைப்பித்தன் நகர வாழ்வின் இருளான பக்கங்களை மிகச் சாதுரியமாக வாசகனுக்குக் கடத்திவிடுகிறார். இது தேர்ந்த கவிஞனுக்கேயான சாதுரியம்.
பாரதி, மாதவய்யா, வேதநாயகம் பிள்ளை, வ.வே.சு. அய்யர் போன்றோரை முன்னோடிகளாகக் கொண்ட புதுமைப்பித்தன், மரபின் தாக்கம் விலகியிராத ஒரு காலகட்டத்தில் எழுதத் தொடங்கியவர். தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பில் வீட்டை விட்டு விலகிச் சென்னைக்கு வந்து எழுத்து வாழ்க்கையைத் தொடங்கிய அவர், தனது எழுத்துக்கான சூழலை அமைத்துக்கொள்ளக் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது.
குறைந்த அவகாசத்தில் எழுதிய கதைகள்
‘சிறுகதைகளின் திருமூலர்’ என்று மௌனியை வர்ணித்த பித்தன், மௌனியைப் போல் முற்றிலும் கனவுலகத்தில் சஞ்சரித்தவரில்லை. கண்முன் கண்ட நடப்புகளை அவரே கூறிக்கொள்ளும் ‘தவளைப் பாய்ச்சல்’ நடையில் கதைகளாக்கினார். அதில் கோபாவேசமும், கிண்டலும் இழையோடியிருந்தன. கதை கூறல்முறையில் அவர் ஒற்றையடிப் பாதையில் பிரயாணித்தவரல்ல. அடுத்த கதையை அவர் இன்ன வடிவத்தில் தருவாரென எவராலும் கணிக்க முடிந்ததில்லை. பத்திரிகை அலுவலகத்தில் காத்திருக்கும் பதினைந்து நிமிஷ இடைவெளியில் வெற்றிலைக் காம்பைக் கிள்ளிப் போட்டுக்கொண்டு ஒரு தரமான கதையை எழுதிவிடக் கூடிய திராணி அவருக்கிருந்தது.
1930-40களில் தேசமெங்கும் சுதந்திர வேட்கை எனும் அனல்காற்று வலுவாக வீசிக்கொண்டிருந்தது. அது இலக்கிய உலகிலும் எதிரொலித்தது. ஆயிரக்கணக்கான பக்கங்களில் லட்சியவாதமும், சாகசமும், காதலும் அட்சரங்களாக உருண்டோடிக்கொண்டிருந்தன. புதுமைப்பித்தனின் கதைகளில் இந்த அம்சம் தென்படாததை சிலர் விமர்சனமாகவே வைக்கின்றனர். கலையில் பிரசங்கம் கூடாதென்பதில் அவர் உறுதியாக இருந்ததையே இது காட்டுகிறது. அதேபோன்று காசநோயால் கடைசிவரை அவதிப்பட்ட அவர், கழிவிரக்க மிகுதியால் அப்படியான பாத்திரங்களைத் தன் கதைகளில் உருவாக்கியதே இல்லை. இதை ஜெயமோகன் ஓரிடத்தில் சுட்டிக்காட்டுகிறார்.
வடிவ சாத்தியங்களை முயற்சித்த முன்னோடி
வடிவ ரீதியாகப் பரீட்சார்த்தமான முயற்சிகளைக் கையாண்டு பார்த்த முதல் தமிழ்ச் சிறுகதைப் படைப்பாளியாகப் புதுமைப்பித்தனை விமர்சகர்கள் அடையாளப்படுத்துகின்றனர். அதில் மிகையில்லை என்றே தோன்றுகிறது. பின்நவீனத்துவமோ, பேன்டஸியோ, மேஜிகல் ரியலிஸமோ, மறுவாசிப்பு உத்திகளோ - அவை இன்னவென்று அறிந்திராத காலத்தில் புதுமைப்பித்தன் தன்னுடைய கதைகளில் அவற்றைப் பிரயோகித்துப் பார்த்திருக்கிறார். இதையே அவரில் குறையாகக் காணும் விமர்சனமும் வந்துள்ளது. ஆனால் மேற்படி உத்திகள் செல்வாக்குப் பெற்றுள்ள இக்காலகட்டத்தில், எளிய வாசகனிடத்தில் அவர் இன்னும் ஒரு பிரமிப்பை உருவாக்கிவிடுகிறார். எனினும் புதுமைப்பித்தன் கதைகளின் சிறப்பம்சம் எதுவென விவாதிக்கையில், இந்த வடிவ உத்திகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு பிரதானமாக நிற்பவை உள்ளடக்கமும் சமூக விமர்சனமும்தான்.
மனிதப் போலிகளையும், ஜாதி, மதக் கூடாரங்களையும், நிறுவனமயமாக்கலையும், நகர வாழ்வின் அவலங்களையும் அவர்போல் எள்ளிநகையாடியவர் எவருமில்லை என்பது போலவே, அவரளவு விமர்சனத்துக்குள்ளான படைப்பாளியுமில்லை. தான் அறிந்த வாழ்க்கைப் பின்னணியிலிருந்து கதைகள் எழுதியதற்காக சைவ வெள்ளாள சாதி அபிமானமுள்ளவராக விமர்சிக்கப்பட்டார். அவருடைய சுயசாதி விமர்சனத்துக்கு அவர் உருவாக்கிய டாக்டர் விசுவநாத பிள்ளை (நாசகாரக் கும்பல்) பாத்திரமே மிகப் பெரிய சான்று. “பிள்ளைமாருன்னா என்ன கொம்பு மொளச்சிருக்கா? பிரிட்டிஸ் ராச்சியமா என்ன?” என்று மருதப்பர் பாத்திரத்தைக் கேட்க வைத்தவர் அவர். சாதி அடக்குமுறையிலிருந்து தப்பிப்பதற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறும் தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களின் முடிவைத் தன்னுடைய கதையின் முடிப்பாகவும் அமைத்துக் காட்டியவர் புதுமைப்பித்தன்.
நிறைவேறாத ஆசை
‘ஒருநாள் கழிந்தது’ புதுமைப்பித்தனின் சுயவிமர்சனத் தன்மையிலான கதை. அதில் வரும் முருகதாசர் என்னும் எழுத்தாளனுக்குள் எழுத்தையே நம்பி வாழும் எண்ணற்ற எழுத்தாளர்களை அடையாளம் காணலாம். முருகதாசர் அந்தக் கதையில் தனது ‘நாவல் எழுதும்’ ஆவலை அடிக்கடி வெளிப்படுத்துவார். பித்தனின் நிறைவுறாத நாவல் ஆசையைத் தெரிவிக்கும் உத்தியாகவும் இதைக் கருத வாய்ப்பிருக்கிறது. மேலும் 32 பக்கங்கள் மட்டுமே எழுதி அவர் விட்டுவைத்த ‘அன்னை இட்ட தீ’ நாவலும், அவருடைய குறுநாவல் தன்மையிலான பல கதைகளும், முயன்றிருந்தால் சிறந்த நாவலாசிரியராகவும் அவரால் விளங்கியிருக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. 1942-ம் ஆண்டில் நடந்த ஆகஸ்ட் புரட்சி வரைக்குமான நாடு தழுவிய அரசியலின் பின்னணியில், நான்கு பாகங்கள் கொண்ட ஒரு நாவலை எழுத அவர் திட்டமிட்டிருந்ததாகவும் அறிகிறோம்.
தாம்பத்ய வாழ்வின் அச்சாணி
பலரும் அபிப்ராயப்படுவது போல ‘செல்லம்மாள்’ கதைதான் புதுமைப்பித்தனின் ‘மாஸ்டர் பீஸ்’ என்று நானும் கருதுகிறேன். செல்லம்மாளை வாசிக்க நேர்ந்த தருணங்களில் கண்களைக் கண்ணீர் நனைக்காமல் இருந்ததில்லை. அதைக் காதல் கதை என்று சிலர் மதிப்பிடுகின்றனர். ஆனால் இன்றைக்குப் பிடி தளர்ந்துகொண்டிருக்கும் தாம்பத்ய வாழ்வின் அச்சாணியாக பிரம்மநாயகம் பிள்ளை - செல்லம்மாள் தம்பதியினரை என்னால் காண முடிகிறது. மொழிநடையும், தங்கு தடையற்ற சித்தரிப்பு முறையும் ‘செல்லம்மாள்’ கதையை இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு நவீன அடையாளத்துடனேயே வைத்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.
புதுமைப்பித்தனின் விமர்சன முகம்
புதுமைப்பித்தன் கலை இலக்கியத்தின் சகல துறைகளிலும் கால் பதித்தவர். கவிதைகள் எழுதியபோது வேளூர் வெ.கந்தசாமிப் பிள்ளையாக அவதாரமெடுக்கிறார். விமர்சகர் விருத்தாசலமாக மாறும்போது “இந்தச் சௌந்தர்ய உணர்ச்சியற்ற பாழ்வெளி எப்பொழுதும் இம்மாதிரி ஒன்றுமற்றதாகவே போய்விடாது” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். ‘பக்த குசேலா’, ‘சார் நிச்சயமா நாளைக்கு’ போன்ற நாடக ஆக்கங்களைத் தன்னுடைய சிறுகதைகளின் சாயலில் உருவாக்கினார். ‘தி ஹிஸ்டாரிக்கல் ரோல் ஆஃப் இஸ்லாம்’ என்னும் எம்.என்.ராய் புத்தகத்திற்கு மதிப்புரை எழுதும்போது, ‘ஹிந்து நாகரிகப் பண்புகளை உணர்ந்து அனுபவிக்க அதன் தற்போதைய பிரதிநிதிகளை மறந்தால்தான் இயலும்; அதைப் போல முஸ்லிம் நாகரிகத்தை ரசிக்க வேண்டுமெனில் அதன் தீவிரக் குரல்களை மறந்தால்தான் சாத்தியம்’ என தீர்க்கதரிசனமாகக் குறிப்பிடுகிறார்.
42 ஆண்டுகளே வாழ்ந்த ஒரு உன்னதமான எழுத்துக் கலைஞன் புதுமைப்பித்தன். கலைஞன் தான் வாழ்ந்த காலத்தைப் படைப்புகளில் பிரதிபலிப்பவன் என்பதற்கு மிகச் சரியான உதாரணங்கள் அவருடைய கதைகள். ஆனால் காலத்தையே விஞ்சி நிற்க புதுமைப்பித்தன் போன்ற ஒருசில மேதைகளால் மட்டுமே இயலும்.
கட்டுரையாளர், எழுத்தாளர், ‘துருக்கித் தொப்பி’ நாவலின் ஆசிரியர்.
தொடர்புக்கு: keeranur1@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT