Last Updated : 22 Jan, 2022 07:07 AM

 

Published : 22 Jan 2022 07:07 AM
Last Updated : 22 Jan 2022 07:07 AM

நூல் வெளி: போராட்ட நாயகன் எம்.என்.ராய்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவை ஒட்டி கட்சியின் பயணத்தைச் சித்தரிக்கும் நூல்களும் தொடக்க காலத்தில் அதன் அடிவைப்புக்கு ஆதாரமாக இருந்த ஆளுமைகள் பற்றிய நூல்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் தாஷ்கண்ட் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளையைத் தொடங்கி வைத்த எம்.என்.ராயின் வாழ்க்கைச் சித்திரத்தை பாரதி புத்தகாலயம் ‘எம்.என்.ராய் ஓர் அரசியல் வாழ்க்கை வரலாறு’ என்ற சமரேன் ராயின் எழுத்தைத் தமிழில் கொண்டுவந்துள்ளது.

வெகுமக்களால் பெரிதாக விரும்பப்படாது, எதிர்நிலையில் நின்றபோதிலும் மக்களுக்கு அதிர்ச்சியூட்டி, அவர்கள் அதுவரை தூக்கிப் பிடித்துவந்த லட்சியங்களையும் விழுமியங்களையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற உறுதியுடன் தன் வாழ்நாளின் இறுதிவரை செயல்பட்டவர் எம்.என்.ராய். விடுதலைக்கான முன்நிபந்தனையாக இந்தியாவில் ஒரு தத்துவார்த்தப் புரட்சி நடத்த வேண்டும் என முன்மொழிந்து அதற்கான பரப்புரைகளிலும் ஈடுபட்டவர்.

1918-ல் வெளியான ராஜ துரோகக் குழுவின் அறிக்கை திலகரையும் ராயையும் முதன்மையான ‘ராஜ துரோகி’களாக அடையாளம் காட்டியது. இந்தியாவின் குறிப்பிடத்தக்க வழக்குகளான ஹவுரா குண்டுவெடிப்பு வழக்கு (1910), கான்பூர் (1924), மீரட் (1929) சதிவழக்குகள் ஆகியவற்றில் குற்றம்சாட்டப்பட்டவராகவும் ராய் இருந்தார். மேலும் ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு ராய் அனுப்பி வைத்த தூதுவர்களின் மீதே (1922 முதல் 1924 வரை) பெஷாவர் சதிவழக்குகள் போடப்பட்டன. இந்தியாவின் விடுதலைக்காகப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட அனுசீலன் சமிதியில் தொடங்கி ராயின் இறுதி நாட்களில் அவர் நடத்திவந்த இந்திய மறுமலர்ச்சி நிறுவனம் வரையில் அவரது வாழ்க்கைப் பயணம் எண்ணற்ற மாற்றங்களைக் கொண்டுவந்தது.

அவரது 14 வயதுக்கும் 67 வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஜதீன் முகர்ஜி, ராஷ் பிகாரி போஸ், காந்தி, நேரு, சுபாஷ் சந்திர போஸ் போன்ற இந்திய ஆளுமைகள், மைக்கேல் பொரோடின், லெனின், ட்ராட்ஸ்கி, ஜினோவியேவ், ஸ்டாலின், புகாரின் போன்ற ரஷ்ய ஆளுமைகள், சன் யாட் சென், மாவோ போன்ற சீன ஆளுமைகள், ஹோ சி மின் போன்ற எண்ணற்ற தலைவர்கள் பலரோடும் பல்வேறு சூழல்களில், பல்வேறு தகுதிகளுடன் இணைந்தும் முரண்பட்டும் செயல்பட்டவராகவும் அவர் இருந்தார்.

ஐரோப்பாவுக்கு வெளியே முதல் கம்யூனிஸ்ட் கட்சியை மெக்சிகோவில் உருவாக்கி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளையை தாஷ்கண்ட்டில் நிறுவி, மூன்றாவது அகிலத்தின் தலைவர்களுள் ஒருவராக உயர்ந்து, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளில் செயல்பட்டுவந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வழிகாட்டிய பெருமை மிக்கவராகவும் ராய் இருந்தார். தன் தாய்மொழியான வங்க மொழி தவிர, ஆங்கிலம், ஸ்பானிஷ், ஜெர்மன், ருஷ்யன் என பல மொழிகளிலும் கூர்மையோடு எழுதிய, சுமார் 35 ஆண்டு காலம் தொடர்ந்து ஆசிரியராய், பதிப்பாளராய், பத்திரிகையாளராக அவர் இருந்தார்.

அந்நாட்களில் பெரும்பாலானவர்களால் கிழக்கத்திய நாடுகளின் பிரச்சினை என்று கூறப்பட்டுவந்த காலனிய நாடுகளின் பிரச்சினையை ராய் ஏற்கெனவே தான் கொண்டிருந்த தேசியவாதத்திலிருந்து விலகி, மார்க்சிய அடிப்படையில் அணுகினார். புரட்சியானது முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் தொடங்கும்; அல்லது காலனி நாடுகளில் புரட்சிக்கு அது தூண்டுதலாக இருக்கும் என்ற சோஷலிச அகிலத்தின் படிப்படியான புரட்சி என்ற கோட்பாட்டை ராயின் ஆய்வுரை நிராகரித்தது.

“காலனிய நாடுகளில் உள்ள மக்கள், முதலாளித்துவ ஜனநாயகக் கட்டத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும் என்ற கருத்தோட்டம் தவறானது. காலனிய நாடுகளில் நடைபெறக்கூடிய புரட்சியானது, முதல் கட்டத்தில் ஒரு கம்யூனிஸ்ட் புரட்சியாக இருக்கப்போவதில்லை. தொடக்க நிலையிலேயே புரட்சியின் தலைமையானது கம்யூனிஸ்ட் முன்னணிப் படையின் கைகளில் இருக்குமானால், புரட்சிகரமான வெகுஜனங்கள் வழிதவறிய பாதையில் செல்ல முடியாது. அந்நிலையில், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டம் பிறகு வர்க்கப் போராட்டமாக மாற வேண்டியது கட்டாயமாகும்” என்றார்.

விடுதலை இயக்கங்களின் சமூகக் குணப் பாங்கு எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த காலனிய நாடுகளில் வெளிநாட்டு முதலாளித்துவத்துக்கு எதிராக மிகவும் பலவீனமான தேசிய முதலாளித்துவம் போராடிவருவதைக் குறிப்பிட்ட ராய், அதனால் தேசிய முதலாளித்துவம் நிலப் பிரபுத்துவத்துக்கு எதிரான போராட்டத்தை நடத்தவில்லை என்றும், அந்த சக்திகளுடன் அது அணிசேர்க்கையைக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

காலனிய நாடுகளில் 150 ஆண்டுகளுக்குப் பிறகு முதலாளித்துவம் வந்திருப்பதால் ஒரு விடுவிப்பாளராக அது தன் பங்கை ஆற்றுவதற்குக் காலம் கடந்துவிட்டது. எனவே, தற்போதைய நிலையில் “என்னதான் சிறு குழுக்களாக இருப்பினும் விடுதலை இயக்கத்தின் பொருட்டு கம்யூனிஸ்ட் குழுக்கள் தேவைப்படுகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் திசைவழியில் அவர் பயணித்த காலத்தில் எண்ணற்ற எதிர்ப்புகளை எதிர்கொண்டபோதிலும், அவர் கொண்டிருந்த கருத்துகள், அதன் காலம் ஆகியவற்றுக்குப் பொருத்தமான வகையில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். நூலின் ஆசிரியர் சமரேன் ராய் குறிப்பிடுவது போல “வெற்றிகரமான மனிதர் என்ற சாதாரணப் பொருளில் பார்க்கையில் அவர் அத்தகையவரல்ல. தான் முன்வைத்த கருத்துகளிலிருந்து மாறுபட்டு, அவர் செயல்பட்டிருந்தால், அவர் ஒரு சந்தர்ப்பவாதியாகச் சித்தரிக்கப்பட்டிருப்பார்.

தனது கருத்துகளை மாற்றிட மறுத்திருப்பாரேயாகில், வறட்டுத் தத்துவவாதியாகவோ, யதார்த்தத்திற்குப் புறம்பானவராகவோ இருந்திருப்பார். எப்படியிருப்பினும் 1954 ஜனவரியில் அவர் மரணமடைந்தபோது, பெரும்பாலோரால் மறக்கப்பட்ட ஒரு மனிதராகத்தான் இருந்தார். தன் வாழ்வை முழுமையான சர்வதேசியத்திற்கு அர்ப்பணித்து, அதன் பொருட்டு எந்த ஒரு அங்கீகாரத்தையும் பெற்றிடாத இவரைப் போன்று அநேகமாக வேறெந்த இந்தியரும் இருந்திருக்க முடியாது” என்ற முடிப்புரை மிகவும் பொருத்தமானதே ஆகும்.

இந்நூலைத் தமிழில் இயல்பாக மொழிபெயர்த்துள்ள ராமச்சந்திர வைத்யநாத் பாராட்டுக்குரியவர்.

- வீ.பா.கணேசன், பத்திரிகையாளர், நூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு: vbganesan@gmail.com

எம்.என்.ராய் ஓர் அரசியல் வாழ்க்கை வரலாறு

சமரேன் ராய்

தமிழில்: ராமச்சந்திர வைத்யநாத்

பாரதி புத்தகாலயம், சென்னை – 600 018.

விலை: ரூ.200

தொடர்புக்கு: 044-24332424

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x