Published : 24 Apr 2016 12:31 PM
Last Updated : 24 Apr 2016 12:31 PM
நேர்காணல் ஒன்றில் ஆத்மாநாம் சொல்கிறார்: ''ஒரு கவிஞன் தன்னைப் பற்றி மட்டுமே தேடிக்கொண்டிருந்து தனக்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவு பற்றி எதுவும் கூறாமல் இருந்தால், அதுமாதிரிக் கவிஞர்கள் காலப்போக்கில் தள்ளப்பட்டுவிடுவார்கள்.'' ஆத்மாநாமின் கவிதை வெளியை அறிந்துகொள்ள இந்த வார்த்தைகளே போதுமானவை.
தமிழ்க் கவிதையில் தனித்த வாசனை ஆத்மாநாம். நவீன வாழ்க்கையின் சிக்கலை, அற நெருக்கடியைக் கவிதையில் சந்தித்தவர். 'ஐயோ' என்ற தலைப்பில் ஒரு கவிதை:
சொன்னால் மறக்கிறார்கள் / எழுதினால் நிராகரிக்கிறார்கள்/
தாக்கினால் தாங்குகிறார்கள் / சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்/
அற்புத உலகம் / அற்புத மாக்கள்
இவரே நவீனத் தமிழின் அரசியல் கவிதையின் ஆரம்பம். 'ஒன்றும் இல்லை' போன்ற அகநோக்குக் கவிதைகளும் இவரிடம் உண்டு.
இதுதான் கவிதை என்று நினைத்துக்கொண்டிருக்கிற வாசக மனதைப் பாதிப்பதே இவரது கவிதை இலக்கணம். தனித்த வெளிப்பாட்டு மொழி ஒன்று இவருக்கு வசப்பட்டிருந்தது. அவரது கூறல் முறை புதியது. இவரது தாக்கத்தை இப்போதும் பலரது கவிதைகளில் காணலாம்.
ஆத்மாநாமின் அக உலகம் நிகழ் உலகிலிருந்து முற்றிலும் வேறானது. கவிஞன் தான் கட்டமைத்துக்கொண்ட உலகத்திலேயே சதா காலமும் இருக்க முடியாது. வெளியே வந்தாக வேண்டும். வெளியே வருகிற ஒவ்வொரு முறையும் நிகழ் உலகோடு மனம் போராடுகிறது. இரண்டையும் சமன் செய்து வாழ்வதற்கான ஒரு உலகைக் கண்டடைய வேண்டும். அதுவே வாழ்தல். இந்த மூன்றாவது உலகம் எது என்பதில்தான் படைப்பாளிகள் வேறுபடுகிறார்கள். எழுத்தின் பன்முகத் தன்மைக்கான இடமும் இதுதான்.
இன்று முடிந்துவிட்டது / முடியாமல் தொடர்ந்து
முடிவைத் தேடித் தேடி / அலையும் கால்கள்
சோர்ந்துவிழும் படுக்கையில் / மனம் மேலே இன்னும் மேலே
பறந்து செல்லும்
மனம் ஒன்றை அறியத் துடிக்கிறது. இதுவரையிலும் யாரும் அதை முழுதாக அறிந்து சொல்லவில்லை. அறியத் துடிக்கும் மனதைத் தடுத்து நிறுத்துவது சாத்தியமில்லை. அப்போது என்ன நிகழும்? முடிவில்லாத எண்ணம் பெருக்கெடுத்து ஓடும். விளிம்பற்ற வானில் பறவை எதுவரை செல்லும்? மனம் மேலே இன்னும் மேலே பறந்து செல்கிறது. பற்றிக்கொண்ட கேள்வியிலிருந்து விடுபட மறுக்கிறது. மனதின் பயணத்தை நிறுத்த முடியவில்லை. கவிதைக்கு முந்தைய மனதின் வினையாடல் தொடர்கிறது. கவிதை உருப்பெறும் வெளியில் இப்போது வாசகன்.
எங்கே முடிவு / படபடக்கும் காகிதங்கள் கேலி செய்யும்
சலசலக்கும் இலைகள் தாளம் போடும் / எப்படி இருக்கும் முடிவு
காற்றிலா மண்ணிலா நீரிலா / காலம் காலமாய்த் தேடியவர்
இருக்கின்றார் ஆழ்ந்த உறக்கத்தில் / இம்மண்ணுக்குள்
என்றோ என் கனவில் / வந்தது முடிவு
சரியாகப் புலப்படவில்லை
இந்தக் கவிதையின் உயிர் என்று இரண்டு வரிகளைச் சொல்லலாம். ''படபடக்கும் காகிதங்கள் கேலி செய்யும் / சலசலக்கும் இலைகள் தாளம் போடும்''. இந்த வரிகள்தான் ஆத்மாநாமை மிகச் சிறந்த கவிஞனாக இன்றும் கொண்டாட வைக்கின்றன. 'எப்படி இருக்கும் முடிவு' என்ற கேள்விக்கான எதிர்வினைகளே இந்த இரண்டு வரிகளும். அறியாவொண்ணா ஒன்றின்மீது வார்த்தைகளைக் கொண்டு அறிய முயல்வதைத்தான் காகிதங்கள் கேலி செய்கின்றன. இயற்கை அந்தக் கேலியை வரவேற்கிறது. கவிதை மேலும் தொடர்கிறது.
பரந்த வெளியில் நான் / சூரியன் தலைப்பக்கம்
கடல் காலடியில் / எங்கே உன்னைக் காணோம் / இவ்வளவு காலமாய் என்றேன்
இந்த உரையாடலை யார் யாரோடு நிகழ்த்துகிறார்கள்? கவிதையிலேயே பதிலும் இருக்கிறது. ஆரம்பம் முடிவோடு உரையாடுகிறது. முடிவும் தொடக்கமும் சந்திப்பது மௌடீக அழகு. முடிவைக் கண்டுகொண்ட ஆரம்பம் எங்கே உன்னைக் காணோம் இவ்வளவு காலமாய் என்கிறது. நீள்கிறது கவிதை.
யார் நீ என்றொரு குரல் / உன்னைத் தேடி அலுத்த
ஆரம்பம் என்று கூற / உன்னுள்தான் இருக்கிறேன்
என்றது முடிவு / பின் இப்போது என்பதற்குள்
காலை புலப்பட்டது
முடிவு ஆரம்பத்திலேயே இருக்கிறது என்ற பதில் வெளியில் இருந்து வருவது கவிதைக்குள்ளிருக்கும் பகடி. 'பின் இப்போது' என்கிற வார்த்தைகள் மிக முக்கிய மானவை. தத்துவ விசாரத்திலோ தர்க்கத்திலோ சிக்கிக் கொள்ளாது கலையின் விளிம்பில் அதிர்கிறது கவிதை. ஆத்மாநாம் கொண்டாடப்படுவது இந்த இடத்தில்தான். கவிதையைக் கவிதையாக மட்டுமே அவர் பார்க்கிறார்.
'காலை புலப்பட்டது' என்ற இறுதி வரி முதல் வரியில் பட்டுத் தெறிக்கிறது. கவிதையின் இறுதி வரியும் முதல் வரியும் இணைந்து காட்டும் முரண்மெய்தான் இந்தக் கவிதையின் பேரழகு. முடிவுதான் இங்கே தொடக்கம். தொடக்கம்தான் முடிவு. ஆக முடிவு நடுவில் நின்று ஊசலாடுகிறது. ஆத்மாநாம் மாய வித்தைக்காரனாய் முடிவை அலைக்கழிக்கிறார். எல்லாம் மனம் ஆக்கிப் பார்க்கும் வினை என்பதாக முழு உரையாடலும் திசை மாறுகிறது.
கவிதை உண்மையில் முடிவையோ ஆரம்பத்தையோ பேசவில்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட வாழ்க்கையின் ரகசியத்தை அறியவே முயல்கிறது. மறைவெளி எப்போதும் ரகசியங்களால் ஆனது. அதனால்தான் ஆத்மாநாமே அறியாது ''படபடக்கும் காகிதங்கள் கேலி செய்யும் / சலசலக்கும் இலைகள் தாளம் போடும்'' என்ற வரிகளை அவரது கவிதை மனம் எழுதிவிடுகிறது. முடிவை அலைக்கழிக்கும் விதம் வியக்கவைக்கிறது. இந்த வியப்பு ஆத்மாநாமின் மீதும் படிகிறது.
கட்டுரையாளர், எழுத்தாளர் ‘ஆதிரை’ நாவலின் ஆசிரியர்
தொடர்புக்கு: kavai.palanisamy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT