Last Updated : 01 Apr, 2016 10:39 AM

 

Published : 01 Apr 2016 10:39 AM
Last Updated : 01 Apr 2016 10:39 AM

மவுனத்தின் புன்னகை 14: போட்டிகள்!

என் நினைவில் ‘ஆனந்த விகடன்’ ஒரு வாரப் பத்திரிகையான பிறகுதான் ‘பகுத்தறிவுப் போட்டி’ என்ற பகுதி ஆரம்பமாயிற்று என்று ஞாபகம். மாதத்தில் ஒரு வாரம் 5 ஆயிரம் அல்லது 10 ஆயிரம் ரூபாய் பரிசு. இதர வாரங்களில் 1,500. ஆங்கிலத்தில் இதை ‘கிராஸ் வேர்டு போட்டி’ என்றழைப்பார்கள். ஒருவர் எவ்வளவு விடைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால், ஒவ்வொரு விடையும் ‘ஆனந்த விகடன்’ இதழில் இருந்து கிழித்த பக்கத்தில் இருந்துதான் இருக்க வேண்டும். அதாவது, நீங்கள் நான்கு வெவ்வேறு பதில்கள் (அல்லது விடைகள்) அனுப்ப வேண்டுமானால் நான்கு பிரதிகள் ‘ஆனந்த விகடன்’ வாங்க வேண்டும்.

ஒவ்வொரு நுழைவுத் தாளுக்கும் ஒரு கட்டணம் செலுத்த வேண்டும். பின்னர் இதே பாணியில் பம்பாய் ‘இல்லஸ்ட்ரேடட் வீக்லி’ வாரப் பத்திரிகையும், ‘ஸண்டே ஸ்டாண்டர்டு’ பத்திரிகையும் போட்டிகள் நடத்தின. கட்டங்கள் பூர்த்திசெய்யப்பட வேண்டும். இரண்டு அல்லது மூன்று கட்டங்களுக்கு ஒன்றுக்கு மேல் சரியான பதில்கள் இருக்கும். ஆனால், போட்டிக் கட்டம் தயாரிக்கப்பட்டவுடனேயே பத்திரிகையின் சரியான பதில் ஒரு வங்கியில் ஒப்படைக்கப்படும். போட்டி முடிவு நாள் முடிந்த பிறகு வங்கியில் ஒப்படைக்கப்பட்ட சரியான பதிலைத் திறந்து பிரசுரம் செய்வார்கள். மிக அபூர்வமாகவே மொத்தப் பணமும் ஒருவருக்கே போகும்.

இதில் சூதாட்ட அம்சம் இருக்கிறது என்று அன்றைய காங்கிரஸ் தலைவர் களில் ஒருவரான ராஜாஜி கருதினார். இன்று பத்திரிகை விற்பனையை அதிகரிக்க ஏதேதோ அம்சங்கள் சேர்க்கப் படுகின்றன, விலக்கப்படுகின்றன. மிகவும் கட்டுப்பாடான பத்திரிகைகள் என்று கருதப்படுபவை கூட சினிமா செய்திகள், நடிக நடிகையர் பற்றிய செய்திகளுக்காகப் பல பக்கங்கள் ஒதுக்குகின்றன.

ஒரு காலத்தில் தொடர்கதை களுக்காக வாசகர்கள் வாங்கு கிறார்கள் என்று கூறப்பட்டது. இதில் உண்மையும் உண்டு. ஆனால், போட்டிகளால் பல குடும்பங்கள் சீரழிந்துவிடுகின்றன என்பது ஒரு குற்றச் சாட்டு. அன்று ‘ஆனந்த விகடன்’ பிரதி இரண்டணா. ஒரு ரூபாய்க்கு எட்டு பிரதிகள். (பதினாறு அணா கொண்டது ஒரு ரூபாய்.) நான்கு விடைகள் அனுப்ப இரண்டு ரூபாய்.

‘ஆனந்த விகடன்’ பகுத்தறிவுப் போட்டியால் குடும்பப் பொருளாதாரம் பாதிப்புக்கு உட்படாவிட்டாலும் குடும்பத் தலைவன் ‘மனிதனுக்கு சுகம் தருவது மணமா, பணமா?’ என்ற கேள்விக்கு பதில் யோசித்துக்கொண்டிருப்பது நடக்கும். ஆனால், இப்போட்டி களில் கலந்துகொண்ட வர்கள் பெரும்பாலும் சிறிய ஊர்களில் வசிக்கும் நபர்களாகத் தான் இருக்கும். எனக்கு அதில் ஒரு பெயர் நினைவில் இருக்கிறது. வத்தலக்குண்டு எஸ். ஆர். சுப்பிரமணியன். கடைசியில் மத்திய அரசே பரிசுத் தொகை 1,500 ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது என்று உத்தரவு போட்டது..

‘ஆனந்த விகடன்' பகுத்தறிவுப் போட்டி நடந்த வரை முதல் பரிசு ஐந்தாறு நபர்களுக்கு வந்தால், இரண் டாம் பரிசு பெற்றவர்கள் பட்டியல் மிகப் பெரிதாக இருக்கும். ஆதலால் அவர்கள் பெயர்களைப் பகிரங்கமாகத் தெரிவிக்க ஒரு துணைப் பத்திரிகையை ஆனந்த விகடன் தொடங்கியது. அதன் பெயர் ‘நாரதர்.’ அதன் பொறுப்பை னிவாச ராவ் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரே போட்டிகளையும் தயாரித்துத் தருவார் என்பார்கள். அவர் ராவுஜி என்ற புனைப்பெயரில் ‘நாரதர்’ பத்திரிகைக்கே ஒரு புதிய பரிமாணம் கொடுத்தார். அதில் திரைப்பட மதிப்புரை, இசை நாட்டிய நிகழ்ச்சிகள், திருமணங்கள் முதலியவற்றைப் பிரசுரித்து ‘நாரதர்’இதழை கலைஞர்கள் எதிர்பார்க்கும் வாரப் பத்திரிகையாக மாற்றினார். ஆனந்த விகடனில் பகுத் தறிவுப் போட்டிகள் வந்த வரை ‘நாரதர்’ வாராவாரம் புதன்கிழமையில் வந்துகொண்டிருந்தது.

ராவுஜி பல புதிய பாடகர்கள், நடனம் ஆடுபவர்கள் பற்றி எழுதினார். எனக்குத் தெரிந்து வைஜெயந்தி மாலாவின் முதல் மேடை நாட்டிய நிகழ்ச்சியைப் பற்றி அவர்தான் எழுதினார். ஒரு ஆண் பரத நாட்டியக் கலைஞரின் அரங்கேற்றம் மதுரையில் நடந்தது பற்றி நான் ‘நாரத’ரைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன். அந்த ஆண் கலைஞர் பின்னர் ‘மின்னல் வீரன்’ என்ற படத்துக்கு நடனக் காட்சிகள் அமைத்தார். ஓரிரு ஜெமினி படங்களில் நடன கோஷ்டியில் இருந்திருக்கிறார். ஆனால் சினிமா அவருக்குக் கை கொடுக்கவில்லை. எழுத்தாளராக வும் பத்திரிகைக்காரராகவும் இருந்து ஓய்வு பெற்றர். அவர் பெயர் சி.ஆர்.கண்ணன். ஆனால், புகழ் வாங்கித் தந்த புனைப்பெயர் டபுள்யூ. ஆர்.ஸ்வர்ண லதா. ‘தினமணிக் கதிர்’ ஒரு தனிப் பத்திரிகையாக இருந்தபோது என் கதையை முத்திரைக் கதையாகப் பிரசுரித்தார். ‘கணையாழி’ பத்திரிகையில் முதல் தொடர்கதை அவர்தான் எழுதினார். தலைப்பு, ‘வஞ்சம்.’

அன்று பல மத்தியதரக் குடும்பங் களைச் சீரழித்தது காபி குடிக்கும் பழக்கம் என்று சொல்லப்பட்டது. இதில் உண்மை இருக்கலாம். என் அம்மா பிறந்த ஊர் வத்தலக்குண்டு. அவர்கள் வீட்டில் சுமார் ஒன்பது அங்குலம் உயரம் உள்ள தம்ளரில் முதல் காபி. அப்புறம் இன்னொரு தம்ளர் அதே அளவில். இது தொடர்ந்து ஒரு நாளைக்கு எட்டு அல்லது ஒன்பது முறை காபி. வீட்டில் இருப்பவர்கள் இப்படி காபி குடித்தால் உடல் நலமும் கெடும் என்கிற உணர்வு அன்றில்லை என்றுதான் கூறவேண்டும். என் அம்மாவின் பெற்றோர் விட்டில் காபி இப்படித்தான் வெள்ளமாக ஓடிற்று. பெண்கள் 60 வயது வரை சமாளித்துவிட்டார்கள். ஆனால் ஆண்கள், என் தாத்தா உட்பட அற்பாயுள்தான்.

என்னுடைய நண்பர் ஒருவர் ‘ஸ்கொயர் வேர்ட்ஸ்’ பைத்தியம். எதிரில் கண்டவர்களையெல்லாம், “இந்தக் கேள்விக்கு எது சரியான பதில்?” என்று கேட்பார். அப்போது குதிரைப் பந்தயத்துக்காகவே ‘ஒரிஜினல் வேல்’ என்றொரு பத்திரிகை மிகவும் பிரபலமாக இருந்தது. சென்னை தவிர உதகமண்டலம், புனா (இன்று புனே) குதிரை ரேஸ்கள் பற்றியெல்லாம் அதில் வரும். குதிரையின் எடை, ஓட்டுபவரின் எடை, குதிரையின் முந்தையப் பந்தயங்களின் சாதனை, அதே போல ஓட்டுபவரின் பழைய சாதனைகள் எல்லாம் இருக்கும்.

நான் சென்னையில் வேளச்சேரியில் 15 ஆண்டுகள் வசித்தேன். நான் ஏறும் பேருந்து சென்னைக் குதிரை பந்தய அலுவலகத்தையும் பந்தய மைதானத்தையும் தாண்டிப் போகும். பந்தய அலுவலக வெளியில் எப்போதும் கூட்டம்தான். அந்தக் கூட்டத்தில் எனக்கு சட்டை தைத்துக் கொடுத்தவர், என் அம்மாவின் சடலத்தைச் சுமந்து சென்றவர், பரிசாரகர்கள் என்று பலர் கண்ணுக்குத் தெரிவார்கள். ஒரு மனிதனை எது சூதாட வைக்கிறது? தெரியவில்லை!

- புன்னகை படரும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x