Published : 27 Jan 2016 08:32 AM
Last Updated : 27 Jan 2016 08:32 AM
வடசென்னை என்பதும் மனிதர்கள் அடர்ந்து வாழும் பகுதிதான். என்ன சொன்னேன்? வாழும் பகுதி என்றா? அல்ல. வாழ முயற்சிக் கும் ஊர்தான். ஏனைய ஒரு மற்றும் தென் சென்னைகளின் சிலர் நினைப்பது போல கொசுக்கள், ஈக்கள், மூட்டைகள், பாம்பு தேள்கள் வாழும் ஊர் அல்ல. அங்கும் காதல், அன்பு, துரோகம், மது, வன்முறைகள் என்கிற மனித இலக் கணங்களோடு மானுட விவசாயம்தான் நடந்துகொண்டிருக்கிறது. திருவொற்றி யூர் மண்ணைத் திருநீறு என்றார் ஒரு அடிகள். ஒரு வள்ளலார் அங்கே தருமம் தழைதோங்குகிறது என்றார். அங்கேயும் புல் முளைக்கிறது. பூ பூக்கிறது. அப்புறம் என்ன வழக்கு?
தண்டையார்பேட்டை, வண்ணாரப் பேட்டை முதலான பல பிரதேசங்களில் எனக்குப் பரிச்சயம் உண்டு. என் நண் பர்களான கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலர் அங்கு தமிழ் முகத்தை நவீனமாக் கிக்கொண்டு இருக்கிறார்கள். அவர் களில் முக்கியமானவர் அண்மை வரவு கவிஞரும் எழுத்தாளருமான பாக்கியம் சங்கர். ‘நான் வடசென்னைக்காரன்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைத் தொகுதி, அவசியம் வாசிக்கப்பட வேண்டிய சுயமானம் தமிழ் இலக்கியப் பரப்பில் குறிப்பிடத் தகுந்த படைப்பாக மிளிர்கிறது.
பாக்கியம் சங்கர் யாரை எழுதியிருக் கிறார்? பிச்சைக்காரர்கள் பற்றி, பாலியல் தொழிலாளி பற்றி, காமத் தரகர்கள் பற்றி, கானாக் கலைஞர் பற்றி, காதலர்கள் பற்றி, சுடுகாட்டில் எரியும் பிணத்தருகே காதல்செய்வோர் பற்றி, வேலை முடித்துத் தருவதாகக் கூறி, வியர்வைக் கூலி வாங்கும் அரசியல் தரகர்கள் பற்றி, படிக்க வேண்டிய பையன்களை போஸ்டர் ஒட்டவும் கூட்டம் சேர்க்கவும் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் இழிஞர்கள் பற்றி. இந்த உதாரணப் பட்டியல், இந்தக் கட்டுரைத் தொகுதி, ஏதோ வாசகர்களைக் கண்ணீர்த் தொட்டி யில் முக்கிச் சோப்புப் போடும் என எண்ண வேண்டாம். அந்த மனிதர்கள், தங்கள் சோகங்களுக்கு முன் கொண்டாட்டங் களை நிறுத்துகிறார்கள். தங்கள் வதை களுக்கு முன் அன்பை, கருணையை நிறுத்துகிறார்கள். இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு முன் இசையை நிறுத்துகிறார்கள். சாவுப் பாடைகளுக்கு முன் குத்தாட்டம் போட்டு மரணத் தின் முகத்தில் கரி பூசுகிறார்கள். பாக்கியம் சங்கர், இவைகளைத்தான் எழுதுகிறார்.
இல்லாமல்லி, பர்மா பஜாரில் புகழ் கொடி ஏற்றியவள். ஒரு மழைக்காலத்தில் வந்து சேர்கிறாள், கதை சொல்லியின் கடைக்கு. சாம்பல் நிறக் கண்கள். நதியா கம்மல். பாவாடைத் தாவணியில், இரட்டை சடை போட்டு குஞ்சலம் வைத்துக் கட்டியிருந்தாள். சற்றுப் பூசினாற்போல வாகு. தாவணியின் முனையைப் பிழிந்து கொண்டு கதை சொல்லியைப் பார்க்கிறாள்.
‘‘அலோ, சீத்தாராமன் எப்ப வரு வான்?’ என்று இவனிடம் கேட்கிறாள்.
‘‘இன்னைக்கு வரமாட்டார். என்ன விஷயம்?’’
‘‘ம்… வேலையைப் பார்த்துட்டு காசு கொடுக்கல நாதாரி நாயி. காத்தால வரேன்னு சொல்லு. காசு கொடுத்தா வாங்கி வையி… என்ன புரியுதா?’’
இவனுக்குப் புரிகிறது. முதலாளி யும் காசு கொடுத்துச் சென்றார். இல்லா மல்லியும் வந்து வாங்கிக்கொண்டு அதை எண்ணும்போது, இவனைப் பார்த்து ‘‘சாப்டியா?’’ என்கிறாள். ‘‘இல்லை’’ என்கிறான். ‘‘பிரியாணி சாப்பிட்றியா?’’. இப்படித்தான் இவனுக்கும் இல்லா மல்லிக்கும் நட்பு துளிர்க்கிறது. இலாவுக்குப் பிடித்த நடிகர் அர்ஜுன். ஏன்? அவர்தான் தீவிரவாதிகளிடமிருந்து இந்திய தேசத்தைக் காப்பாற்றுகிறார். பிடித்த பாடகர் சந்திரபாபு.
ஒருநாள் உடம்பு சரியில்லை என்று அவனுடன் மருத்துவமனைக்குச் சென்று திரும்பும் வழியில், காவல் நண்பர்களால் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப் படுகிறாள். இலா மருந்து சீட்டை காட்டுகிறாள். கடமையே கண் என்று நம்புகிறவர்கள் நம் காவல் சகோதரர்கள். அப்புறம் விடுதலை பெற்று வருகிறாள் இலா. இவனும் அவளும் சரக்கு சாப்பிடுகிறார்கள். அவள் தொடையைக் காட்டுகிறாள். சூடு போட்டு சதை கண்ணிப் போயிருக்கிறது. ஏன் சூடு? சட்ட பரிபாலனத்தில் அப்படி ஒரு விதி இருக்கிறது. காலம் செல்கிறது. இவனுக்குப் பணமுடை. இலாவிடம் கேட்கலாம் என்று தரகருக்குப் போன் செய்கிறான். அப்போதுதான் தெரிகிறது இலா இறந்துவிட்டாள் என்பது. ஆஸ்பத் திரி பிணவறையில் இருந்தவளை இவனும் தரகரும் போய் பார்க்கிறார்கள். ஒரு கஸ்டமரோடு கடலில் குளிக்கப் போயிருக்கிறாள். அலை அவளைக் கொண்டு போயிற்று. ஒரு தொப்பிக்காரர் வருகிறார். ‘‘என்னய்யா, பாடியை நீ வாங்கிக்கிறியா, இல்ல அநாதைப் பொணம்னு ஃபைல் பண்ணிடவா?” என்கிறார். இவனால் அழத்தான் முடிந்தது. அவள் ஒரு காலத்தில் பாடி ஆடிக் காட்டிய சந்திரபாபுவின்
‘பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை/காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை/ மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை/ சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை’
பாடலில் கரைந்து நிற்கிறான் இவன்.
பிச்சைக்காரர்கள் பற்றி பாக்கியம் சங்கர் எழுதியிருக்கிறார். பிச்சைக்காரர் என்றதும் அழுக்கடைந்து, கை கால் களில் பஞ்சு வைத்துக் கட்டிக் குளிக் காமல்… இல்லை. அப்படி இல்லை. வெளுத்த உடையும் புதுக் கைலியுமாக ஜொலிஜொலிப்புமாக இருந்தார் ஒரு பிச்சைக்காரர். பிச்சைக்காரர்கள் பற்றிய ஒரு படத்துக்கு நிஜப் பிச்சைக்காரர் களைத் தேடி அலைகிற குழுவில் நம் கதைசொல்லியும் இருக்கிறார்.
‘‘நடிக்க வர்றீங்களா?’’
‘‘எவ்ளோ தருவே?’’
‘‘மாசம் ஐயாயிரம். சாப்பாடு போட்டு.’’
‘‘ராஜா… இப்படி நிழல்ல உக்காந்து கினு காலாட்டிகினே பத்தாயிரம் ரூவா சம்பாரிச்சிருவேன். என்னைப் போய்க் கஷ்டப்படச் சொல்றியே…’’
இரு கால்களும் இல்லாத இன்னொரு பிச்சைக்காரர். பூக்கட்டும் மனைவி. அவர் பேசுகிறார். ‘‘பிச்சைனு யார்கிட்ட யும் கேக்கறதில்லை. கொடுத்தா வாங்கிக்கிடுவேன். பேத்திக்கு ஏதாச்சும் பண்ணிட்டோம்னா நிம்மதியா போய்ச் சேர்ந்துருவோம்…’’ அப்போது ஒரு பெண் பெரியவரை நோக்கி ஓடி வந்தது. கையில் ஒரு பொட்டலம் இருந்தது.
‘‘தாத்தா, முதலாளியம்மா கொடுத் தாங்க. நீயும் ஆயாவும் சாப்டுங்க, தேடுவாங்க. நான் போறேன்.’’
பாக்கியம் சங்கர் எழுதுகிறார்: ‘துள்ளிக் குதித்து வந்து தாத்தாவிடம் கொடுத்த அந்தப் பொட்டலத்தில் அவள் அன்பைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்…’
அந்தப் பெண்ணின் பெயர் மோஸம். பருவநிலை என்று அதற்கு அர்த்தம். சில மாதங்களுக்குப் பிறகு, சங்கர் அந்த இடத்துக்குச் செல்கிறார். விசாரிக்கிறார். பெரியவர் சாலையைக் கடக்கும்போது விபத்தில் இறந்துபோனார். மனைவி, மோஸம் என்கிற பெண்ணை அழைத்துக்கொண்டு எங்கு போனாள்? தெரியவில்லை.
சங்கர் இப்படி எழுதுகிறார்: ‘திரும்ப நடந்தேன். கையில் பொட்டலத்தோடு ஓடிவந்த மோஸத்தின் முகம் திரும்பத் திரும்ப வந்து போனது. மோஸம் இப் போது எங்கே இருப்பாள்? அவளுக்கு யாரைத் தெரியும்? வாழ்வின் சகல அவஸ்தைகளோடும் வாழ்ந்துகொண் டிருந்த அந்த எளிய ஜீவன்களுக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? மோஸம் என்றால் பருவநிலை. ஏதாவ தொரு பருவநிலையில் மோஸத்தைப் பார்த்துவிட மாட்டேனா..?’
பாக்கியம் சங்கரின் மொழி, அணி அழகுகள் இல்லாததானாலேயே அழகு டையதாக இருக்கிறது. அசலான மனிதர் களைச் சொல்லத்தக்க அசலான மொழி அவருக்குக் கைகூடியிருக்கிறது. செய்யும் பணியில் தம்மை ஒப்புக் கொடுத்து, உண்மைகளை முன்வைத்து இயங்குகிறபோது, எழுத்து எழுதுபவர் நகங்களைப் போல உடம்பின் உறுப் பாகவே மாறிவிடும். சங்கருக்கு மாறியிருக்கிறது.
‘நான் வடசென்னைக்காரன்’ என்னும் இத்தொகுதி பாக்கியம் சங்கருக்கு சரி யான முகத்தையும், அடையாளத்தையும் கொடுத்திருகிறது. ‘பாவைமதி’ புத்தக வெளியீட்டு நிறுவனம் முதல் முயற்சியாக இப்புத்தகத்தை வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது.
- நதி நகரும்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT