Published : 25 Dec 2021 07:03 AM
Last Updated : 25 Dec 2021 07:03 AM

நூல் வெளி: வாழ்வு எனும் உயிரியக்கம்: ஓர் தத்துவ விசாரணை

கவிஞராய், பௌத்த நூல்களின் மொழிபெயர்ப்பாளராய் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படும் வி.அமலன் ஸ்டேன்லியின் சமீபத்திய நாவல், ‘வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்’. முதல் நாவல் என்றும்கூடச் சொல்லலாம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘அத்துமீறல்’ குறும்புதினம் அறிவியல் புனைவின் வகைப்படும். அவரே ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளரும் ஆகையால், இயல்பாக அப்புனைவு கூடிவந்திருந்தது. சமீபத்திய நாவல் அவருக்குள் இருக்கும் கவிஞனை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறது.

ஏதோ ஒரு தத்துவ நூலைப் படிக்கிறோமோ என்று சந்தேகித்து அட்டையைத் திரும்பப் பார்த்துக்கொள்ள வைக்கிறது ஸ்டேன்லியின் முன்னுரை. மனஒருமிப்பே வாழ்வின் கலையென்று பரிந்துரைக்கிறார் அவர். தற்கணமும் அதில் சிறந்த தன்னுணர்வும் அனைவருக்கும் கைகூடுமா? தற்புனைவு என்றபோதும் அதன் அத்தனை வாக்கியங்களிலும் மெய்யியல் தேட்டம் நிறைந்திருப்பதை வாசகர்களுக்கு முன்னுணர்த்தி, அவர்களை நுண்வாசிப்புக்கு ஆயத்தப்படுத்துவதே முன்னுரையின் நோக்கமாக இருக்க வேண்டும். நாவலை வாசித்து முடிக்கையில், முன்னுரையை நோக்கி மீண்டும் வாசக மனம் ஈர்க்கப்படுகிறது.

குளிர் சூழ்ந்த ஒரு கிறிஸ்துமஸ் தினத்தில் குழந்தைகளால் அலங்கரிக்கப்பட்ட தொழுவக் காட்சியின் முன்னால், காற்றிலாடும் திரைச்சீலையில் தியான நிலையில் புத்தரின் உருவம். இந்தக் கதையின் ஓட்டத்தைக் குறிப்பாலுணர்த்த முயற்சிக்கிறதோ? புதிய ஏற்பாட்டின் யோபு கதையில் தொடங்கும் சிந்தனையோட்டம் கடைசியில் திருமந்திரத்தில் வந்துநிற்கிறது. நாவலின் தொடக்கமாய் அமைந்த சாந்தா அக்காவின் மரணப் படுக்கை, மரணத்தை மட்டுமல்ல, நோய், அழகு, கடவுள் என்று ஒன்று தொட்டு ஒன்றாகக் கேள்விகேட்டு நீள்கிறது. கடைசியில் மாற்கு அண்ணன் நோய்ப் படுக்கையிலிருந்து மீண்டெழுந்து, இழந்த நினைவுகளைத் திரும்பப் பெறுவதோடு நாவல் முடிவுக்கு வருகிறது.

தன்னை யாரென்று கண்டுகொள்ளத் தவிக்கும் ஜெரியின் வாழ்வியல் பயணமே இந்நாவல். தனது வாழ்வையே தத்துவப் பார்வையில் தரிசிக்கும் முயற்சி. நாகையிலிருந்து சாதி மதம் பாராமல் காதல் திருமணம் செய்துகொண்டு சென்னைக்குத் தப்பிவந்த பெற்றோருக்குப் பிறந்த கடைக்குட்டிச் செல்லம் அவன். நாகப்பட்டினம் ஒருகாலத்தில் பௌத்தம் செழித்தோங்கி வளர்ந்த இடம் என்பதை இந்நாவலில் வெறும் தகவலாய் மட்டும் கடந்துபோக முடியவில்லை. தந்தைக்குப் பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் ‘ஸ்டோர் கீப்பர்’ வேலை. அயனாவரம் தொகுப்பு வீடு ஒன்றில் குடும்பம் தங்கியிருக்கிறது. அய்யனார்புரம்தான் அயனாவரமாகியிருக்கிறது; புறா நகரமான டவ் டவுன், டவுட்டன் ஆகியிருக்கிறது என்று வடசென்னையின் பூர்வ சரித்திரமாகவும் விரிகிறது இந்தப் புனைவு.

பால்யத்தின் நீங்கா நினைவுகளாய் அன்றைய பெரம்பூர் ரயில்வே காலனி வாழ்க்கையும் நாகை கிராமங்களின் தினசரி வாழ்க்கையும் உயிர்பெறுகின்றன. காற்றாடி விடுவது, திருப்பதி குடைகள் யானைக்கவுனியைத் தாண்டும் திருவிழாக் கொண்டாட்டங்கள், அயனாவரத்திலும் புரசைவாக்கத்திலும் அப்போது வாழ்ந்திருந்த ஆங்கிலோ இந்தியர்கள், கிறிஸ்தவ சமய நிறுவனங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களின் நடைமுறைகள், அரிசிப் பஞ்சம், தண்ணீர்ப் பஞ்சம், நெருக்கடி நிலை என ஐம்பது ஆண்டுகளின் வடசென்னை வாழ்வு இந்நாவலில் துல்லியமாகப் பதிவாகியிருக்கிறது.

இப்போது அனல் மின்நிலையத்தாலும் எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகளாலும் உரத் தொழிற்சாலைகளாலும் நீர்நிலைகள் மாசுற்று, இயற்கை எழில் குலைந்து, புள்ளினங்கள் திசைமாறிப்போன காலத்தின் கோலத்தையும் சொல்லத் தவறவில்லை. அதற்கெதிராகக் களம்கண்ட இளைஞர் குழுக்களின் செயல்பாடுகள், அவர்களை அமைதிப்படுத்த ஆலை நிர்வாகங்கள் கையாண்ட உத்திகள் ஆகியவற்றையும்கூட இந்நாவல் பதிவுசெய்கிறது. ஒரு ஆராய்ச்சியாளராக மேற்கொள்ளும் பணிகளுக்கு இடையிலும், வேதி முரண் விளைவுகள் போன்று ஆங்காங்கே தத்துவப் புள்ளிகள் எட்டிப் பார்க்கின்றன.

பால்யத்தின் நினைவுகள் என்றாலே அதிதுல்லியம் இயல்பாகிவிடும்போல. வாசிப்பவர் மனதிலும் பால்யத்தின் நினைவைக் கிளர்த்தக்கூடியவையாக இந்த விவரணைகள் அமைந்திருக்கின்றன. இளமையின் நினைவுகளில் பொதிந்துகிடக்கும் நிகழ்வுகளின் அர்த்தங்கள் நாட்பட நாட்படத்தான் விளங்கத் தொடங்குகிறது. சாந்தா அக்கா வீட்டில் இருக்கையில் வெளியிலிருந்து வந்து விழுந்த சாக்லேட்களைப் போல. நினைவுகளில் பால்ய காலத்தின் சந்தோஷம் மட்டுமின்றி சினிமா, காதல், கவிதைகள், போராட்டம் என்று தன்னை மறந்திருந்த இளமைக் காலத்தின் நாட்பட்ட ரணங்களும்கூட மேலெழுகின்றன.

இரண்டு வார்த்தைகளிலும்கூட நிறைவான வாக்கியங்களை ஸ்டேன்லியால் எழுத முடிந்திருக்கிறது. என்றாலும், இந்நாவலில் உரையாடலுக்கான வாய்ப்புகளைத் தவறவிட்டிருக்கிறாரோ என்று எண்ணவும் தோன்றுகிறது. கடைசியாய், கானகத்தைச் சரணடையும் நாவலின் நிறைவு, வானப்ரஸ்தத்தின் குறியீடாகவும் தோற்றம் காட்டுகிறது. வள்ளுவர், வள்ளலார், குமரகுருபரர், அருணகிரிநாதர், பாஷோ, ஸ்டீபன் பாட்ச்செலர் என்று தன்னையறிதலுக்கு வழிகாட்டும் ஞானிகளின் வரிகளெல்லாம் இடையிடையே வந்துபோகின்றன. மொத்தத்தில், இந்தப் புத்தகத்தைப் புனைவாக எழுதப்பட்ட மிகவும் அந்தரங்கமான தியான வழிகாட்டி என்றும்கூட சொல்லலாம்.

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்

வி.அமலன் ஸ்டேன்லி

தமிழினி வெளியீடு

சேலவாயல், சென்னை-51

விலை:ரூ.500

தொடர்புக்கு: 86672 55103

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x